YouVersion Logo
Search Icon

எசேக்கியேல் 24

24
சமையல் பானை
1அரசன் யோயாக்கீன் சிறைப்பிடிக்கப்பட்ட ஒன்பதாம் வருடம், பத்தாம் மாதம், பத்தாம் நாளில் யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: 2“மனுபுத்திரனே, இந்தத் தேதியை, இதே நாளைக் குறித்துவை, ஏனெனில் இந்த நாளிலேதான் பாபிலோன் அரசன் எருசலேமை முற்றுகையிடத் தொடங்கினான். 3நீ இந்தக் கலகம் செய்யும் குடும்பத்தாருக்கு, ஒரு உவமையைக் கூறி அவர்களிடம் சொல்லவேண்டியதாவது: ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே.’
“ ‘சமையல் பானையை அடுப்பிலே வை.’
அதை அடுப்பிலே வைத்து அதற்குள்ளே தண்ணீர் ஊற்று.
4இறைச்சித் துண்டுகளையும்
காலும் தொடையுமாகிய நல்ல துண்டுகள் அனைத்தையும் அதிலே போடு.
நல்ல எலும்புகளால் பானையை நிரப்பு.
5மந்தையில் சிறந்த ஆட்டையே தெரிந்தெடு.
பானையின் கீழ் விறகுகளையடுக்கி
அதிலுள்ள எலும்புகள்
வேகும்படி நன்றாகக் கொதிக்க வை.
6ஆண்டவராகிய யெகோவா கூறுவதாவது:
“ ‘அடிப்பிடித்து நுரை அகலாதிருக்கும் பானைபோல் இருக்கும்,’
இரத்தம் சிந்தும் இந்த எருசலேம் நகரத்திற்கு ஐயோ,
கேடு! அத்துண்டுகளை ஒவ்வொன்றாக
அவை வருகின்ற ஒழுங்குமுறையில்
வெளியில் எடுத்து அப்பாத்திரத்தை வெறுமையாக்கு.
7“ ‘அவள் சிந்திய இரத்தம் அவள் மத்தியிலே இருக்கிறது.
ஏனெனில் அவள் சிந்திய இரத்தத்தைப் பாறையிலே ஊற்றினாள்.’
புழுதி மறைக்கும்படி அவள்
அதை நிலத்தில் ஊற்றவில்லை.
8எனக்கு கோபமூண்டு,
பழிவாங்கும் நோக்கில் அவளது இரத்தம் மறைந்து விடாதபடி,
நானே அதைப் பாறையில் ஊற்றினேன்.
9ஆகையால், ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே:
“ ‘இரத்தம் சிந்தும் எருசலேம் நகரத்திற்கு ஐயோ, கேடு.
நானும் விறகை உயரமாய் அடுக்குவேன்’ ”
10எனவே, விறகைக் குவித்து
நெருப்பை மூட்டு.
இறைச்சியில் வாசனைச் பொருட்களைக் கலந்து
நன்றாய்ச் சமை.
எலும்புகளைக் கருகவிடு.
11பின் வெறும் பாத்திரத்தை தணலின்மேல் வை.
அது வெப்பமடைந்து,
அதன் செம்பு தகதகத்து அதன் அசுத்தப் பொருள் உருகி,
அதன் நுரைகள் எரிந்துபோகுமட்டும் அதை வெறுமையாகத் தழலின்மேல் வை.
12அது முயற்சிகள் எல்லாவற்றையும் வீணாக்கியது.
அதன் கெட்டியான நுரைகள்
தீயினால்கூட அழிந்துபோகவில்லை.
13“ ‘இப்பொழுது காமவேட்கையே உன் அசுத்தம். ஏனெனில் நான் உன்னைத் தூய்மைப்படுத்த முயன்றேன். ஆனால் நீயோ, உன் அசுத்தத்தில் இருந்து தூய்மையடைய மறுத்தாய். ஆகையால் உனக்கெதிராக இருக்கும் என் கோபம் தீருமட்டும், மறுபடியும் நீ தூய்மையடையமாட்டாய்.
14“ ‘யெகோவாவாகிய நானே பேசினேன். நான் நடவடிக்கை எடுக்கவேண்டிய வேளை வந்துவிட்டது. நான் தாமதிக்கமாட்டேன். நான் கருணை காட்டப்போவதுமில்லை மனம் இரங்குவதுமில்லை. நீ உன் நடத்தைக்கும் உன் செயல்களுக்கும் ஏற்ப நியாயந்தீர்க்கப்படுவாய்’ ” என்று யெகோவா அறிவிக்கிறார்.
எசேக்கியேலின் மனைவியின் மரணம்
