YouVersion Logo
Search Icon

கலாத்தியர் 4

4
1நான் சொல்வது என்னவென்றால், உரிமையாளனாய் இருக்கும் ஒருவன், முழுச் சொத்துக்கும் உரிமையாளனாய் இருந்தாலும், அவன் சிறுபிள்ளையாய் இருக்கும்வரை, ஒரு அடிமைக்கும் அவனுக்கும் வித்தியாசம் இருக்கும். 2அவனுடைய தகப்பன் நியமித்த காலம் வரும்வரைக்கும் அவன் பாதுகாவலர்கள், நிர்வாகிகள் ஆகியோருக்குக் கீழ்ப்பட்டே இருக்கிறான். 3இவ்விதமாய் நாமும் பிள்ளைகளாய் இருந்தபோது, உலகத்தின் அடிப்படை போதனைகளுக்கு அடிமைகளாய் இருந்தோம். 4ஆனால் காலம் நிறைவேறியபொழுது, இறைவன் தம்முடைய மகனை மோசேயின் சட்டத்துக்குக் கீழ்ப்பட்டவராய், ஒரு பெண்ணிடத்தில் பிறந்தவராய் அனுப்பினார். 5இறைவன் மோசேயின் சட்டத்துக்குக் கீழ்ப்பட்டிருந்தவர்களை மீட்டு, நாம் பிள்ளைகளுக்குரிய முழு உரிமைகளையும் பெற்றுக்கொள்ளும்படியே கிறிஸ்து அனுப்பப்பட்டார். 6நீங்கள் அவருடைய பிள்ளைகளாய் இருப்பதனால், “அப்பா, பிதாவே!” என்று கூப்பிடத்தக்க இறைவன் தமது மகனுடைய ஆவியை, உங்களுடைய இருதயங்களுக்குள் அனுப்பியிருக்கிறார். 7ஆகவே இனியும் நீங்கள் அடிமைகள் அல்ல, மகன்களாய் இருக்கிறீர்கள்; நீங்கள் மகன்களாய் இருப்பதனால், இறைவன் உங்களை உரிமையாளர்களாயும் ஆக்கியிருக்கிறார்.
கலாத்தியர்களைக் குறித்த அக்கறை
8முன்பு நீங்கள் இறைவனை அறியாதிருந்தபோது, இயல்பாகவே இறைவன் இல்லாதவைகளுக்கு அடிமைகளாயிருந்தீர்கள். 9ஆனால் இப்பொழுதோ, நீங்கள் இறைவனை அறிந்திருக்கிறீர்கள். அதைவிட, இறைவனால் நீங்கள் அறியப்பட்டும் இருக்கிறீர்கள். இப்படியிருக்க, உலகத்தின் அடிப்படை போதனைகளுக்கும் பலவீனமும் கேவலமுமானவற்றிற்குத் திரும்புகிறீர்களே! அது ஏன்? அவைகளுக்கு மீண்டும் அடிமைகளாக விரும்புகிறீர்களா? 10நீங்கள் விசேஷ நாட்களையும், மாதங்களையும், பருவகாலங்களையும், வருடங்களையும் கைக்கொண்டு நடக்கிறீர்களே. 11நான் உங்களுக்காகப் பட்ட பாடுகள் எல்லாம் வீணாகப் போய்விட்டதோ என்று பயப்படுகிறேன்.
12பிரியமானவர்களே, என்னைப்போலாகுங்கள் என்று உங்களைக் கேட்கிறேன், ஏனெனில் நானும் உங்களைப்போல் ஆனேன். நீங்கள் எனக்கு எவ்விதத் தீமையும் செய்யவில்லை. 13நீங்கள் அறிந்திருக்கிறபடி என் வியாதியின் காரணமாகவே, முதலில் நான் உங்களுக்கு நற்செய்தியை பிரசங்கித்தேன். 14என்னுடைய வியாதி உங்களுக்குப் பல பாடுகளை உண்டாக்கிய போதுங்கூட, நீங்கள் என்னை வெறுப்புடன் நடத்தவும் இல்லை, என்னைப் புறக்கணிக்கவும் இல்லை. ஆனால் என்னை இறைவனின் தூதனைப்போல் வரவேற்றீர்கள். கிறிஸ்து இயேசுவை வரவேற்பதுபோல் வரவேற்றீர்கள் என்றுங்கூடச் சொல்வேன். 15அப்போது இருந்த அந்த ஆசீர்வாதம், இப்போது எங்கே போயிற்று? இயலுமானால், உங்கள் கண்களைக்கூட பிடுங்கி எனக்குக் கொடுத்திருப்பீர்கள் என்று நானே சாட்சி கூறுவேன். 16சத்தியத்தை உங்களுக்குச் சொன்னதினாலே, நான் இப்பொழுது உங்களுக்குப் பகைவன் ஆனேனா?
