YouVersion Logo
Search Icon

பிரசங்கி 4

4
ஒடுக்குதலும் நட்பின்மையும்
1மீண்டும் நான் பார்த்தபோது:
சூரியனுக்குக் கீழே அநேக ஒடுக்குதல்களைக் கண்டேன்.
ஒடுக்கப்படுகிறவர்களின் கண்ணீரையும்,
அவர்களை ஆறுதல்படுத்த யாரும் இல்லாதிருப்பதையும் கண்டேன்;
அவர்களை ஒடுக்குவோரின் பக்கத்திலேயே வல்லமை இருந்தது,
அவர்களை ஆறுதல்படுத்த யாருமே இல்லை.
2ஆதலால் இன்னும் உயிரோடிருந்து
வாழ்கிறவர்களைப் பார்க்கிலும்,
ஏற்கெனவே செத்து மடிந்துபோனவர்களே
மகிழ்ச்சிக்குரியவர்கள் என்று அறிவித்தேன்.
3இவ்விரு கூட்டத்தினரைவிட,
இன்னமும் பிறவாதவர்களே மேலானவர்கள்.
அவர்கள் சூரியனுக்குக் கீழே
செய்யப்படும் தீமையைக் காணவில்லையே.
4தனது அயலவனைக் குறித்து மனிதன் கொண்டிருக்கும் பொறாமையிலிருந்தே, எல்லா உழைப்பும் திறமையும் ஏற்படுகிறது என்று நான் கண்டுகொண்டேன். இதுவும் அர்த்தமற்றதே; காற்றைத் துரத்திப்பிடிக்கும் முயற்சியே.
5மூடன் தன் கைகளைக் கட்டிக்கொண்டு
தன்னையே அழித்துக்கொள்கிறான்#4:5 தன்னையே அழித்துக்கொள்கிறான் அல்லது தன் சதையையே தின்கிறான்..
6காற்றைத் துரத்திப்பிடிப்பது போன்ற பயனற்ற உழைப்பினால்,
இரு கைகளையும் நிரப்புவதைவிட,
மன அமைதியுடன் ஒரு கையை நிரப்பிக்கொள்வது மேலானது.
7சூரியனுக்குக் கீழே இன்னும் அர்த்தமற்ற ஒன்றை நான் கண்டேன்:
8தனிமையாய் இருக்கும் ஒரு மனிதன் இருந்தான்.
அவனுக்கு மகனோ, சகோதரனோ இல்லை.
அப்படியிருந்தும் அவனுடைய கடும் உழைப்பிற்கோ முடிவே இருக்கவில்லை.
ஆனாலும் அவன் கண்கள் அவனுடைய செல்வத்தில் திருப்தியடையவுமில்லை.
அவன், “நான் யாருக்காக கஷ்டப்பட்டு உழைக்கிறேன்;
ஏன் நான் என் வாழ்வை சந்தோஷமாய் அனுபவியாதிருக்கிறேன்” என்று கேட்டான்.
இதுவும் அர்த்தமற்றதும்,
அவலத்துக்குரிய ஒரு நிலையாயும் இருக்கிறது.
9தனியொருவனாய் இருப்பதைப் பார்க்கிலும், இருவராய் இருப்பது நல்லது.
ஏனெனில் அவர்கள் தங்கள் வேலையிலிருந்து நல்ல பயனைப் பெறுவார்கள்.
10ஒருவன் விழுந்தால்,
அவன் நண்பன் அவன் எழும்ப உதவிசெய்ய முடியும்.
ஆனால் கீழே விழும்போது எழுந்திருக்க உதவிசெய்ய யாரும் இல்லாத மனிதனோ,
பரிதாபத்திற்குரியவன்.
11அத்துடன் இருவர் ஒன்றாய்ப் படுத்திருந்தால்,
தங்களை சூடாக வைத்துக்கொள்வார்கள்.
ஆனால் ஒருவன் தனிமையாய் தன்னை எப்படிச் சூடாக வைத்துக்கொள்ள முடியும்.
12ஒரு தனி மனிதன் இலகுவில் வீழ்த்தப்படலாம்;
ஆனால் இருவராய் இருந்தால் அவர்கள் தங்களைக் காத்துக்கொள்வார்கள்.
முப்புரிக்கயிறு விரைவில் அறாது.
உயர்வும் அர்த்தமற்றது
13எச்சரிப்பை ஏற்றுக்கொள்ளத் தெரியாத முதியவனும் மூடனுமான அரசனைவிட, ஞானமுள்ள ஏழை வாலிபனே சிறந்தவன். 14அந்த வாலிபன் சிறையில் இருந்து அரச பதவிக்கு உயர்ந்திருக்கலாம். அல்லது தனது ஆட்சிக்குரிய பிரதேசத்தில் ஏழ்மையில் பிறந்திருக்கலாம். 15சூரியனுக்குக் கீழே வாழ்ந்து நடந்த யாவரும் அரசனுக்குப்பின், அவனுடைய இடத்தில் வந்த வாலிபனையே பின்பற்றுவதைக் கண்டேன். 16அப்படி அவனைப் பின்பற்றுகிற மக்களுக்கு முடிவே இல்லை. ஆனால் அதற்குப் பிறகு வந்த சந்ததியோ புதிதாக ஆட்சிக்கு வந்தவனில் பிரியப்படவில்லை. இதுவும் அர்த்தமற்றதே, காற்றைத் துரத்திப்பிடிக்கும் முயற்சியே.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in