எரேமியா 3
3
1“ஒரு மனிதன் தன் மனைவியை விவாகரத்து செய்தபின்பு,
அவள் அவனைவிட்டு, போய் வேறொரு மனிதனைத் திருமணம் செய்தால்,
முந்திய கணவன் அவளிடம் திரும்பிப் போகலாமோ?
அவ்விதம் செய்தால் நாடு முழுவதும் கறைப்படுத்தப்பட்டுப் போகாதோ?
நீயோ பல காதலர்களுடன் வேசியாக வாழ்ந்திருக்கிறாய்.
இப்பொழுது என்னிடம் திரும்புவாயா?”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
2“நீ மேலே நோக்கி வறண்ட மேடுகளைப் பார்.
நீ வேசித்தனம் செய்யாத இடமேதும் உண்டோ?
பாலைவனத்தின் நாடோடியைப்போல்,
காதலருக்காக தெருவோரங்களில் காத்துக்கொண்டிருந்தாய்.
உன்னுடைய வேசித்தனத்தினாலும்,
கொடுமையினாலும் நாட்டைக் கறைப்படுத்தினாய்.
3இதனால் மழை வீழ்ச்சி தடைசெய்யப்பட்டு,
கோடை மழையும் பெய்யவில்லை.
அப்படியிருந்தும் நீ ஒரு வேசியின் நாணமற்ற தோற்றத்தை உடையவளாய் இருக்கிறாய்;
நீ வெட்கங்கொண்டு நாணமடைய மறுக்கிறாய்.
4இப்பொழுதும் நீ என்னைக் கூப்பிட்டு,
‘என் பிதாவே, என் வாலிப காலத்திலிருந்து என் நண்பராயிருப்பவரே,
5நீர் எப்போதும் கோபமாயிருப்பீரோ?
உமது பெருங்கோபம் என்றைக்கும் நீடித்திருக்குமோ?’ என்று கேட்கவில்லையா?
நீ பேசுவது இப்படித்தான்,
ஆனால் நீ உன்னால் முடிந்த தீமையையெல்லாம் செய்கிறாய்.”
உண்மையற்ற இஸ்ரயேல்
6யோசியா அரசனின் ஆட்சிக்காலத்தில் யெகோவா என்னிடம், “பின்மாற்றமடைந்த இஸ்ரயேல் செய்ததைக் கண்டாயா? அவள் ஒவ்வொரு உயர்ந்த குன்றின்மேலும், ஒவ்வொரு பச்சையான மரத்தின் கீழும் விபசாரம் பண்ணினாள். 7இவை எல்லாவற்றையும் செய்தபின்பாவது என்னிடம் திரும்பி வருவாள் என்று நினைத்தேன். ஆனால் அவளோ திரும்பி வரவில்லை. இதை அவளுடைய சகோதரியான யூதா என்ற துரோகியும் கண்டாள். 8பின்மாற்றமடைந்த இஸ்ரயேலுக்கு அவளுடைய எல்லா விபசாரங்களின் நிமித்தமும், அவளுக்கு விவாகரத்துச் சீட்டைக் கொடுத்து, அவளை அனுப்பிவிட்டேன். இருந்தும் அவளுடைய சகோதரியான யூதா என்ற துரோகி பயப்படாததை நான் கண்டேன். அவளும் வெளியே போய் விபசாரம் பண்ணினாள். 9இஸ்ரயேலின் ஒழுக்கக்கேடு யூதாவுக்கு மிகவும் அற்பமாய் இருந்தபடியால், அவளும் தன் நாட்டைக் கறைப்படுத்தி, கற்களோடும் மரத்தோடும் விபசாரம் பண்ணினாள். 10இப்படியெல்லாம் இருக்கையில் இஸ்ரயேலுடைய சகோதரியான யூதா என்ற துரோகி, வஞ்சகமாய் என்னிடம் திரும்பி வந்தாளேயல்லாமல், முழுமனதுடன் திரும்பி வரவில்லை” என்று யெகோவா அறிவிக்கிறார்.
11யெகோவா என்னிடம் சொன்னதாவது: “துரோகியாகிய யூதாவைப் பார்க்கிலும் உண்மையற்ற இஸ்ரயேல் நீதியுள்ளவளாய் இருக்கிறாள். 12ஆகவே நீ போய் வடக்கு நோக்கி இந்தச் செய்தியைப் பிரசித்தப்படுத்து:
“பின்மாற்றமடைந்த இஸ்ரயேலே, திரும்பி வா” என்று யெகோவா அறிவிக்கிறார்.
“இனி ஒருபோதும் உங்கள்மேல் கோபத்தைக் காண்பிப்பதில்லை,
ஏனெனில் நான் இரக்கமுள்ளவர்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
“நான் என்றைக்கும் கோபமாயிருக்கமாட்டேன்.
13உன் குற்றத்தை மாத்திரம் ஏற்றுக்கொள்.
நீ உன் இறைவனாகிய யெகோவாவுக்கு விரோதமாகக் கலகம் பண்ணினாய்.