17இப்பொழுது சிலர் உங்களைத் தங்கள் பக்கமாக இழுத்துக்கொள்ள ஆர்வம் காட்டுகிறார்களே, ஆனால் அவர்களுடைய நோக்கங்களோ நல்லவை அல்ல. அவர்கள் எங்களிடமிருந்து உங்களைப் பிரித்து, நீங்களும் அவர்கள் சார்பாய் இருப்பதையே விரும்புகிறார்கள். 18நோக்கம் நல்லதென்றால், அதில் தீவிர ஆர்வம் காண்பிப்பது நல்லதுதான். அவ்வித ஆர்வத்தை உங்களுடன் நான் இருக்கும்போது மாத்திரமல்ல, எப்பொழுதுமே காண்பிக்கவேண்டும். 19என் பிள்ளைகளே, கிறிஸ்து உங்களில் உருவாகும் வரைக்கும் உங்களுக்காக நான் வேதனைப்படுகிறேன். 20இப்பொழுது உங்களுடனே நான் இருக்கவும், உங்களுடன் வேறுவிதமாய்ப் பேசவும் எவ்வளவாய் விரும்புகிறேன். ஏனெனில், உங்களைக்குறித்து நான் மிகவும் கலக்கம் அடைந்திருக்கிறேன்.
ஆகாரும் சாராளும்
21மோசேயின் சட்டத்திற்கு கீழ்ப்பட்டிருக்க விரும்புகிறவர்களே, மோசேயின் சட்டம் சொல்வதை நீங்கள் அறியாதிருக்கிறீர்களா? அதை எனக்குச் சொல்லுங்கள். 22ஆபிரகாமுக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள் என்றும், ஒருவன் அடிமைப் பெண்ணிடத்தில் பிறந்தான் என்றும், மற்றவன் சுதந்திரமுள்ள பெண்ணிடத்தில் பிறந்தான் என்றும் எழுதப்பட்டிருக்கிறதே. 23அடிமைப் பெண்ணிடத்தில் பிறந்த அவனுடைய மகன், சாதாரண முறையிலேயே பிறந்தான்; சுதந்திரமான பெண்ணிடத்தில் பிறந்த அவனுடைய மகனோ, இறைவனுடைய வாக்குத்தத்தத்தின் பிரதிபலனின்படி பிறந்தான்.
24இதை ஒரு அடையாளப்பூர்வமாக எடுத்துக்கொள்ளலாம். இந்த இரண்டு பெண்களும், இரண்டு உடன்படிக்கைகளுக்கும் எடுத்துக்காட்டாய் இருக்கிறார்கள். ஒரு உடன்படிக்கை சீனாய் மலையைச் சேர்ந்தது. அது அடிமைகளாகப் போகும் பிள்ளைகளைப் பெறுகிறது. இது ஆகாருக்கு ஒப்பாய் இருக்கிறது. 25அரேபியாவிலுள்ள சீனாய் மலைக்கு ஆகார் அடையாளமாய் இருக்கிறாள். அவள் இப்பொழுது இருக்கும் எருசலேம் நகருக்கும் ஒப்பாய் இருக்கிறாள். ஏனெனில் எருசலேமும், அதன் பிள்ளைகளுடன் அடிமையாய் இருக்கிறதே. 26ஆனால் மேலே பரலோகத்திலுள்ள எருசலேமோ சுதந்தரமானவள். அவளே நம்முடைய தாய். 27ஏனெனில்,
“பிள்ளை
பிள்ளைபெறாத மலடியே, சந்தோஷப்படு;
பிரசவ வேதனைப்படாதவளே,
மகிழ்ச்சியுடன் சத்தமிடு;
ஏனெனில் கைவிடப்பட்டவளின் பிள்ளைகள்
கணவனுடன் வாழ்கிறவளுடைய பிள்ளைகளைவிட அதிகமாயிருப்பார்கள்”#4:27 ஏசா. 54:1
என்று எழுதியிருக்கிறதே.
28பிரியமானவர்களே, நீங்களோ ஈசாக்கைப் போல் வாக்குத்தத்தத்தின் பிள்ளைகளாய் இருக்கிறீர்கள். 29அக்காலத்தில் சாதாரண முறையில் பிறந்த மகன், பரிசுத்த ஆவியானவருடைய வல்லமையின் மூலமாய் பிறந்த மகனைத் துன்புறுத்தினான். அவ்விதமாகவே, இப்பொழுதும் நடைபெறுகிறது. 30ஆனால் வேதவசனம் என்ன சொல்கிறது? “அடிமைப் பெண்ணையும், அவள் மகனையும் வெளியே அனுப்பிவிடும்; ஏனெனில், அடிமைப்பெண்ணின் மகன் சுதந்திரமான பெண்ணின் மகனுடனே, சொத்துரிமையை ஒருபோதும் பகிர்ந்துகொள்ளக் கூடாது.”#4:30 ஆதி. 21:10 31ஆகவே பிரியமானவர்களே, நாம் மோசேயின் சட்டத்தில் கட்டுப்பட்ட அடிமைப்பெண்ணின் பிள்ளைகள் அல்ல, சுதந்திரமான பெண்ணின் விசுவாசத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிள்ளைகள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy