YouVersion Logo
Search Icon

ஏசாயா 55

55
தாகமுள்ளோருக்கு அழைப்பு
1“ஓ! தாகமாய் இருக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும்
நீங்கள் நீர்நிலைகளுக்கு வாருங்கள்;
பணமில்லாதவர்களே, நீங்களும் வாருங்கள்,
வாங்கி உட்கொள்ளுங்கள்.
வாருங்கள், பணமுமின்றி விலையுமின்றி
திராட்சரசமும் பாலும் வாங்குங்கள்.
2உணவுக்கு உதவாதவற்றின்மேல் பணத்தை ஏன் செலவிடுகிறீர்கள்?
திருப்தி அளிக்காதவற்றின்மேல் ஏன் பிரயாசப்படுகிறீர்கள்?
கேளுங்கள், நான் சொல்வதைக் கேளுங்கள், நல்லதையே சாப்பிடுங்கள்.
அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுமையான உணவின் நிறைவுகளினால் மகிழும்.
3காது கொடுத்துக் கேளுங்கள், என்னிடம் வாருங்கள்;
உங்கள் ஆத்துமா வாழ்வதற்காக நான் சொல்வதைக் கேளுங்கள்.
நான் உங்களுடன் ஒரு நித்திய உடன்படிக்கையைச் செய்வேன்;
நான் தாவீதுக்கு வாக்களித்த எனது உண்மையான அன்பை உங்களுக்குக் கொடுப்பேன்.
4இதோ, நான் அவனை மக்கள் கூட்டங்களுக்கு ஒரு சாட்சியாகவும்,
மக்கள் கூட்டங்களுக்குத் தலைவனாகவும், தளபதியாகவும் அவனை வைத்தேன்.
5ஆகையால் நிச்சயமாகவே நீங்கள் அறியாத நாடுகளுக்கு அழைப்பாய்,
உங்களை அறியாத பிறநாடுகள் உங்களிடம் விரைந்து வருவார்கள்.
ஏனெனில் இஸ்ரயேலின் பரிசுத்தரும்
இறைவனுமான உங்கள் யெகோவா
உங்களைச் சிறப்பினால் அலங்கரித்துள்ளார்.”
6அவரைக் கண்டுகொள்ள வாய்ப்புள்ள வேளையில் யெகோவாவைத் தேடுங்கள்;
அவர் அருகிலிருக்கையில் அவரைக் கூப்பிடுங்கள்.
7கொடியவன் தன் வழிகளையும்,
தீயவன் தன் எண்ணங்களையும் கைவிடட்டும்;
அவன் யெகோவாவிடம் திரும்பட்டும், அவர் அவனுக்கு இரக்கம் காட்டுவார்,
எங்கள் இறைவனிடம் திரும்பட்டும், அவர் அவனை தாராளமாக மன்னிப்பார்.
8“என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்களல்ல;
உங்கள் வழிகள் என் வழிகளுமல்ல”
என்று யெகோவா சொல்லுகிறார்.
9“பூமியைப் பார்க்கிலும் வானங்கள் உயர்ந்தனவாய் இருக்கின்றது போலவே,
என் வழிகளும் உங்கள் வழிகளைப் பார்க்கிலும் உயர்ந்தவையாய் இருக்கின்றன.
என் எண்ணங்களும் உங்கள் எண்ணங்களிலும் மேலானவை.
10மழையும் உறைபனியும் வானத்திலிருந்து கீழே இறங்குகின்றன;
அவை பூமிக்கு நீர்ப்பாய்ச்சி,
அதில் முளையை எழும்பப்பண்ணி வளரச் செய்யாமல்
அவை திரும்பிச் செல்வதில்லை.
எனவே அவை விதைப்பவனுக்கு விதையையும்,
உண்பவனுக்கு உணவையும் கொடுக்கின்றன.
11என் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தையும் அப்படியே இருக்கிறது:
நான் விரும்பியவற்றைச் செய்து,
நான் அதை அனுப்பிய நோக்கத்தை நிறைவேற்றாமல்
அது வெறுமையாய் என்னிடம் திரும்பி வராது.
12நீங்கள் பாபிலோனிலிருந்து மகிழ்ச்சியுடன் வெளியேறி
சமாதானத்துடன் வழிநடத்தப்படுவீர்கள்;
மலைகளும் குன்றுகளும்
உங்கள் முன்பாக ஆர்ப்பரித்துப் பாடும்;
வெளியின் மரங்கள் யாவும்
கைகொட்டும்.
13முட்செடிகளுக்குப் பதிலாக தேவதாரு மரங்களும்,
காஞ்சொறிக்குப் பதிலாக மிருதுச் செடிகளும் முளைக்கும்.
இது யெகோவாவுக்கு புகழ்ச்சியாகவும்,
அழியாத நித்திய
அடையாளமாகவும் இருக்கும்.”

Currently Selected:

ஏசாயா 55: TCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in