ஓசியா 13
13
இஸ்ரயேலுக்கு எதிரான யெகோவாவின் கோபம்
1முன்பு எப்பிராயீம் பேசியபோது மனிதர் நடுங்கினார்கள்;
அவன் இஸ்ரயேலில் மேன்மை அடைந்திருந்தான்.
ஆனால் பாகாலை வணங்கிய குற்றத்தினால் அழிந்துபோனான்.
2இப்பொழுதோ அவர்கள் அதிகமதிகமாகப் பாவம் செய்கிறார்கள்,
அவர்கள் தங்கள் வெள்ளியினாலேயே தங்களுக்கென விக்கிரகங்களைச் செய்கிறார்கள்.
திறமையாய் வடிவமைக்கப்பட்ட அந்த உருவச்சிலைகள் யாவும்
கைவினைஞனின் வேலைப்பாடாய் இருக்கின்றன.
இந்த மக்களைக் குறித்து,
“அவர்கள் மனித பலிகளைச் செலுத்துகிறார்கள்.
கன்றுக்குட்டி விக்கிரகத்தை முத்தமிடுகிறார்கள் எனச் சொல்லப்படுகிறது.”
3ஆகவே, அவர்கள் காலை நேர மூடுபனிபோலவும்,
அதிகாலைப் பனிபோலவும் மறைந்துபோவார்கள்,
சூடடிக்கும் களத்திலிருந்து பறக்கும் பதரைப்போலவும்
புகைபோக்கியினூடாகப் போகும் புகையைப்போலவும் இருப்பார்கள்.
4“உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த
உங்கள் இறைவனாகிய யெகோவா நானே;
என்னைத்தவிர வேறு இறைவனையும்,
என்னைத்தவிர வேறு இரட்சகரையும் நீங்கள் அறியவேண்டாம்.
5மிகவும் வெப்பம் நிறைந்த தேசமான
பாலைவனத்தில் நான் அவர்களைப் பாதுகாத்தேன்.
6நான் அவர்களுக்கு உணவு கொடுத்தபோது,
அவர்கள் திருப்தியடைந்தார்கள்; அவர்கள் திருப்தியடைந்ததும் பெருமை கொண்டார்கள்.
அதன்பின் அவர்கள் என்னை மறந்துவிட்டார்கள்.
7ஆகவே நான் அவர்களுக்கு சிங்கத்தைப்போல் இருப்பேன்;
அவர்களுடைய வழியின் அருகே சிறுத்தையைப்போல் பதுங்கியிருப்பேன்.
8தன் குட்டியை இழந்த கரடியைப்போல்
நான் அவர்களைத் தாக்கிக் கிழிப்பேன்;
சிங்கத்தைப்போல் நான் அவர்களை விழுங்குவேன்,
காட்டுமிருகம் அவர்களைக் கிழித்துப்போடும்.
9“இஸ்ரயேலே, உனது உதவியாளரான எனக்கு நீ விரோதமாயிருக்கிறபடியால்,
நீ அழிவை உண்டாக்கிக்கொண்டாய்.
10ஆனால் உன்னைக் காப்பாற்றுவதற்கு உன் அரசன் எங்கே?
‘எனக்கு அரசர்களையும் இளவரசர்களையும் கொடும்’
என்று கேட்டாயே.
உன் பட்டணத்திலுள்ள உன்னுடைய அந்த ஆளுநர்கள் எங்கே?
11எனது கோபத்தில் நான் உனக்கு அரசனைக் கொடுத்தேன்;
பின்பு நான் எனது கோபத்தில் அவனை எடுத்துக்கொண்டேன்.
12எப்பிராயீமின் குற்றங்கள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கின்றன;
அவனது பாவங்கள் குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன.
13பிள்ளை பெறுகிற பெண்ணின் வேதனைக்கொத்த வேதனை அவனுக்கு வருகிறது;
அவன் ஞானமில்லாத பிள்ளை;
பிறக்கும் நேரம் வந்தும்
அவன் கருப்பையைவிட்டு வெளியே வராதிருக்கிறான்.
14“நான் அவர்களைப் பாதாளத்தின் வல்லமையினின்றும் விடுவிப்பேன்;
மரணத்தினின்று மீட்டுக்கொள்வேன்.
மரணமே, உன் வாதைகள் எங்கே?
பாதாளமே, உன் அழிவு எங்கே?
“இரக்கத்தை என் கண்களில் நான் காண்பிக்கமாட்டேன்.
15இவன் சகோதரரின் மத்தியில் செழித்தோங்கி இருப்பினும்,
யெகோவாவிடமிருந்து ஒரு கீழ்க்காற்று
பாலைவனத்திலிருந்து பலமாக வீசும்.
அப்பொழுது உனது நீரூற்று வறண்டு,
கிணறுகள் காய்ந்து போகும்.
உனது களஞ்சியத்திலிருந்து உனது திரவியங்கள்
எல்லாம் கொள்ளையடிக்கப்படும்.
16சமாரியர் தமது இறைவனுக்கு எதிராகக் கலகம் செய்தபடியினால்,
அவர்கள் தங்கள் குற்றத்தைச் சுமக்கவேண்டும்.
அவர்கள் வாளுக்கு இரையாவார்கள்;
அவர்களுடைய குழந்தைகள் நிலத்தில் மோதியடிக்கப்படுவார்கள்;
அவர்களுடைய கர்ப்பவதிகள் கிழித்தெறியப்படுவார்கள்.”
Currently Selected:
ஓசியா 13: TCV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.