YouVersion Logo
Search Icon

ஏசாயா 40

40
இறைவனின் மக்களுக்கு ஆறுதல்
1என் மக்களை ஆற்றுங்கள், தேற்றுங்கள்,
என உங்கள் இறைவன் சொல்கிறார்.
2எருசலேமுடன் தயவாகப் பேசுங்கள்,
அவளிடம், “அவளது கடும் உழைப்பு முடிவடைந்தது;
அவளுடைய பாவத்திற்கு நிவாரணம் கொடுத்து முடிந்துவிட்டது;
அவள் தனது எல்லா பாவங்களுக்காகவும்
இரட்டிப்பான தண்டனையை யெகோவாவின் கரங்களிலிருந்து
அனுபவித்து விட்டாள்” என்று அவளுக்குப் பிரசித்தப்படுத்துங்கள்.
3ஒருவரின் குரல் கூப்பிடுகிறது:
“பாலைவனத்தில் யெகோவாவுக்கு
வழியை ஆயத்தப்படுத்துங்கள்;
வனாந்திரத்திலே நமது இறைவனுக்கு
பிரதான வீதியொன்றை நேராய் அமையுங்கள்.
4ஒவ்வொரு பள்ளத்தாக்கும் உயர்த்தப்படும்,
ஒவ்வொரு மலையும் குன்றும் தாழ்த்தப்படும்,
மேடுபள்ளம் நிறைந்த நிலம் சமமாக்கப்படும்,
கரடுமுரடான இடங்கள் சீராக்கப்படும்.
5யெகோவாவின் மகிமை வெளிப்படுத்தப்படும்;
மனுக்குலம் யாவும் ஒன்றாய் அதைக் காணும்.
யெகோவாவின் வாயே இதைப் பேசியிருக்கிறது.”
6“உரத்துச் சொல்” என்கிறது ஒரு குரல்.
அதற்கு, “நான் எதைச் சொல்லுவேன்?” என்றேன்.
“எல்லா மனிதரும் புல்லைப் போன்றவர்கள்,
அவர்களின் மகிமை எல்லாம் வயல்வெளியின் பூக்களைப் போன்றன.
7யெகோவாவின் சுவாசம் அவைகளின்மேல் வீசுகிறபோது புல் வாடுகிறது,
பூக்களும் உதிர்கின்றன;
நிச்சயமாக மக்களும் புல்லாகவே இருக்கிறார்கள்.
8புல் வாடுகிறது, பூக்கள் உதிர்கின்றன,
ஆனால், நமது இறைவனின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்து நிற்கிறது.”
9சீயோனுக்கு நற்செய்தி கொண்டுவருபவனே,
நீ உயர்ந்த மலையொன்றில் ஏறு.
எருசலேமுக்கு நற்செய்தி கொண்டுவருபவனே,
நீ குரலை எழுப்பிக் கூக்குரலிடு.
பயப்படாதே, குரலை எழுப்பு;
“இதோ உங்கள் இறைவன்!”
என்று யூதாவின் பட்டணங்களுக்குச் சொல்.
10இதோ, ஆண்டவராகிய யெகோவா வல்லமையோடு வருகிறார்;
அவருடைய புயமே அவருக்காக ஆளுகை செய்யும்.
அவர் அளிக்கும் வெகுமதியும் அவருடன் இருக்கிறது,
அவர் தரும் பிரதிபலனும் அவருடனே வருகிறது.
11அவர் மேய்ப்பனைப்போல் தன் மந்தையை மேய்க்கிறார்:
அவர் செம்மறியாட்டுக் குட்டிகளை ஒன்றுசேர்த்து கைகளில் ஏந்தி,
மார்போடு அணைத்துக்கொண்டு செல்கிறார்;
அவர் குட்டிகளுடன் இருக்கும் செம்மறியாடுகளைக் கனிவாக நடத்துகிறார்.
12கடல் நீரைத் தமது உள்ளங்கையால் அளந்து,
வானங்களை சாண் அளவாய்க் கணித்தவர் யார்?
பூமியின் புழுதியை மரக்காலால் அளந்தவன் யார்?
அல்லது மலைகளை நிறைகோலாலும்,
குன்றுகளையும் தராசாலும் நிறுத்தவர் யார்?
13யெகோவாவின் மனதை புரிந்துகொண்டு,
அவரது ஆலோசகனாக இருந்து அவருக்கு அறிவுறுத்தியவன் யார்?
14யெகோவா தமது அறிவு தெளிவுபெற யாரிடம் ஆலோசனை கேட்டார்?
சரியான வழியை அவருக்குக் போதித்தவன் யார்?
அவருக்கு அறிவைக் போதித்து,
விளக்கத்தின் பாதையைக் காட்டியவன் யார்?
15உண்மையாகவே நாடுகள் வாளியிலிருந்து விழும்
தண்ணீர்த் துளியைப் போலிருக்கின்றன;
அவர்கள் தராசில் படிந்துள்ள தூசியைப்போல் கருதப்படுகிறார்கள்;
அவர் தீவுகளை தூசியைப்போல நிறுக்கிறார்.
16லெபனோன் பலிபீட நெருப்புக்குப் போதாது.
