YouVersion Logo
Search Icon

ஏசாயா 58

58
உண்மை உபவாசம்
1“உரத்த சத்தமிடு; அடக்கிக்கொள்ளாதே!
எக்காளத்தைப்போல் உனது குரலை உயர்த்து.
என் மக்களுக்கு அவர்களுடைய மீறுதல்களையும்,
யாக்கோபின் குடும்பத்துக்கு அவர்களுடைய பாவங்களையும் அறிவி.
2அவர்கள் நாள்தோறும் என்னைத் தேடுகிறார்கள்,
அவர்கள் என் வழிகளை அறிவதில் ஆவலுள்ளவர்கள்போல் காட்டுகிறார்கள்.
இறைவனின் கட்டளைகளைக் கைவிடாமல்,
சரியானவற்றையே செய்யும் ஒரு நாட்டைப்போல், அவர்கள் தங்களைக் காண்பிக்கிறார்கள்.
அவர்கள் நேர்மையான தீர்மானங்களை என்னிடம் கேட்கிறார்கள்;
இறைவனை நெருங்கிவர விரும்புகிறார்கள்.
3‘நாங்கள் உபவாசித்தோம், என்று அவர்கள் கேட்கிறார்கள்.
நீர் அதைக் காணவில்லையா?
நாங்கள் ஏன் எங்களைத் தாழ்த்தினோம்;
நீர் அதைக் கவனிக்கவில்லையா?’
“நீங்கள் உபவாசிக்கும் நாளில் நீங்கள் விரும்பியதையே செய்து,
உங்கள் வேலைக்காரரையும் கடுமையாய் நடத்துகிறீர்கள்.
4உங்கள் உபவாசம் வாக்குவாதத்திலும், சண்டையிலும்,
கொடுமையான கைகளினால் ஒருவரையொருவர் அடித்துக்கொள்வதிலுமே முடிகிறது.
நீங்கள் இன்று உபவாசம் செய்வதுபோல் உபவாசித்தால்,
உங்கள் குரல் பரலோகத்திற்கு எட்டுமென எதிர்பார்க்க முடியாதே.
5இப்படியான உபவாசத்தையா நான் தெரிந்துகொண்டேன்?
அது ஒருவன் தன்னைத் தாழ்த்திக்கொள்ளுவதற்கான நாள் மட்டுமோ?
உபவாசம் என்பது துக்கவுடையில்,
சாம்பலில் கிடந்து நாணல் புல்லைப்போல் தலைகுனிவது மட்டுமா?
இதையா யெகோவா ஏற்றுக்கொள்ளும் உபவாசம் என்றும்
அவருக்கு ஏற்ற நாள் என்றும் சொல்கிறீர்கள்.
6“நான் தெரிந்துகொண்ட உபவாசம் என்பது:
அநீதியின் சங்கிலிகளைத் தளர்த்துவதும்,
நுகத்தின் கயிறுகளை அவிழ்ப்பதும்,
ஒடுக்கப்பட்டோரை விடுதலையாக்குவதும்,
ஒவ்வொரு நுகத்தையும் உடைத்துப் போடுவதும் அல்லவோ?
7பசியுற்றோருடன் உங்கள் உணவைப் பகிர்ந்துகொள்வதும்,
வீடற்ற ஏழைகளுக்கு இருப்பிடம் கொடுப்பதும்,
உடையில்லாதவனைக் கண்டால் அவனுக்கு உடை கொடுப்பதும்,
உன் சொந்த உறவினர்களிடமிருந்து
உன் முகத்தைத் திருப்பிக்கொள்ளாதிருப்பதும் அல்லவோ?
8அப்பொழுது உனது வெளிச்சம் விடியற்காலை வெளிச்சத்தைப்போல் பிரகாசிக்கும்;
நீ விரைவில் சுகவாழ்வு துளிர்க்கும்.
உங்கள் நீதி உங்கள்முன் செல்லும்,
யெகோவாவின் மகிமை உங்களைப் பின்னாலே காக்கும்.
9அப்பொழுது நீ கூப்பிடுவாய், யெகோவா பதிலளிப்பார்;
நீ உதவிகேட்டு அழுவாய், ‘நான் இங்கே இருக்கிறேன்’ என்று அவர் சொல்வார்.
“ஒடுக்கும் நுகத்தையும், பிழையைச் சுட்டிக்காட்டும் விரலையும்,
தீமையின் பேச்சையும் நீக்கிவிடு.
10பசியுற்றோருக்கு உன்னையே கொடுத்து,
ஒடுக்கப்பட்டோரின் தேவையைத் திருப்தியாக்கு.
அப்பொழுது இருளில் உன்னுடைய வெளிச்சம் உதிக்கும்,
உன்னுடைய இரவும் மத்தியானத்தைப்போல் இருக்கும்.
11யெகோவா உன்னை எப்பொழுதும் வழிநடத்துவார்;
வெயிலால் பாதிக்கப்பட்ட இடங்களிலும் அவர் உன் தேவைகளைத் திருப்தி செய்து,
உன் எலும்புகளை பெலனுள்ளதாக்குவார்.
நீ நன்றாக நீர்ப்பாய்ச்சிய தோட்டத்தைப் போலவும்,
வற்றாத நீரூற்றைப் போலவும் இருப்பாய்.
12உன் மக்கள் பாழடைந்த இடிபாடுகளைத் திருப்பிக் கட்டுவார்கள்;
பழங்கால அஸ்திபாரங்களையும் கட்டி எழுப்புவார்கள்.
நீ உடைந்த மதில்களைத் திருத்திக் கட்டுகிறவன் என்றும்,
குடியிருப்பதற்கு வீதிகளைப் புதுப்பிக்கிறவன் என்றும் அழைக்கப்படுவாய்.
13“ஓய்வுநாளின் சட்டங்களை மீறுவதிலிருந்து உன் கால்களை விலக்கு;
என் பரிசுத்த நாளில் நீ உனக்கு விரும்பிய விதமாய் நடவாதே.
ஓய்வுநாளான யெகோவாவினுடைய பரிசுத்த நாளை,
மகிழ்ச்சியின் நாளென்றும் மேன்மையின் நாளென்றும் அழை.
உன் சொந்த வழியில் போகாமலும், நீ விரும்பியவாறு செய்யாமலும்,
வீண் வார்த்தைகளைப் பேசாமலும் அந்நாளை மேன்மைப்படுத்து.
14அப்பொழுது நீ யெகோவாவிடம் மகிழ்ச்சிகொள்வாய்,
நாட்டின் உயர்ந்த இடங்களில் நான் உன்னை ஏறியிருக்கும்படி செய்வேன்.
உன் தகப்பன் யாக்கோபின் சுதந்திரத்தில் நீ களிப்படையும்படி செய்வேன்.”
யெகோவாவின் வாயே இதைச் சொல்லிற்று.

Currently Selected:

ஏசாயா 58: TCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in