ஒவ்வொரு பச்சையான மரத்தின் கீழும்,
அந்நிய தெய்வங்களுடன் சேர்ந்து கேடாக நடந்து
எனக்குக் கீழ்ப்படியாமல் போனாய்”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
14“பின்மாற்றமடைந்த மக்களே! திரும்பிவாருங்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார். “ஏனெனில் நானே உங்கள் கணவன். நான் உங்களை ஒரு பட்டணத்திலிருந்து ஒருவனாகவும், ஒரு வம்சத்திலிருந்து இருவராகவும் தெரிந்தெடுத்து, உங்களைச் சீயோனுக்குக் கொண்டுவருவேன். 15என் இருதயத்திற்கு ஏற்ற மேய்ப்பர்களை உங்களுக்குத் தருவேன். அவர்கள் அறிவோடும், விவேகத்தோடும் உங்களை வழிநடத்துவார்கள். 16அந்நாட்களில் நாட்டில் உங்கள் எண்ணிக்கை மிகுதியாய் பெருகியிருக்கும்” என்று யெகோவா அறிவிக்கிறார். அப்பொழுது மனிதர்கள், யெகோவாவினுடைய உடன்படிக்கைப் பெட்டியைப்பற்றி ஒருபோதும் பேசமாட்டார்கள். அதைப்பற்றி ஒருபோதும் அவர்கள் எண்ணுவதோ நினைப்பதோ இல்லை; அதைக் குறித்த மனவருத்தமும் அவர்களுக்கு ஏற்படாது. அதுபோல வேறொன்று செய்யப்படுவதும் இல்லை. 17அக்காலத்தில் எல்லா மக்களும் எருசலேமை யெகோவாவினுடைய சிங்காசனம் என்று கூறுவார்கள். யெகோவாவின் பெயரை மகிமைப்படுத்துவதற்காக எருசலேமில் ஒன்று கூடுவார்கள். தொடர்ந்து அவர்கள் தங்களுடைய தீமையான இருதயங்களின் பிடிவாதத்துடன் நடக்கமாட்டார்கள். 18அந்நாட்களில் யூதா வம்சத்தார், இஸ்ரயேல் வம்சத்தாருடன் ஒன்றுசேருவார்கள். அவர்கள் வடதிசையிலுள்ள நாட்டிலிருந்து நான் உங்கள் முற்பிதாக்களுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுத்த நாட்டுக்கு வருவார்கள்.
19“நான்,
“ ‘உங்களை எவ்வளவு சந்தோஷமாக
என் சொந்தப் பிள்ளைகளைப்போல் நடத்துவேன்;
எந்த நாட்டினுடைய உரிமைச்சொத்தைப் பார்க்கிலும்,
மிக நலமான விரும்பத்தக்க ஒரு நாட்டை உங்களுக்குக் கொடுப்பேன்’
என்று நான், நானே சொன்னேன்.
நீங்கள் என்னை, ‘பிதாவே’ என்று அழைப்பீர்கள் என்றும்,
என்னைப் பின்பற்றுவதை விட்டுத் திரும்பமாட்டீர்கள்
என்றும் நான் நினைத்திருந்தேன்.
20ஆனாலும் இஸ்ரயேல் வீட்டாரே, தன் கணவனுக்கு
உண்மையற்று இருக்கும் ஒரு பெண்ணைப்போல,
நீங்கள் எனக்கு உண்மையற்று இருந்தீர்கள்” என்று யெகோவா சொல்கிறார்.
21வறண்ட மேடுகளில் அழுகை கேட்கிறது;
இஸ்ரயேல் மக்களின் அழுகையும் வேண்டுதலுமே அது.
ஏனெனில் அவர்கள் தங்கள் வழிகளைச் சீர்கேடாக்கி
தங்கள் இறைவனாகிய யெகோவாவை மறந்துவிட்டார்கள்.
22“உண்மையற்ற மக்களே திரும்பிவாருங்கள்;
நான் உங்கள் பின்மாற்றத்தைக் குணமாக்குவேன்” என்று யெகோவா சொல்கிறார்.
அதற்கு மக்கள், “ஆம்,
நீரே எங்கள் இறைவனாகிய கர்த்தராயிருப்பதால் நாங்கள் உம்மிடம் வருவோம்.
23குன்றுகளிலும் மலைகளிலும் செய்துவந்த விக்கிரக வழிபாட்டின் ஆரவாரம்,
உண்மையில் ஒரு ஏமாற்றுச் செயலே;
இஸ்ரயேலின் இரட்சிப்பு நிச்சயமாக எங்கள்
இறைவனாகிய யெகோவாவிலேயே இருக்கிறது.
24எங்கள் வாலிப காலத்திலிருந்து,
எங்கள் முற்பிதாக்களின் உழைப்பின் பலனான ஆட்டு மந்தைகளையும்,
மாட்டு மந்தைகளையும், அவர்களின் மகன்களையும்,
மகள்களையும் வெட்கக்கேடான தெய்வங்கள் விழுங்கிவிட்டன.
25நாங்கள் எங்கள் வெட்கத்திலேயே கிடப்போம்,
எங்கள் அவமானம் எங்களை மூடிக்கொள்ளட்டும்.
நாங்களும் எங்கள் முற்பிதாக்களும் எங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு
எதிராகப் பாவம் செய்திருக்கிறோம்,
நாங்கள் எங்கள் இளமைப் பருவத்திலிருந்து இன்றுவரை
எங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குக்
கீழ்ப்படிந்திருக்கவில்லை” என்றார்கள்.
Currently Selected:
எரேமியா 3: TCV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.