அங்குள்ள மிருகங்கள் தகன பலிக்கும் போதாது.
17எல்லா நாடுகளும் அவர் முன்னிலையில் ஒன்றுமில்லாதவர்கள்போல் இருக்கின்றனர்.
அவர்கள் அவரால் வெறுமையிலும் வெறுமையானவர்களாகவும்,
பெருமதியற்றவர்களாகவும் கருதப்படுகிறார்கள்.
18இப்படியிருக்க, நீங்கள் இறைவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்?
எந்த சாயலுக்கு அவரை ஒப்பிடுவீர்கள்?
19விக்கிரகத்தை ஒரு கைவினைஞன் வார்க்கிறான்,
கொல்லன் அதைத் தங்கத்தால் மூடி,
அதற்காக வெள்ளி மாலைகளைச் செய்கிறான்.
20அத்தகைய காணிக்கையைச் செலுத்தமுடியாத ஏழையோ,
உழுத்துப்போகாத மரத்தைத் தெரிவு செய்கிறான்.
அதைச் செதுக்கி, சரிந்து வீழ்ந்து போகாத விக்கிரகத்தைச் செய்யும்படி
திறமைவாய்ந்த ஒரு சிற்பியைத் தேடுகிறான்.
21நீங்கள் அறியவில்லையோ?
நீங்கள் கேள்விப்படவில்லையோ?
ஆதியில் இருந்து உங்களுக்குச் சொல்லப்படவில்லையோ?
பூமி படைக்கப்பட்ட காலத்திலிருந்தே நீங்கள் விளங்கிக்கொள்ளவில்லையோ?
22அவர் பூமியின் வட்டத்தின்மேல் தன் அரியணையில் வீற்றிருக்கிறார்,
அதன் மக்கள் வெட்டுக்கிளிகளைப்போல் இருக்கிறார்கள்.
அவர் வானங்களை மூடுதிரையைப்போல் விரித்து,
அவைகளை ஒரு குடியிருக்கும் கூடாரத்தைப்போல் அமைத்திருக்கிறார்.
23அவர் இளவரசர்களைத் தாழ்வு நிலைக்குத் தள்ளுகிறார்;
உலக ஆளுநர்களையும் பெறுமதியற்றவர்களாக்குகிறார்.
24அவர்கள் நாட்டப்பட்ட உடனேயே,
அவர்கள் விதைக்கப்பட்ட உடனேயே,
அவர்கள் நிலத்தில் வேரூன்றிய உடனேயே இறைவன் அவர்கள்மேல் ஊத,
அவர்கள் வாடிப்போகிறார்கள்.
சுழல் காற்றும் பதர்களைப்போல் அவர்களை வாரிக்கொண்டுபோகிறது.
25“நீங்கள் என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்?
அல்லது எனக்கு நிகரானவர் யார்?” என்று பரிசுத்தர் கேட்கிறார்.
26கண்களை உயர்த்தி மேலே நோக்குங்கள்:
இவைகளையெல்லாம் படைத்தவர் யார்?
நட்சத்திர சேனையை ஒவ்வொன்றாக வெளிக்கொணர்ந்து,
அவை ஒவ்வொன்றையும் பேரிட்டு அழைக்கும் அவரே.
அவருடைய மிக வல்லமையாலும்,
மகா பலத்தினாலும் அவைகளில் ஒன்றுகூட தவறுவதில்லை.
27“என் நிலைமை யெகோவாவுக்கு மறைவாயிருக்கிறது;
இறைவன் எனக்குரிய நீதியைக் கண்டும் காணாதிருக்கிறார்”
என்று யாக்கோபே நீ ஏன் சொல்கிறாய்?
இஸ்ரயேலே, ஏன் முறையிடுகிறாய்?
28நீங்கள் அறியவில்லையோ?
நீங்கள் கேள்விப்படவில்லையோ?
யெகோவாவே நித்திய இறைவன்,
பூமியின் எல்லைகளைப் படைத்தவரும் அவரே.
அவர் களைத்துப் போவதுமில்லை, சோர்ந்துபோவதுமில்லை.
அவரின் ஞானத்தை யாராலும் அளவிடமுடியாது.
29அவர் களைப்புற்றோருக்கு பெலன் கொடுக்கிறார்;
பெலவீனருக்கு வலிமையைக் கூட்டுகிறார்.
30இளைஞர் களைத்து சோர்ந்துபோவார்கள்,
வாலிபர் இடறி விழுவார்கள்.
31ஆனால், யெகோவாவிடம் நம்பிக்கையோடேக் காத்திருப்போர்
தங்கள் பெலனைப் புதுப்பித்துக்கொள்வார்கள்.
அவர்கள் கழுகுகளைப்போல் சிறகுகளை விரித்து உயரே பறப்பார்கள்;
அவர்கள் ஓடுவார்கள், சோர்வடையமாட்டார்கள்;
அவர்கள் நடப்பார்கள், களைப்படையமாட்டார்கள்.

Currently Selected:

ஏசாயா 40: TCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in