YouVersion Logo
Search Icon

ஓசியா 1

1
1யூதாவில் உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா ஆகிய அரசர்கள் ஆட்சி செய்த காலங்களில், பெயேரியின் மகன் ஓசியாவிற்கு யெகோவாவின் வார்த்தை வந்தது. அக்காலத்தில் இஸ்ரயேலில் யோவாசின் மகன் யெரொபெயாம் அரசன் ஆட்சிசெய்தான்.
ஓசியாவின் மனைவியும் பிள்ளைகளும்
2ஓசியாவின்மூலம் யெகோவா பேசத் தொடங்கியபோது, யெகோவா அவனிடம், “நீ போய் ஒரு வேசியை மனைவியாகக்கொண்டு, வேசிப் பிள்ளைகளையும் பெற்றுக்கொள். ஏனெனில் நாடு யெகோவாவுக்கு விரோதமாக, மிகக் கேவலமான விபசாரக் குற்றத்தைச் செய்திருக்கிறது என்றார்.” 3அவ்வாறே அவன் போய் திப்லாயிமின் மகள் கோமேர் என்பவளைத் திருமணம் செய்துகொண்டான். அவள் கர்ப்பந்தரித்து, அவனுக்கு ஒரு மகனைப் பெற்றாள்.
4யெகோவா ஓசியாவிடம், “இவனுக்கு யெஸ்ரயேல் என்று பெயரிடு. ஏனெனில் நான் வெகு சீக்கிரமாய் யெஸ்ரயேலில் நடந்த படுகொலைக்காக, யெகூவின் குடும்பத்தைத் தண்டிப்பேன். இஸ்ரயேல் அரசுக்கு ஒரு முடிவைக் கொண்டுவருவேன். 5அந்த நாளில், யெஸ்ரயேல் பள்ளத்தாக்கில் இஸ்ரயேலின் வில்லை முறிப்பேன் என்றார்.”
6மீண்டும் கோமேர் கருவுற்று பெண் குழந்தையொன்றைப் பெற்றாள். அப்பொழுது இறைவன் ஓசியாவிடம், “இவளுக்கு, லோருகாமா எனப் பெயரிடு. ஏனெனில் நான் திரும்பவும் ஒருபோதும் இஸ்ரயேல் குடும்பத்தை மன்னிக்கும்படி அவர்களுக்கு அன்புகாட்டமாட்டேன். 7ஆனால் யூதா குடும்பத்திற்கு நான் அன்புகாட்டுவேன்; நான் அவர்களைக் காப்பாற்றுவேன். ஆயினும், வில்லினாலோ, வாளினாலோ, யுத்தத்தினாலோ, குதிரைகளினாலோ, குதிரைவீரர்களினாலோ அல்ல. அவர்களுடைய இறைவனாகிய யெகோவாவினாலேயே அவர்களைக் காப்பாற்றுவேன் என்றார்.”
8லோருகாமா பால்குடி மறந்தபின், கோமேர் இன்னொரு ஆண்குழந்தையைப் பெற்றாள். 9அப்பொழுது யெகோவா, “அவனுக்கு, லோகம்மீ என்று பெயரிடு; ஏனெனில் நீங்கள் எனது மக்களல்ல, நான் உங்கள் இறைவனுமல்ல.
10“ஆயினும் ஒரு நாள் வரும்; அப்பொழுது இஸ்ரயேலர்கள் அளவிடவோ, எண்ணவோ முடியாத கடற்கரை மணலைப் போலிருப்பார்கள். ‘நீங்கள் என்னுடைய மக்களல்ல’ என்று சொல்லப்பட்ட அதே இடத்தில், அவர்கள், ‘ஜீவனுள்ள இறைவனின் பிள்ளைகள்’ என்று அழைக்கப்படுவார்கள். 11யூதாவின் மக்களும், இஸ்ரயேல் மக்களும் திரும்பவும் ஒன்றிணைக்கப்படுவார்கள். அவர்கள் தங்களுக்கு ஒரே தலைவனை நியமிப்பார்கள். அவர்கள் நாடுகடத்தப்பட்டிருக்கும் நாட்டைவிட்டு வெளியே வருவார்கள். ஏனெனில் யெஸ்ரயேலின் நாள் மேன்மையுள்ளதாயிருக்கும்.

Currently Selected:

ஓசியா 1: TCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in