YouVersion Logo
Search Icon

ஏசாயா 23

23
தீருவைப் பற்றிய இறைவாக்கு
1தீருவைப் பற்றிய ஒரு இறைவாக்கு:
தர்ஷீசின் கப்பல்களே, புலம்புங்கள்!
தீரு அழிந்துபோனது;
அது வீடோ, துறைமுகமோ இல்லாமல் கிடக்கின்றது.
சைப்பிரஸ் நாட்டிலிருந்து அவர்களுக்கு
ஒரு செய்தி வந்திருக்கிறது.
2தீவின் மக்களே,
கப்பலோட்டிகளில் செல்வந்தரான சீதோனின் வணிகர்களே,
மவுனமாயிருங்கள்.
3சீகோரின் பெருவெள்ளத்தினால்
விளையும் தானியமும்,
நைல் நதியின் அறுவடையுமே தீருவுக்கு வருமானமாயிருந்தது.
தீரு நாடுகளின் சந்தைகூடும் இடமாகியது.
4ஆகையால் சீதோனே, வெட்கப்படு;
“நான் பிரசவ வேதனைப்படவுமில்லை, பிள்ளை பெறவுமில்லை;
நான் இளைஞர்களைப் பராமரிக்கவோ, கன்னிகைகளை வளர்க்கவோ இல்லை”
என்று கடல் சொல்கின்றது;
கடற்கோட்டை பேசுகின்றது.
5செய்தி எகிப்திற்கு எட்டியதும்,
அங்குள்ளவர்கள் தீருவிலிருந்து வந்த
அந்தச் செய்தியின் நிமித்தம் வேதனைப்படுவார்கள்.
6தீவுகளின் மக்களே,
தர்ஷீசுக்குக் கடந்துசென்று அழுது புலம்புங்கள்.
7அந்தப் பழைய பட்டணம் இதுதானா?
களியாட்டத்தில் ஈடுபட்ட உங்கள் பட்டணம் இதுவா?
தூர நாடுகளில் குடியிருக்கும்படி,
தன் மக்களை அனுப்பிய பட்டணம் இதுவா?
8தீருவுக்கு விரோதமாக இவ்வாறு திட்டமிட்டது யார்?
அது மகுடங்களை வழங்கியதே,
தீருவின் வர்த்தகர்கள் இளவரசர்களாயும்,
அதன் வியாபாரிகள் பூமியில் பெயர் பெற்றவர்களாயும் இருந்தனரே!
9சேனைகளின் யெகோவாவே இதைத் திட்டமிட்டார்;
எல்லாச் சிறப்பின் பெருமையையும் சிறுமைப்படுத்துவதற்கும்,
பூமியில் புகழ்ப்பெற்ற அனைவரையும் தாழ்த்துவதற்குமே இவ்வாறு செய்தார்.
10தர்ஷீசின் மகளே,
நைல் நதியைப்போல் உன் நாட்டின் வழியாகப் போ;
ஏனெனில் இனி ஒருபோதும் உனக்குத் துறைமுகம் இருக்காது.
11யெகோவா தனது கரத்தைக் கடலின் மேலாக நீட்டி,
அதன் அரசுகளை நடுங்கச் செய்துள்ளார்.
கானானின் கோட்டைகளை அழிக்கும்படி
அவர் கட்டளையிட்டிருக்கிறார்.
12மேலும் அவர், “கன்னியாகிய சீதோனின் மகளே,
இப்போது நசுக்கப்பட்டுக் கிடக்கிறாயே!
இனி உனக்கு ஒருபோதும் களியாட்டம் இல்லை.
“நீ எழுந்து சைப்பிரஸுக்குப் போ,
அங்கேயும் நீ ஆறுதலைக் காணமாட்டாய்” என்றார்.
13கல்தேயரின் நாட்டைப் பார்,
அதன் மக்கள் இப்பொழுது ஒரு பொருட்டாய் எண்ணப்படாதிருக்கிறார்களே!
இப்பொழுது அசீரியர் அந்நாட்டைப்
பாலைவனப் பிராணிகளின் இருப்பிடமாக்கி விட்டார்கள்.
முற்றுகைக் கோபுரங்களை எழுப்பி,
அதன் கோட்டைகளை வெறுமையாக்கிப்
பாழிடமாக்கி விட்டார்கள்.
14தர்ஷீசின் கப்பல்களே, அலறுங்கள்;
உங்கள் கோட்டை அழிக்கப்பட்டது!
15அந்த நாளிலே, தீரு எழுபது வருடங்களுக்கு மறக்கப்பட்டுவிடும்; இதுவே ஒரு அரசனின் ஆயுட்காலம். ஆனாலும் அந்த எழுபது வருடங்களின் முடிவில், தீருவின் நிலைமை வேசியின் பாடலில் உள்ளபடியே இருக்கும்:
16“மறக்கப்பட்ட வேசியே,
வீணையை எடு, பட்டணத்தைச்சுற்றி நட;
உன்னை நினைவுகூரும்படியாக
வீணையை நன்றாக வாசித்து, அநேக பாடல்களைப் பாடு.”
17யெகோவா தீருவுக்கு எழுபது வருட முடிவில் தண்டனை கொடுப்பார். அவள் மறுபடியும் தனது வேசித்தன வாழ்வுக்கே திரும்புவாள். பூமியிலுள்ள எல்லா அரசுகளுடனும் தன் வேசித்தொழிலைச் செய்வாள். 18ஆயினும் அவளது இலாபமும், வருமானமும் யெகோவாவுக்கென்று ஒதுக்கி வைக்கப்படும். அவை சேமித்து வைக்கப்படவோ, பதுக்கி வைக்கப்படவோ மாட்டாது. அவளுடைய அந்த இலாபம் யெகோவாவுக்கு முன்பாக இருப்போருக்கான போதிய அளவு உணவுக்கும், சிறந்த உடைகளுக்குமே செலவிடப்படும்.

Currently Selected:

ஏசாயா 23: TCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in