YouVersion Logo
Search Icon

ஆபகூக் 1

1
1இறைவாக்கினன் ஆபகூக் என்பவனுக்கு வெளிப்படுத்தப்பட்ட இறைவாக்கு.
ஆபகூக்கின் முறைப்பாடு
2யெகோவாவே, நான் எவ்வளவு காலத்திற்கு உதவிகேட்டு உம்மைக் கூப்பிட வேண்டும்?
நீரோ இன்னும் செவிகொடாமல் இருக்கிறீரே.
எவ்வளவு காலத்திற்கு உம்மிடம், “வன்முறை” எனக் கதறவேண்டும்?
இன்னும் காப்பாற்றாமல் இருக்கிறீரே.
3நீர் ஏன் என்னை அநீதியைப் பார்க்கும்படி செய்கிறீர்?
ஏன் அநியாயத்தைச் சகித்துக் கொண்டிருக்கிறீர்?
அழிவும், வன்செயலும் என் முன்னே இருக்கின்றனவே;
போராட்டமும், வாதையும் பெருகுகின்றன.
4ஆதலால் சட்டம் வலுவிழந்துள்ளது,
நீதி நடைமுறைப் படுத்தப்படுவதில்லை.
கொடுமையானவர்கள் நேர்மையானவர்களை ஒடுக்குகிறார்கள்.
அதனால் நீதி புரட்டப்படுகிறதே.
யெகோவாவின் பதில்
5“பிற நாடுகளைக் கவனித்துப் பாருங்கள்,
பார்த்து முழுவதுமாய் வியப்படையுங்கள்.
உங்களுக்குச் சொன்னாலும்,
உங்களால் நம்பமுடியாத ஒரு செயலை,
உங்கள் நாட்களிலேயே நான் செய்யப்போகிறேன்.
6இரக்கமற்றவர்களும்,
மூர்க்கம் கொண்டவர்களுமான பாபிலோனியரை#1:6 பாபிலோனியரை அல்லது கல்தேயர்கள் நான் எழுப்புகிறேன்.
அவர்கள் தங்களுக்குச் சொந்தமல்லாத இருப்பிடங்களைக் கைப்பற்றும்படி,
பூமியெங்கும் அணியணியாய் செல்வார்கள்.
7அவர்கள் பயமும் திகிலும் ஊட்டும் மக்கள்;
அவர்கள் தாங்கள் செய்வதே சரியானதும் சட்டமும் என்று எண்ணுகிறவர்கள்.
தங்கள் சொந்த மேன்மையை மாத்திரமே தேடுகிறவர்கள்.
8அவர்களுடைய குதிரைகள் சிறுத்தைப் புலிகளைவிட வேகமானவை,
சாயங்காலத்தில் நடமாடும் ஓநாயிலும் பயங்கரமானவை.
அவர்களுடைய குதிரைப்படை தலைதெறிக்க ஓடிவரும்;
அவர்களுடைய குதிரைவீரர்களோ, தொலைவிலிருந்து வருகிறார்கள்.
இரைமேல் பாயும் கழுகைப்போல, அவர்கள் வருகிறார்கள்;
9அவர்கள் எல்லோரும் வன்முறையை நாடியே வருகிறார்கள்.
அவர்களுடைய படைகள், பாலைவனக் காற்றுப்போல் முன்னேறிச் சென்று,
கைதிகளை மணலைப்போல வாரிச் சேர்த்துக்கொள்வார்கள்.
10அவர்கள் அரசர்களை கேலிசெய்து,
ஆளுநர்களை ஏளனம் செய்கிறார்கள்.
அரண்செய்த பட்டணங்களையெல்லாம் பார்த்து நகைக்கிறார்கள்;
முற்றுகை அரண்களை மண்ணினால் கட்டி, அவற்றைக் கைப்பற்றுகிறார்கள்.
11காற்றைப்போல் கடந்து போகிறார்கள்.
அவர்கள் தங்கள் சுயபெலத்தையே தெய்வமாகக் கொண்டிருக்கும் குற்றவாளிகள்.”
ஆபகூக்கின் இரண்டாவது முறைப்பாடு
12யெகோவாவே, என் இறைவனே, என் பரிசுத்தமானவரே,
நீர் நித்தியத்தில் இருந்தே உள்ளவர் அல்லவோ?
நாங்களும் அழிக்கப்பட்டுப் போவோமா?
யெகோவாவே, எங்கள் நலனுக்காகத்தானே நியாயத்தீர்ப்பை நிறைவேற்ற
நீர் பாபிலோனியரை நியமித்திருக்கிறீர்;
கன்மலையே, எங்களைத் தண்டிக்க நீர் அவர்களை அமர்த்தியிருக்கிறீர்.
13உம்முடைய கண்கள் அதிக தூய்மையானதால்,
அவை தீமையைப் பார்ப்பதில்லை;
அநியாயத்தை சகிக்க உம்மால் முடியாது.
அப்படியானால் துரோகிகளை நீர் ஏன் சகிக்கிறீர்?
கொடியவர்களான பாபிலோனியர் தங்களைவிட நீதியானவர்களை விழுங்கும்போது
நீர் ஏன் மவுனமாய் இருக்கிறீர்?
14நீர் எங்களை கடலில் உள்ள மீன்களைப் போலவும்,
தலைவனில்லாத கடல் பிராணிகளைப் போலவுமா காண்கிறீர்?
15பாபிலோனியனான கொடிய எதிரிகள் எல்லோரையும் தூண்டிலினால் இழுக்கிறான்.
தனது வலையினால் அவர்களைப் பிடிக்கிறான்.
தனது இழுவை வலையினால் அவர்களை ஒன்றாய் அள்ளிச் சேர்க்கிறான்.
இவ்விதம் அவன் மகிழ்ச்சிகொண்டு களிகூருகிறான்.
16ஆதலினால் அவன் தனது வலைகளுக்குப் பலியிட்டு,
தனது இழுவை வலைக்கு தூபங்காட்டுகிறான்.
ஏனெனில் தனது வலையினால் அவன் செல்வச் சிறப்புடன் வாழ்ந்து
சிறந்த உணவைச் சாப்பிட்டு மகிழ்கிறான்.
17அப்படியாயின் அவன் நாடுகளை இரக்கமின்றி அழிக்க இடங்கொடுப்பீரோ?
அவன் தனது வலையை தொடர்ந்து நிரப்பிக்கொண்டே இருக்கவேண்டுமோ?

Currently Selected:

ஆபகூக் 1: TCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for ஆபகூக் 1