YouVersion Logo
Search Icon

எரேமியா 24

24
இரண்டு அத்திப்பழக் கூடைகள்
1யூதாவின் அரசன் யோயாக்கீமின் மகன் யெகொனியா, பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரால் நாடுகடத்தப்பட்டான். அவனுடன் யூதாவின் அதிகாரிகளும், தச்சர்களும், தொழில் வல்லுநர்களும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு கொண்டுபோகப்பட்டார்கள். பின்பு யெகோவா எனக்கு ஆலயத்திற்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த அத்திப்பழங்களுள்ள இரண்டு கூடைகளைக் காட்டினார். 2ஒரு கூடையில் முற்றிப் பழுத்த பழங்களைப் போன்ற மிக நல்ல அத்திப்பழங்கள் இருந்தன. மற்றொரு கூடையில் அழுகிப்போனதால் சாப்பிட முடியாத அத்திப்பழங்கள் இருந்தன.
3அப்பொழுது யெகோவா என்னிடம், “எரேமியாவே, நீ என்ன காண்கிறாய்” என்று கேட்டார்.
அதற்கு நான், “அத்திப்பழங்களைக் காண்கிறேன்; நல்ல அத்திப்பழங்கள் மிகவும் நல்லவையாக இருக்கின்றன. அழுகிப்போனவைகளோ சாப்பிட முடியாத அளவு கெட்டுப்போயும் இருக்கின்றன” என்றேன்.
4பின்பு யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது. 5இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: நான் யூதா நாடான இவ்விடத்திலிருந்து, பாபிலோனுக்கு நாடுகடத்தி அனுப்பியவர்களை, இந்த நல்ல அத்திப்பழங்களைப்போல் நல்லவர்களாக எண்ணுகிறேன். 6அவர்களின் நன்மைக்காக நான் அவர்களில் கவனமாயிருந்து, மீண்டும் அவர்களை இந்த நாட்டிற்குக் கொண்டுவருவேன்; நான் அவர்களைக் கட்டி எழுப்புவேன். இடித்துத் தள்ளமாட்டேன். அவர்களை நாட்டுவேன், வேருடன் பிடுங்கமாட்டேன். 7நானே யெகோவா என்று அவர்கள் அறிந்துகொள்ளத்தக்க இருதயத்தை நான் அவர்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் என்னிடம் திரும்புவார்கள். அப்பொழுது அவர்கள் என் மக்களாகவும், நான் அவர்களுடைய இறைவனாகவும் இருப்பேன்.
8“ ‘ஆனால் அழுகி சாப்பிட முடியாமல் கெட்டுப்போன அத்திப்பழங்களைப் போலவே யூதாவின் அரசனான சிதேக்கியாவையும் அவனுடைய அதிகாரிகளையும், எருசலேமில் தப்பியிருப்பவர்களையும் நடத்துவேன். அவர்கள் இந்நாட்டில் தங்கினாலும், எகிப்தில் வசித்தாலும் அப்படியே நடத்துவேன். 9பூமியிலுள்ள எல்லா அரசுகளுக்கும் நான் அவர்களை அருவருப்பாகவும், வெறுக்கத்தக்கவர்களாகவும் ஆக்குவேன். நான் எங்கெங்கே அவர்களைத் துரத்திவிட்டேனோ, அங்கெல்லாம் அவர்களை நிந்தையாகவும், பழமொழியாகவும், பழிச்சொல்லாகவும், சாபமாகவும் ஆக்குவேன். 10நான் அவர்களுக்கும், அவர்களுடைய முற்பிதாக்களுக்கும் கொடுத்த நாட்டிலிருந்து அவர்கள் அழியும்வரை அவர்களுக்கு விரோதமாக வாளையும், பஞ்சத்தையும், கொள்ளைநோயையும் அனுப்புவேன் என்கிறார்’ என்றான்.”

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in