YouVersion Logo
Search Icon

ஏசாயா 38

38
எசேக்கியாவின் வியாதி
1அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு சாகும் தருவாயில் இருந்தான். ஆமோஸின் மகனான இறைவாக்கினன் ஏசாயா அவனிடம் போய், “யெகோவா கூறுவது இதுவே: நீர் சாகப்போகிறீர்; பிழைக்கமாட்டீர். ஆகையால் உன் வீட்டுக் காரியங்களை ஒழுங்குபடுத்தும் என்கிறார்” என்றான்.
2எசேக்கியா தன் முகத்தை சுவரின் பக்கமாகத் திருப்பி யெகோவாவிடம் மன்றாடினான். 3அவன், “யெகோவாவே, நான் உமக்குமுன் உண்மையுள்ளவனாய் நடந்து, பயபக்தியாய் முழுமனதுடன் உமது பார்வையில் நலமானதையே செய்தேன் என்பதை நினைவுகூரும்” என்று எசேக்கியா மனங்கசந்து அழுதான்.
4அப்பொழுது யெகோவாவின் வார்த்தை ஏசாயாவுக்கு வந்தது. 5“நீ எசேக்கியாவிடம் போய் சொல்லவேண்டியதாவது: ‘உன் தகப்பனாகிய தாவீதின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே, நான் உனது வேண்டுதலைக் கேட்டேன்; உன் கண்ணீரையும் கண்டேன். உன் வாழ்நாட்களோடு இன்னும் பதினைந்து வருடங்களைக் கூட்டுவேன். 6அசீரிய அரசனின் கையிலிருந்து உன்னையும், இந்தப் பட்டணத்தையும் விடுவிப்பேன். இந்தப் பட்டணத்துக்கு ஆதரவாக இருப்பேன்.
7“ ‘யெகோவா தான் வாக்களித்ததை நிறைவேற்றுவார் என்பதற்கு யெகோவா உனக்குத் தரும் அடையாளம் இதுவே: 8ஆகாஸின் நேரம்பார்க்கும் படிவரிசையில் சூரியனின் நிழலைப் பத்துப்படி பின்னடையச் செய்வேன்’ என்றார்.” அப்படியே சூரிய ஒளியும் பத்துப்படி பின்னடைந்தது.
9யூதாவின் அரசன் எசேக்கியா நோயுற்றுக் குணமடைந்ததும் பின்வரும் கவிதையை எழுதினான்:
10“நான் என் வாழ்வின் சிறந்த பருவத்தில்
மரண வாசலுக்குப் போகவேண்டுமோ?
எனது மிகுதி வருடங்களைப் பறிகொடுக்க வேண்டுமோ?”
11“வாழ்வோரின் நாட்டில்
நான் மீண்டும் யெகோவாவை காண்பதில்லை.
மனிதகுலத்தை இனியொருபோதும் பார்ப்பதில்லை,
அல்லது இவ்வுலகில் வாழ்வோருடன் இருப்பதில்லை.
12மேய்ப்பனின் கூடாரத்தைப்போல என் வீடு#38:12 வீடு அல்லது வாழ்க்கை
என்னிடமிருந்து பிடுங்கி எடுக்கப்பட்டிருக்கிறது.
நெசவாளனைப்போல என் வாழ்வை நான் சுருட்டி விட்டேன்,
அவரும் என்னைத் தறியிலிருந்து வெட்டிவிட்டார்;
காலையிலிருந்து இரவுக்குள் எனக்கு முடிவுகட்டுவீர்.
13நான் விடியும்வரை பொறுமையாய்க் காத்திருந்தேன்;
ஆனால் என் எலும்புகளையெல்லாம் சிங்கத்தைப்போல் நொறுக்கி விட்டார்;
காலையிலிருந்து இரவுக்குள் எனக்கு முடிவுகட்டுவீர்.
14நான் சிட்டுக்குருவியைப் போலவும் நாரைப் போலவும் கூவினேன்,
துயரப்படும் புறாவைப்போல் விம்முகிறேன்.
உதவிவேண்டி நான் வானங்களை நோக்கியபோது, என் கண்கள் பெலவீனமாயின.
யெகோவாவே, நான் ஒடுக்கப்படுகிறேன், எனக்கு உதவிசெய்ய வாரும்” என்று சொன்னேன்.
15ஆனால் என்னால் என்ன சொல்லமுடியும்?
அவர் என்னிடம் பேசினார்; அவரே இதைச் செய்திருக்கிறார்.
என் ஆத்தும துயரத்தின் நிமித்தம்
நான் எனது காலமெல்லாம் தாழ்மையாய் நடப்பேன்.
16யெகோவாவே, மனிதர் இவைகளாலேயே வாழ்கிறார்கள்;
எனது ஆவியும் இவற்றிலே வாழ்வைக் காண்கிறது.
நீரே என்னை சுகப்படுத்தி
வாழச் செய்தீர்.
17நிச்சயமாக, என் நன்மைக்காகவே
இப்படியான வேதனையை நான் அனுபவித்தேன்.
உமது அன்பினால்தான்
நான் அழிவின் குழிக்குள் போகாதபடி நீர் என்னை வைத்திருக்கிறீர்.
என் பாவங்களையெல்லாம்
உமது முதுகிற்குப் பின்னாலே போட்டுவிட்டீர்.
18பாதாளம் உம்மைத் துதிக்காது,
மரணம் உமக்குத் துதிபாடாது;
குழியில் இறங்குவோர்
உமது உண்மையை எதிர்பார்க்க முடியாது.
19இன்று நான் உம்மைத் துதிப்பதுபோல,
வாழ்பவர்கள், வாழ்பவர்களே உம்மைத் துதிப்பார்கள்.
பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு
உமது உண்மையைப் பற்றிச் சொல்கிறார்கள்.
20யெகோவா என்னை இரட்சிப்பார்;
நாம் நம் வாழ்நாள் எல்லாம்
யெகோவாவினுடைய ஆலயத்தில்
இசைக்கருவிகளுடன் துதிபாடுவோம்.
21ஏற்கெனவே ஏசாயா நோயுற்றிருந்த எசேக்கியாவுக்கு, “அத்திப்பழ அடையொன்றைத் தயாரித்து, அதைக் கட்டியின்மீது பற்றுப்போடுங்கள்; அப்பொழுது அவர் சுகமடைவார்” என சொல்லியிருந்தான்.
22அப்பொழுது எசேக்கியா, “நான் யெகோவாவின் ஆலயத்திற்குப் போவேன் என்பதற்கு அடையாளம் என்ன?” என்று கேட்டிருந்தான்.

Currently Selected:

ஏசாயா 38: TCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in