YouVersion Logo
Search Icon

ஆதியாகமம் 35

35
யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புதல்
1அதன்பின் இறைவன் யாக்கோபிடம், “நீ பெத்தேலுக்குப் போய் அங்கே குடியிரு, நீ உன் சகோதரன் ஏசாவுக்குப் பயந்து ஓடிப்போகிற வழியில், உனக்குத் தோன்றிய இறைவனுக்கு அவ்விடத்தில் ஒரு பலிபீடத்தைக் கட்டு” என்றார்.
2எனவே யாக்கோபு தன் குடும்பத்தாரிடமும், தன்னோடிருந்த எல்லோரிடமும், “நீங்கள் வைத்திருக்கும் அந்நிய தெய்வங்களை விலக்கிப் போடுங்கள்; உங்களைத் தூய்மைப்படுத்தி, உங்கள் உடைகளை மாற்றுங்கள். 3அதன்பின் வாருங்கள், எல்லோரும் பெத்தேலுக்குப் போவோம். என் துயர நாட்களில் என் மன்றாட்டைக் கேட்டு, நான் போன இடமெல்லாம் என்னுடன் இருந்த இறைவனுக்கு, அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டுவேன்” என்றான். 4அப்பொழுது அவர்கள் தங்களிடமிருந்த அந்நிய தெய்வங்கள் எல்லாவற்றையும், தங்கள் காதணிகளையும் யாக்கோபிடம் கொடுத்தார்கள்; அவன் அவற்றையெல்லாம் சீகேமில் ஒரு பெரிய கர்வாலி மரத்தின்கீழ் புதைத்தான். 5அதன்பின் அவர்கள் அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டார்கள்; அப்பொழுது அவர்களைச் சூழ இருந்த பட்டணத்தின் மக்களின்மேல் இறைவனின் பயங்கரம் இறங்கியது. அதனால் அவர்கள் ஒருவரும் அவர்களைப் பின்தொடரவில்லை.
6யாக்கோபும் அவனுடன் இருந்த மக்கள் எல்லோரும், கானான் நாட்டிலுள்ள லூஸ் என அழைக்கப்பட்ட பெத்தேலுக்கு வந்தார்கள். 7அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, அந்த இடத்தை ஏல்பெத்தேல்#35:7 ஏல்பெத்தேல் என்றால் பெத்தேலின் இறைவன் என்று அர்த்தம். என அழைத்தான். ஏனெனில், அவன் தன் சகோதரனுக்குப் பயந்து ஓடியபோது அவ்விடத்திலேயே இறைவன் தம்மை அவனுக்கு வெளிப்படுத்தினார்.
8ரெபெக்காளின் மருத்துவச்சி தெபோராள் இறந்து, பெத்தேலுக்கு அருகிலுள்ள கர்வாலி மரத்தின்கீழ் அடக்கம்பண்ணப்பட்டாள். அந்த இடத்திற்கு அல்லோன் பாகூத்#35:8 அல்லோன் பாகூத் என்றால் அழுகையின் கர்வாலி மரம் என்று அர்த்தம். எனப் பெயரிடப்பட்டது.
9யாக்கோபு பதான் அராமிலிருந்து திரும்பி வருகையில், இறைவன் மறுபடியும் அவனுக்குத் தோன்றி, அவனை ஆசீர்வதித்தார். 10இறைவன் அவனிடம், “உன் பெயர் யாக்கோபு, ஆனால் நீ இனிமேல் யாக்கோபு என்று அழைக்கப்படாமல் இஸ்ரயேல் என்றே அழைக்கப்படுவாய்” என்று சொல்லி, அவனுக்கு இஸ்ரயேல் என்று பெயரிட்டார்.
11மேலும் இறைவன், “எல்லாம் வல்ல இறைவன் நானே; நீ பலுகி, எண்ணிக்கையில் பெருகுவாயாக. உன்னிலிருந்து ஒரு நாடும், நாடுகளின் கூட்டமும் தோன்றும்; உன் சந்ததியிலிருந்து அரசர்களும் தோன்றுவார்கள். 12ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் நான் கொடுத்த நாட்டை உனக்கும் கொடுக்கிறேன்; உனக்குப்பின் உன் சந்ததிக்கும் இதைக் கொடுப்பேன்” என்றார். 13இதன்பின் இறைவன் அவனுடன் பேசிக்கொண்டிருந்த இடத்திலிருந்து மேலே போய்விட்டார்.
