YouVersion Logo
Search Icon

ஆதியாகமம் 40

40
பானம் பரிமாறுகிறவன் மற்றும் அப்பம் சுடுகிறவன்
1சிலகாலம் சென்றபின், எகிப்திய அரசனுக்கு பானம் பரிமாறுகிறவனும், அப்பம் சுடுகிறவனுமான இருவரும் எகிப்தின் அரசனான தங்கள் எஜமானுக்கு எதிராகக் குற்றம் செய்தார்கள். 2ஆதலால் பார்வோன், பானம் பரிமாறுவோருக்குத் தலைவனும் அப்பம் சுடுவோருக்குத் தலைவனுமாயிருந்த அந்த இரு அலுவலர்கள் மேலும் கோபமடைந்தான். 3எனவே யோசேப்பு அடைக்கப்பட்டிருந்த காவலர் தலைவன் வீட்டிலுள்ள சிறையிலேயே பார்வோன் அவர்களையும் அடைத்தான். 4காவலர் தலைவன் அவர்களை யோசேப்பிடம் ஒப்படைக்க, அவன் அவர்களைப் பொறுப்பேற்றான்.
அவர்கள் அங்கே சிலகாலம் இருந்தார்கள். 5எகிப்திய அரசனுக்குப் பானம் பரிமாறுவோரின் தலைவனும், அப்பம் சுடுவோரின் தலைவனும் சிறையிலிருக்கும் போது, ஒரே இரவில் இருவரும் கனவு கண்டார்கள்; ஒவ்வொரு கனவும் வெவ்வேறு கருத்துடையனவாய் இருந்தன.
6மறுநாள் காலை யோசேப்பு அவர்களிடம் வந்தபோது, அவர்கள் கலங்கியிருப்பதைக் கண்டான். 7அவன் தன் தலைவனது வீட்டிலே, தன்னோடு காவலில் வைக்கப்பட்டிருந்த பார்வோனின் அலுவலர்களிடம், “உங்கள் முகம் இன்று ஏன் வாடியிருக்கிறது?” எனக் கேட்டான்.
8அதற்கு அவர்கள், “நாங்கள் இருவரும் கனவு கண்டோம்; அவற்றுக்கு விளக்கம் தர ஒருவருமில்லை” என்றார்கள்.
அதற்கு யோசேப்பு, “விளக்கங்கள் இறைவனுக்குரியதல்லவா? உங்கள் கனவுகளை என்னிடம் சொல்லுங்கள்” என்றான்.
9பானம் பரிமாறுவோருக்குப் பொறுப்பாயிருந்தவன் தன் கனவை யோசேப்புக்குச் சொன்னான். “என் கனவில் எனக்கு முன்பாக ஒரு திராட்சைக்கொடி இருப்பதைக் கண்டேன்; 10அக்கொடியில் மூன்று கிளைகள் இருந்தன. அவை துளிர்த்த உடனே பூ பூத்து, அதன் குலைகள் பழுத்துத் திராட்சைப் பழங்களாயின. 11பார்வோனுடைய பாத்திரம் என் கையில் இருந்தது, நான் திராட்சைப் பழங்களை எடுத்து, அவற்றை அப்பாத்திரத்தில் பிழிந்து, பார்வோனின் கையிலே கொடுத்தேன்” என்றான்.
12அப்பொழுது யோசேப்பு, “கனவின் விளக்கம் இதுவே: மூன்று கிளைகளும் மூன்று நாட்களாகும். 13பார்வோன் மூன்று நாட்களுக்குள் உன்னை விடுவித்து, உன்னை உன் பழைய பதவியில் அமர்த்துவான்; நீ பானம் பரிமாறுகிறவனாய் இருந்தபோது செய்தவாறே, பார்வோனின் பாத்திரத்தை அவன் கையில் கொடுப்பாய்” என்றான். 14மேலும் அவன், “மீண்டும் நீ நல்ல நிலையில் இருக்கும்போது, என்னை நினைவில் வைத்து, எனக்குத் தயவுகாட்டு; பார்வோனிடம் என்னைப்பற்றிச் சொல்லி, இந்த சிறையிலிருந்து என்னை விடுதலையாக்கு. 15ஏனெனில், நான் எபிரெயருடைய நாட்டிலிருந்து பலவந்தமாய் இங்கு கொண்டுவரப்பட்டேன், இங்கேயும் இந்தக் காவல் கிடங்கில் வைக்கப்படுவதற்கு ஏதுவான குற்றம் எதையும் நான் செய்யவில்லை” என்றான்.
16யோசேப்பு அவனுக்கு நல்ல விளக்கம் சொன்னதைக் கேட்ட, அப்பம் சுடுவோரின் பொறுப்பாளன் யோசேப்பிடம், “நானும் ஒரு கனவு கண்டேன்: என் தலையில் அப்பமுள்ள மூன்று கூடைகள் இருந்தன. 17மேலேயிருந்த கூடையில் பார்வோனுக்காகத் தயாரிக்கப்பட்ட பல வகையான உணவுகள் இருந்தன, ஆனால் பறவைகள் என் தலையின் மேலிருந்த கூடையிலிருந்து அப்பங்களைத் தின்றன” என்றான்.
18அதற்கு யோசேப்பு, “உன் கனவுக்குரிய விளக்கம் இதுவே: மூன்று கூடைகளும் மூன்று நாட்களாகும். 19இன்னும் மூன்று நாட்களில் பார்வோன் உன் தலையை வெட்டி, உன்னை மரத்திலே தூக்கிலிடுவான். பறவைகள் உன் சதையைக் கொத்தித் தின்னும்” என்றான்.
20மூன்றாம் நாள் வந்தது, அது பார்வோனின் பிறந்தநாளாய் இருந்தபடியால், அவன் தன் அதிகாரிகளுக்கெல்லாம் ஒரு விருந்து கொடுத்தான். அப்பொழுது அவன், பானம் பரிமாறுவோரின் பொறுப்பாளனையும், அப்பம் சுடுபவர்களின் பொறுப்பாளனையும் வெளியே கொண்டுவந்து, தான் விருந்துக்கு அழைத்திருந்த அதிகாரிகளின்முன் நிறுத்தினான். 21பானம் பரிமாறுவோரின் பொறுப்பாளனை மீண்டும் அவனுடைய பதவியில் அமர்த்தினான்; அவன் முன்போலவே பார்வோனுக்குப் பானம் பரிமாறினான். 22ஆனால் யோசேப்பு அவர்களுக்குச் சொன்ன விளக்கத்தின்படியே, அப்பம் சுடுபவர்களின் பொறுப்பாளனை அவன் தூக்கிலிட்டான்.
23ஆனாலும், பானம் பரிமாறுவோரின் பொறுப்பாளன் யோசேப்பை நினைவில்கொள்ளவில்லை; அவனை மறந்துபோனான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy