YouVersion Logo
Search Icon

பிரசங்கி 6

6
1சூரியனுக்குக் கீழே இன்னுமொரு தீங்கையும் நான் கண்டேன். அது மனிதரை பாரமாய் அழுத்துகிறது. 2இறைவன் ஒருவனுக்கு செல்வத்தையும், சொத்துக்களையும், மதிப்பையும் கொடுத்திருக்கிறார்; அதினால் அவன் இருதயம் ஆசைப்படும் எதையும் குறைவில்லாமல் பெற்றிருக்கிறான். ஆனால் அவைகளை அனுபவிக்க இறைவன் அவனுக்கு இடம் கொடுக்கிறதில்லை. பதிலாக வேறொருவன் அவற்றை அனுபவிக்கிறான். இதுவும் அர்த்தமற்றதும், கொடுமையான தீங்குமாய் இருக்கிறது.
3ஒரு மனிதனுக்கு நூறு பிள்ளைகளும் நீடித்த வாழ்வும் இருக்கலாம்; எவ்வளவு காலம் அவன் வாழ்ந்தாலும் அவன் தனது செல்வச் செழிப்பை அனுபவியாமலும், செத்தபின் முறையான நல்லடக்கம் அவனுக்கு நடைபெறாமலும் போனால், அவனைவிட கருசிதைந்த பிண்டமே மேலானது என்றே நான் சொல்வேன். 4அது அர்த்தமற்றதாகவே வந்து, இருளில் மறைகிறது. இருளிலேயே அதின் பெயர் மூடப்பட்டிருக்கிறது. 5அக்குழந்தை சூரியனைக் காணாமலும், ஒன்றையும் அறியாமலும் இருந்தபோதுங்கூட, இந்த மனிதனைவிட அது அதிக இளைப்பாறுதலை உடையதாயிருக்கிறது. 6அந்த மனிதன் இரண்டு முறைக்கு மேலாக ஆயிரம் வருடங்கள் வாழ்ந்தாலும், தனது செல்வச் செழிப்பை அவன் அனுபவிக்கவில்லையே. அனைவரும் ஒரே இடத்திற்கு அல்லவோ போகிறார்கள்.
7மனிதனுடைய எல்லா உழைப்பும் அவனுடைய வாய்க்காகத்தானே.
ஆனாலும் அவனுடைய பசியோ ஒருபோதும் தீருவதில்லை.
8ஒரு மூடனைவிட, ஞானமுள்ளவன் எதில் உயர்ந்தவன்?
மற்றவர்களுக்கு முன்பாக எப்படி நடந்துகொள்ள வேண்டும்
என அறிவதினால் ஒரு ஏழைக்குக் கிடைக்கும் இலாபம் என்ன?
9ஆசைக்கு இடங்கொடுத்து அலைவதைவிட,
கண்கள் கண்டதில் திருப்தியடைவதே நல்லது.
இதுவும் அர்த்தமற்றதே,
காற்றைத் துரத்திப்பிடிக்கும் முயற்சியே.
10இருக்கிறவையெல்லாம் முன்னமே பெயரிடப்பட்டிருக்கின்றன;
மனிதன் எப்படிப்பட்டவன் என்பதும் அறியப்பட்டேயிருக்கிறது.
தன்னிலும் வலிமையுள்ளவரோடு
ஒரு மனிதனாலும் வாக்குவாதம் பண்ண முடியாது.
11வார்த்தைகள் கூடும்போது,
அர்த்தம் குறையும்.
இதினால் யாராவது பயனடைந்ததுண்டோ?
12ஒரு மனிதன் தனது குறுகியதும், அர்த்தமற்றதுமான வாழ்நாளில், ஒரு நிழலைப்போல் கடந்துபோகிறான்; அந்நாட்களில் எது வாழ்க்கையில் நல்லது என்று யாருக்குத் தெரியும்? அவன் செத்துப்போனபின் சூரியனுக்குக் கீழே என்ன நடக்கும் என அவனுக்கு யாரால் கூறமுடியும்?

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in