15யெகோவாவினுடைய வார்த்தை எனக்கு வந்தது. 16“மனுபுத்திரனே, உன் கண்களுக்கு அருமையானவளை ஒரே அடியினால் உன்னைவிட்டு எடுத்துக்கொள்வேன். ஆனாலும் நீ புலம்பாமலும், அழாமலும் கண்ணீர் விடாமலும் இருக்கவேண்டும். 17அமைதியாய் துயர்கொண்டிரு. மரித்தவளுக்காகத் துக்கங்கொண்டாடாதே. தலைப்பாகையை அணிந்துகொள். செருப்பைப் போட்டுக்கொள். உன் முகத்தின் கீழ்ப்பாகத்தை மூடிக்கொள்ளாமலும் துக்கங்கொண்டாடுவோர் வழக்கமாகச் சாப்பிடும் உணவைச் சாப்பிடாமலும் இரு என்றார்.”
18இதைப்பற்றி நான் காலையில் மக்களோடு பேசினேன், மாலையில் என் மனைவி இறந்துபோனாள். எனக்கு இடப்பட்ட கட்டளைப்படியே மறுநாள் காலை நான் செய்தேன்.
19அப்பொழுது மக்கள் என்னிடம், “இக்காரியங்கள் எங்களுக்கு எவைகளைக் குறிக்கின்றன எனச் சொல்லமாட்டாயா?” என்று கேட்டார்கள்.
20எனவே நான் அவர்களுக்குச் சொன்னதாவது: “யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: 21ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே என இஸ்ரயேல் குடும்பத்தாருக்குச் சொல். ‘நீங்கள் பெருமைகொள்ளும் அரணும், உங்கள் கண்களின் அருமையும், உங்கள் பிரியமான பொருளுமான என் பரிசுத்த ஆலயத்தின் தூய்மையை நான் கெடுக்கப்போகிறேன். நீங்கள் யூதாவில் விட்டுவந்த மகன்களும், மகள்களும் வாளினால் மடிவார்கள். 22அப்பொழுது எசேக்கியேலாகிய நான் செய்ததுபோலவே நீங்களும் செய்வீர்கள். உங்கள் முகத்தின் கீழ்ப்பாகத்தை மூடிக்கொள்ளாமலும், துக்கங்கொண்டாடுவோர் சாப்பிடும் வழக்கமான உணவைச் சாப்பிடாமலும் இருப்பீர்கள். 23நீங்கள் உங்கள் தலைகளில் இருக்கும் தலைப்பாகைகளையும் உங்கள் கால்களில் இருக்கும் செருப்புகளையும், கழற்றிப் போடாதிருப்பீர்கள். நீங்கள் துக்கப்படவோ, அழவோ மாட்டீர்கள். உங்கள் பாவங்களினால் சோர்ந்துபோய் உங்களுக்குள்ளேயே புலம்புவீர்கள். 24எசேக்கியேல் உங்களுக்கு ஒரு அடையாளமாய் இருக்கிறான்; அவன் செய்ததுபோல நீங்களும் செய்வீர்கள். இது நடைபெறும்போது, ஆண்டவராகிய யெகோவா நானே என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள் என்கிறார் என்றேன்.’
25“மனுபுத்திரனே, உனக்கு நான் கூறுவதாவது. அவர்களுடைய அரணையும், மகிழ்ச்சியையும், அவர்கள் கண்களின் அருமையையும், அவர்களுடைய இருதயத்தின் வாஞ்சையையும் எடுத்துக்கொள்ளும் நாளிலே, அவர்கள் மகன்களையும், மகள்களையும் நான் எடுத்துக்கொள்வேன். 26அந்த நாளிலே எருசலேமிலிருந்து தப்பியோடிவரும் ஒருவன் வந்து உனக்குச் செய்தியை அறிவிப்பான். 27அப்பொழுது உன் வாய் திறக்கப்படும், நீ அவனுடன் பேசுவாய்; இனியொருபோதும் மவுனமாயிருக்கமாட்டாய். இவ்விதமாய் நீ அவர்களுக்கு ஒரு அடையாளமாய் இருப்பாய், அப்பொழுது அவர்கள் நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வார்கள் என்றார்.”

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in