YouVersion Logo
Search Icon

நியாயாதிபதிகள் 13

13
சிம்சோனின் பிறப்பு
1திரும்பவும் இஸ்ரயேலர் யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்தார்கள்; எனவே யெகோவா அவர்களை நாற்பது வருடங்களுக்குப் பெலிஸ்தியரின் கைகளில் ஒப்புக்கொடுத்தார்.
2சோரா ஊரில் தாண் வம்சத்தைச் சேர்ந்த மனோவா, என்ற பெயருடைய ஒருவன் இருந்தான். அவனுடைய மனைவி பிள்ளை பெறாது மலடியாயிருந்தாள். 3யெகோவாவின் தூதனானவர் அவள்முன் தோன்றி, “நீ பிள்ளை பெறாது மலடியாயிருக்கிறாய், ஆனால் நீ கருத்தரித்து ஒரு மகனைப் பெறப்போகிறாய். 4இப்பொழுதும் நீ திராட்சை இரசமோ அல்லது மதுபானமோ குடிக்காதே. அசுத்தமான ஒன்றையும் சாப்பிடாமலும் இருக்கும்படி கவனமாயிரு. 5ஏனெனில் நீ கருத்தரித்து ஒரு மகனைப் பெறுவாய். அவன் தலையில் சவரக்கத்தி படக்கூடாது; ஏனெனில் அவன் பிறந்ததுமுதல் இறைவனுக்கென்று வேறுபிரிக்கப்பட்ட நசரேயனாயிருக்க வேண்டும்; அவனே பெலிஸ்தியரின் கையினின்று இஸ்ரயேலரை விடுவிக்கத் தொடங்குவான்” என்று சொன்னார்.
6அப்பொழுது அந்த பெண் தன் கணவனிடத்திற்குச் சென்று அவனிடம், “இறைவனின் மனிதன் ஒருவர் என்னிடம் வந்தார். அவர் இறைத்தூதனைப்போல் பார்க்கப் பயமாயிருந்தது. நான் அவரிடம் நீர் எங்கேயிருந்து வந்தீரென்று கேட்கவுமில்லை. அவர் எனக்கு அவரது பெயரைச் சொல்லவுமில்லை. 7ஆனால் அவர் என்னிடம், நீ கருத்தரித்து ஒரு மகனைப் பெறுவாய்; அதனால் இன்றிலிருந்து நீ திராட்சை இரசமோ மதுபானமோ குடிக்கவும், தீட்டானவற்றைச் சாப்பிடவும் வேண்டாம். ஏனெனில் அவன் பிறந்ததுமுதல் இறக்கும்வரை இறைவனுக்கென்று வேறுபிரிக்கப்பட்ட நசரேயனாயிருப்பான்” என்று சொன்னார் என்றாள்.
8அப்பொழுது மனோவா யெகோவாவிடம் மன்றாடி, “யெகோவாவே! நீர் எங்களிடம் அனுப்பிய இறைவனின் மனிதனைத் திரும்பவும் எங்களிடம் அனுப்பும். அவர் வந்து பிறக்கப்போகும் பிள்ளையை எப்படி வளர்க்கவேண்டும் என்பதைப்பற்றி எங்களுக்குக் கற்பிக்கட்டும்” என்று வேண்டிக்கொண்டான்.
9இறைவன் மனோவாவின் வேண்டுதலைக் கேட்டு, திரும்பவும் வயலில் இருந்த அவனுடைய மனைவியிடத்திற்கு இறைவனின் தூதனானவர் வந்தார். ஆனால் அவளது கணவன் மனோவா அவளுடனிருக்கவில்லை. 10அந்தப் பெண் தன் கணவனிடத்திற்கு விரைவாக ஓடிச்சென்று, “அன்று எனக்குமுன் தோன்றிய அந்த மனிதன் இன்றும் வந்திருக்கிறார்” என்றாள்.
11அப்பொழுது மனோவா எழுந்து தனது மனைவியின் பின்னே சென்றான். அவன் அந்த மனிதனிடத்திற்கு வந்ததும், “என் மனைவியுடன் பேசியது நீர்தானா?” என்றான்.
அதற்கு அவர், “நான்தான்” என்றார்.
12அப்பொழுது மனோவா, “உம்முடைய வாக்கு நிறைவேறும்பொழுது பிறக்கும் பிள்ளையின் வாழ்க்கைக்கும் அவன் செய்யவேண்டிய வேலைக்கும் ஒழுங்குமுறை என்ன?” என்று கேட்டான்.
