YouVersion Logo
Search Icon

யாத்திராகமம் 11

11
பத்தாம் வாதை தலைமகன்கள்மேல்
1அப்பொழுது யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, “நான் பார்வோன்மேலும், எகிப்தின்மேலும் இன்னுமொரு வாதையைக் கொண்டுவருவேன். அதன்பின் அவன் உங்களை இங்கிருந்து போகவிடுவான்; அதுவுமன்றி, உங்களை முழுவதும் துரத்தியும் விடுவான். 2ஆண்களும் பெண்களும் வேறுபாடின்றி தங்களுடைய அயலவர்களிடத்தில் தங்க நகைகளையும், வெள்ளி நகைகளையும் கேட்டு வாங்கிக்கொள்ள வேண்டும் என்று நீ இஸ்ரயேல் மக்களுக்குச் சொல்” என்றார். 3யெகோவா இஸ்ரயேல் மக்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவு கிடைக்கும்படி செய்தார். அதுவுமன்றி, மோசே எகிப்திலே பார்வோனின் அதிகாரிகளாலும், எகிப்திய மக்களாலும் பெரிதும் மதிக்கப்பட்டான்.
4அப்பொழுது மோசே பார்வோனிடம், “யெகோவா சொல்வது இதுவே: ‘நான் நடு இராத்திரியளவில் எகிப்து எங்கும் கடந்துபோவேன். 5எகிப்தில் முதற்பேறான ஒவ்வொரு மகனும் சாவான். அரியணையில் இருக்கும் பார்வோனின் முதல் ஆண்பிள்ளைமுதல், திரிகை ஆட்டும் அடிமைப்பெண்ணின் முதல் ஆண்பிள்ளை வரையுள்ள முதல் பிறந்த எல்லா மகன்களும் சாவார்கள்; அத்துடன் மிருகங்களின் தலையீற்றுகள் அனைத்தும் சாகும். 6எகிப்து நாடெங்கும் முன்பும் பின்பும் இனி ஒருபோதும் இருக்காத பெரிய அழுகுரல் உண்டாகும். 7ஆனால் இஸ்ரயேலர் மத்தியில் மனிதரையோ, மிருகங்களையோ பார்த்து ஒரு நாயாவது குரைக்கமாட்டாது.’ இதனால் யெகோவா எகிப்தியருக்கும் இஸ்ரயேலருக்கும் இடையே வித்தியாசத்தைக் காட்டுகிறார் என்பதை நீ அறிந்துகொள்வாய். 8அப்பொழுது உம்முடைய அதிகாரிகள் எல்லோரும் என்முன் பணிந்து, ‘நீயும் உன்னைப் பின்பற்றுகிறவர்கள் யாவரும் எங்களைவிட்டுப் புறப்பட்டுப் போங்கள்!’ என்று சொல்வார்கள். அதன்பின் நான் புறப்படுவேன்” என்று சொல்லி மோசே கடுங்கோபத்துடன் பார்வோனைவிட்டுப் புறப்பட்டான்.
9அப்பொழுது யெகோவா மோசேயிடம், “பார்வோன் உங்களுக்குச் செவிகொடுக்க மறுப்பான். இதினிமித்தம் எகிப்தில் என்னுடைய அதிசயங்கள் அதிகரிக்கும்” என்றார். 10இப்படியாக மோசேயும் ஆரோனும் இந்த அதிசயங்களையெல்லாம் பார்வோனுக்கு முன்பாகச் செய்தார்கள், ஆனாலும் பார்வோனின் இருதயத்தை யெகோவா கடினப்படுத்தினார், அவன் இஸ்ரயேலரைத் தன் நாட்டிலிருந்து போகவிடவில்லை.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in