YouVersion Logo
Search Icon

எசேக்கியேல் 19

19
இஸ்ரயேலரின் இளவரசர்களுக்கான புலம்பல்
1“நீ இஸ்ரயேலரின் இளவரசர்களைக் குறித்துப் புலம்பு. 2நீ சொல்லவேண்டியதாவது:
“ ‘சிங்கங்களுக்கு நடுவில் உன் தாய்
ஒரு பெண்சிங்கமாயிருந்தாள்.
அவள் இளஞ்சிங்கங்கள் மத்தியில்
படுத்திருந்து தன் குட்டிகளை வளர்த்தாள்.
3தன் குட்டிகளில் ஒன்றை அவள் வளர்த்தாள்.
அக்குட்டி ஒரு பலமுள்ள சிங்கம் ஆனான்.
அவன் இரையைக் கிழிக்கப்பழகி
மனிதர்களை விழுங்கினான்.
4நாடுகள் அவனைப்பற்றிக் கேள்விப்பட்டபோது,
அவன் அவர்களுடைய குழியில் அகப்பட்டான்.
அவர்கள் அவனை விலங்கிட்டு
எகிப்திற்கு நடத்திச்சென்றார்கள்.
5“ ‘தன் நம்பிக்கை நிறைவேறவில்லையென்றும்,
தன் எதிர்பார்ப்பு சிதைந்தது
என்றும் தாய்ச்சிங்கம் கண்டபோது,
தன் குட்டிகளில் வேறொன்றை எடுத்து பலமுள்ள சிங்கமாக்கியது.
6அது இப்பொழுது பாலசிங்கமானதால்,
சிங்கங்கள் மத்தியில் இரைதேடித் திரிந்தது.
அது இரையைக் கிழிக்கப்பழகி
மனிதரை விழுங்கியது.
7அவர்களுடைய அரண்களை நொறுக்கி,
நகரங்களை அழித்தது.
நாடும் அதிலுள்ள அனைவரும்
அதனுடைய கர்ஜனையைக் கேட்டுக் கலங்கினார்கள்.
8அப்பொழுது எல்லாப் பக்கமும் சூழ்ந்திருக்கும் பிறநாடுகள்,
அதை எதிர்த்து வந்தன.
அதன்மேல் தங்கள் வலையை வீசியபோது,
அது அவர்களுடைய குழியில் அகப்பட்டது.
9அவர்கள் அதனை விலங்கிட்டு கூண்டிலிட்டு,
பாபிலோன் அரசனிடம் கொண்டுசென்று
அங்கே சிறையிட்டார்கள்.
எனவே இஸ்ரயேலின் மலைகளில்
அதனுடைய கர்ஜனை அதற்குப்பின் கேட்கவேயில்லை.
10“ ‘உன் தாய் உன் திராட்சைத் தோட்டத்தில்
தண்ணீரின் அருகே நாட்டப்பட்ட திராட்சைக்கொடியைப் போலிருந்தாள்!
தண்ணீர் வளம் மிகுந்த காரணத்தால்
கிளைகள் செழித்து பழங்களும் பெருகின.
11அதன் கிளை உறுதியாய் இருந்ததினால்
அரச செங்கோலுக்குத் தகுதியாயிற்று.
அடர்ந்து வளர்ந்த மற்ற இலைகளுக்கு மேலாய் அது உயர்ந்து நின்றது.
தன் உயரத்தாலும்,
பல கிளைகளாலும்
அது சிறப்பாய்க் காட்சியளித்தது.
12ஆனால், அந்தத் திராட்சைக்கொடி
கடுங்கோபத்தோடு வேரோடு பிடுங்கப்பட்டுத்
தரையில் எறியப்பட்டது.
கீழ்க்காற்று அதனை வாடப்பண்ணி பழங்களும் உதிர்க்கப்பட்டன.
அதன் பலத்த கிளைகள் வாடிப்போயின.
நெருப்பு அவைகளை எரித்தது.
13இப்பொழுது அது வறண்ட வளமற்ற
பாலைவனத்தில் நாட்டப்பட்டுள்ளது.
14முக்கிய கிளை ஒன்றிலிருந்து இருந்து நெருப்பு எழும்பி,
அதன் பழத்தைச் சுட்டெரித்தது.
அரச செங்கோலுக்குத் தகுதிபெற
இனியொரு கிளையும் அதில் விடப்படவில்லை.’
இது ஒரு புலம்பல் புலம்பலாகவே, உபயோகிக்கப்பட வேண்டும்.”

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in