13அதற்கு யெகோவாவின் தூதனானவர், “உனது மனைவியிடம் நான் சொன்னவற்றையெல்லாம் அவள் செய்யவேண்டும். 14அவள் திராட்சைச் செடியிலிருந்து பெறும் எதையும் சாப்பிடக்கூடாது. திராட்சை இரசத்தையோ அல்லது வேறு மதுபானத்தையோ குடிக்கவோ, அசுத்தமானவற்றைச் சாப்பிடவோ கூடாது. நான் இட்ட கட்டளைகள் எல்லாவற்றையும் அவள் கடைபிடிக்க வேண்டும்” என்று பதிலளித்தார்.
15அப்பொழுது மனோவா யெகோவாவின் தூதனானவரிடம், “நாங்கள் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை உமக்காகச் சமைக்கும்வரை, நீர் எங்களுடன் இருக்கவேண்டும் என்று விரும்புகிறோம்” என்றான்.
16அதற்கு யெகோவாவின் தூதனானவர், “நீ என்னைத் தடுத்தாலும் நான் உனது உணவில் எதையும் சாப்பிடமாட்டேன். ஆனால் நீ தகன காணிக்கையை ஆயத்தம் செய்தால், அதை யெகோவாவுக்கு செலுத்து” என்றார். மனோவாவோ அவரை யெகோவாவின் தூதனானவர் என்று உணராமல் இருந்தான்.
17அப்பொழுது மனோவா யெகோவாவின் தூதனானவரிடம், “நீர் சொன்னது நிறைவேறும்பொழுது உம்மை மகிமைப்படுத்துவதற்கு உம்முடைய பெயர் என்ன?” என விசாரித்தான்.
18அதற்கு யெகோவாவினுடைய தூதன், “ஏன் என்னுடைய பெயரை கேட்கிறாய்? அதை உன்னால் விளங்கிக்கொள்ள முடியாதிருக்கும்” எனப் பதிலளித்தார். 19அப்பொழுது மனோவா ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும், அதோடு தானியக் காணிக்கைகளையும் கொண்டுவந்து கல்லின் மேல்வைத்து யெகோவாவுக்குப் பலியாகக் கொடுத்தான். மனோவாவும், அவன் மனைவியும் பார்த்துக்கொண்டிருக்கையில் ஒரு வியக்கத்தக்க செயலை யெகோவா செய்தார். 20பலிபீடத்திலிருந்து நெருப்பு ஜூவாலை வானத்தை நோக்கி எழும்புகையில் யெகோவாவின் தூதனானவர் அந்த நெருப்பு ஜூவாலையில் மேலெழுந்து சென்றார். இதைக் கண்ட மனோவாவும் அவன் மனைவியும் தரையில் முகங்குப்புற கீழே விழுந்தார்கள். 21அதற்குபின் மனோவாவுக்கும், அவன் மனைவிக்கும் யெகோவாவின் தூதனானவர் காணப்படாததால், வந்தவர் யெகோவாவின் தூதனானவர் என்று மனோவா உணர்ந்து கொண்டான்.
22மனோவா தன் மனைவியிடம், “நாம் இறைவனைக் கண்டோமே. ஆகையால் நாம் சாகப்போகிறோம்” என்றான்.
23ஆனால் அவனுடைய மனைவி, “யெகோவா எங்களைக் கொலைசெய்ய எண்ணியிருந்தால், எங்களிடமிருந்து தகனக் காணிக்கையையும், தானியக் காணிக்கையையும் ஏற்றிருக்கமாட்டார். இவற்றையெல்லாம் எங்களுக்குக் காண்பிக்கவும், இதை எங்களுக்குச் சொல்லியிருக்கவும் மாட்டார்” என்று சொன்னாள்.
24அந்தப் பெண் ஒரு மகனைப் பெற்று அவனுக்கு, “சிம்சோன்” என்று பெயரிட்டாள். அவன் வளர்ந்தான்; யெகோவா அவனை ஆசீர்வதித்தார். 25அவன் சோராவுக்கும், எஸ்தாவோலுக்கும் இடையிலுள்ள தாணின்#13:25 தாணின் என்பது மஹானேஷ் என்று அர்த்தம். முகாமில் இருக்கும்போது யெகோவாவின் ஆவியானவர் அவனைத் தூண்டத்தொடங்கினார்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in