YouVersion Logo
Search Icon

ஓசியா 5

5
இஸ்ரயேலுக்கு எதிராக நியாயத்தீர்ப்பு
1“ஆசாரியர்களே, நீங்கள் இதைக் கேளுங்கள்;
இஸ்ரயேல் வீட்டாரே கவனியுங்கள்;
அரச குடும்பத்தாரே, செவிகொடுங்கள்;
இந்த நியாயத்தீர்ப்பு உங்களுக்கெதிரானதே.
ஏனெனில் நீங்கள் மிஸ்பாவிலே கண்ணியாகவும்,
தாபோரிலே விரிக்கப்பட்ட வலையாகவும் இருக்கிறீர்கள்.
2கலகக்காரர்கள் கொலைசெய்வதில் வேரூன்றி இருக்கிறார்கள்.
நான் அவர்கள் எல்லோரையும் தண்டித்துத் திருத்துவேன்.
3எப்பிராயீமைப்பற்றிய எல்லாவற்றையும் நான் அறிவேன்;
இஸ்ரயேலும் என்னிடமிருந்து மறைந்திருக்கவில்லை.
ஏனெனில் எப்பிராயீமே, நீ இப்பொழுது வேசித்தனத்திற்கு திரும்பிவிட்டாய்;
இஸ்ரயேல் தீட்டுப்பட்டிருக்கிறது.
4“அவர்களுடைய செயல்கள் அவர்களை
அவர்களுடைய இறைவனிடம் திரும்புவதற்கு விடாதிருக்கிறது.
வேசித்தன ஆவி அவர்களின் இருதயத்தில் இருக்கிறது;
யெகோவாவைப்பற்றிய அறிவு அவர்களுக்கில்லை.
5இஸ்ரயேலின் அகந்தை அவர்களுக்கெதிராக சாட்சி கூறுகிறது;
இஸ்ரயேலும் எப்பிராயீமும் தங்கள் பாவத்தில் இடறி விழுகிறார்கள்;
அவர்களுடன் யூதாவுங்கூட இடறி விழுகிறது.
6அவர்கள் தங்கள் ஆட்டு மந்தைகளுடனும், மாட்டு மந்தைகளுடனும்
யெகோவாவை தேடிப் பலியிட வருவார்கள்;
ஆனால் அவர்கள் அவரைக் காணமாட்டார்கள்;
ஏனெனில் அவர் அவர்களைவிட்டு விலகினார்.
7அவர்கள் யெகோவாவுக்கு உண்மையற்றவர்களாய் இருக்கிறார்கள்;
அவர்களுடைய பிள்ளைகளும் எனக்குரியவர்களல்ல.
இப்பொழுதும் அவர்களுடைய அமாவாசைப் போலிக் கொண்டாட்டங்கள்
அவர்களையும் அவர்களுடைய வயல்களையும் விழுங்கிப்போடும்.
8“கிபியாவில் எக்காளத்தையும்,
ராமாவிலே கொம்பு வாத்தியத்தையும் ஊதுங்கள்.
பெத் ஆவெனில் போர் முழக்கமிடுங்கள்;
பென்யமீனே, நீ முன்னேசெல்.
9தண்டனையின் நாளில்
எப்பிராயீம் பாழாய் விடப்படும்.
நிச்சயமாய் நடக்கப் போகிறதையே,
நான் இஸ்ரயேல் கோத்திரங்கள் மத்தியில் பிரசித்தப்படுத்துகிறேன்.
10யூதாவின் தலைவர்கள்
எல்லைக் கற்களை ஒதுக்குகிறவர்களுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.
என் கோபத்தை வெள்ளத்தைப்போல்
அவர்கள்மேல் ஊற்றுவேன்.
11எப்பிராயீம் ஒடுக்கப்பட்டு,
நியாயத்தீர்ப்பில் நசுக்கப்படுவான்.
ஏனெனில் அவன் விக்கிரகங்களைப் பின்பற்றுவதையே நோக்கமாய் கொண்டிருக்கிறான்.
12அதனால் நான் எப்பிராயீமுக்கு அந்துப் பூச்சியைப்போலவும்,
யூதாவின் வீட்டாருக்கு அழுகல் நோய்போலவும் இருப்பேன்.
13“எப்பிராயீம் தன் வியாதியையும்,
யூதா தன் புண்களையும் கண்டபோது,
எப்பிராயீம் அசீரியாவின் பக்கம் திரும்பி,
அதன் பெரிய அரசனிடம் உதவி கேட்டனுப்பினான்.
ஆனால் உனக்கு சுகமாக்கவும்,
உனது புண்களை ஆற்றவும் அவனால் முடியாது.
14ஏனெனில் எப்பிராயீமுக்கு நான் சிங்கம் போலவும்,
யூதாவுக்கு பெருஞ்சிங்கம் போலவும் இருப்பேன்.
நான் அவர்களை துண்டுகளாய் கிழித்து தூக்கிக்கொண்டு போவேன்;
ஒருவரும் அவர்களைத் தப்புவிக்கமாட்டார்கள்.
15எனவே அவர்கள் தங்கள் குற்றத்தை ஒத்துக்கொண்டு,
என் முகத்தைத் தேடுமட்டும்
நான் என்னுடைய இருப்பிடத்திற்குத் திரும்பிப் போவேன்.
அவர்கள் தங்கள் அவலத்தில்
என்னை வாஞ்சையாய்த் தேடுவார்கள்.”

Currently Selected:

ஓசியா 5: TCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in