14இறைவன் தன்னுடன் பேசிய அந்த இடத்தில் யாக்கோபு ஒரு கல்தூணை நிறுத்தினான்; அதன்மேல் பானகாணிக்கையையும் எண்ணெயையும் ஊற்றினான். 15இறைவன் தன்னுடன் பேசிய அவ்விடத்துக்கு யாக்கோபு பெத்தேல்#35:15 பெத்தேல் என்றால் இறைவனின் வீடு என்று அர்த்தம். என்று பெயரிட்டான்.
ராகேல் மற்றும் ஈசாக்கின் மரணம்
16அதன்பின் அவர்கள் பெத்தேலில் இருந்து புறப்பட்டுப் போனார்கள். எப்பிராத்தாவிற்கு வர சற்றுத் தூரத்தில் இருக்கும்போதே, ராகேல் பிரசவ வேதனையால் மிகவும் கஷ்டப்பட்டாள். 17அவள் பிரசவத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கையில் மருத்துவச்சி அவளிடம், “பயப்படாதே, உனக்கு இன்னுமொரு மகன் பிறந்திருக்கிறான்” என்றாள். 18மரணத் தருவாயில் அவள் கடைசிமூச்சு விடும்போது பிறந்த மகனுக்கு பெனொனி#35:18 பெனொனி என்றால் என் துக்கத்தின் மகன் என்று அர்த்தம். என்று பெயரிட்டாள். ஆனால் அவன் தகப்பனோ, அவனுக்கு பென்யமீன்#35:18 பென்யமீன் என்றால் என் வலது கையின் மகன் என்று அர்த்தம். என்று பெயரிட்டான்.
19ராகேல் இறந்து பெத்லெகேம் என்னும் எப்பிராத்தாவுக்குப் போகும் வழியிலே அடக்கம்பண்ணப்பட்டாள். 20யாக்கோபு அவள் கல்லறைக்குமேல் ஒரு தூணை நிறுத்தினான். இந்நாள்வரை அத்தூண் ராகேலின் கல்லறையின் அடையாளமாக இருக்கிறது.
21இஸ்ரயேல் திரும்பவும் தொடர்ந்து பயணம் செய்து, மிக்தால் ஏதேருக்கு அப்பால் தன் கூடாரத்தை அமைத்தான். 22யாக்கோபு அப்பிரதேசத்தில் குடியிருக்கையில், ரூபன் தன் தகப்பனின் வைப்பாட்டி பில்காளுடன் உறவுகொண்டான்; அதை இஸ்ரயேல் கேள்விப்பட்டான்.
யாக்கோபுக்கு பன்னிரண்டு மகன்கள் இருந்தார்கள்:
23லேயாளின் மகன்கள்:
யாக்கோபின் மூத்த மகனான ரூபன்,
சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன் என்பவர்கள்.
24ராகேலின் மகன்கள்:
யோசேப்பு, பென்யமீன் என்பவர்கள்.
25ராகேலின் பணிப்பெண் பில்காள் பெற்ற மகன்கள்:
தாண், நப்தலி என்பவர்கள்.
26லேயாளின் பணிப்பெண் சில்பாள் பெற்ற மகன்கள்:
காத், ஆசேர் என்பவர்கள்.
பதான் அராமில் யாக்கோபுக்குப் பிறந்த மகன்கள் இவர்களே.
27யாக்கோபு கீரியாத் அர்பாவுக்கு அருகேயிருந்த எப்ரோன் எனப்படும் மம்ரேயில் வசித்த தன் தகப்பன் ஈசாக்கின் வீட்டுக்குத் திரும்பிவந்தான். ஆபிரகாமும் ஈசாக்கும் முன்பு அவ்விடத்திலேயே குடியிருந்தனர். 28ஈசாக்கு நூற்று எண்பது வருடங்கள் உயிரோடிருந்தான். 29பின்பு ஈசாக்கு தன் இறுதி மூச்சைவிட்டு இறந்தான்; பூரண ஆயுள் உள்ளவனாய் தன் முன்னோருடன் சேர்க்கப்பட்டான். அவனுடைய மகன்களான ஏசாவும், யாக்கோபும் அவனை அடக்கம்பண்ணினார்கள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in