YouVersion Logo
Search Icon

உபாகமம் 5

5
பத்துக் கட்டளைகள்
1மோசே இஸ்ரயேலர் எல்லோரையும் அழைத்துச் சொன்னதாவது:
இஸ்ரயேலரே கேளுங்கள், நான் இன்று உங்களுக்கு அறிவிக்கும் விதிமுறைகளையும் சட்டங்களையும் கேளுங்கள். அவற்றைக் கற்று, அவைகளைப் பின்பற்றும்படி கவனமாயிருங்கள். 2நமது இறைவனாகிய யெகோவா ஓரேபிலே, நம்முடன் ஒரு உடன்படிக்கை செய்தார். 3அவர் அந்த உடன்படிக்கையை யெகோவா நம்முடைய முற்பிதாக்களோடு மட்டும் செய்யவில்லை. இன்று உயிரோடு இருக்கும் நம் அனைவருடனும் அதைச் செய்தார். 4யெகோவா மலையின்மேலே நெருப்பின் நடுவில் இருந்து உங்களுடன் முகமுகமாய்ப் பேசினார். 5நீங்கள் நெருப்புக்குப் பயந்து மலைக்குமேல் ஏறாதிருந்தபடியால், நான் அவ்வேளையில் யெகோவாவினுடைய வார்த்தையை உங்களுக்கு அறிவிக்கும்படியாக யெகோவாவுக்கும், உங்களுக்கும் இடையில் நின்றேன்.
அவர் சொன்னதாவது:
6“அடிமைத்தன நாடாகிய எகிப்திலிருந்து உன்னை வெளியே அழைத்துக்கொண்டுவந்த உன் இறைவனாகிய யெகோவா நானே.
7“நீ என்னைத்தவிர வேறு தெய்வங்களை உனக்காக வைத்திருக்காதே.
8நீ உனக்காக எந்தவொரு விக்கிரகத்தையும் செய்யாதே. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், கீழேயுள்ள தண்ணீரிலும் இருக்கிறவைகளின் உருவத்தில் எந்த விக்கிரகத்தையும் செய்யாதே. 9நீ அவற்றை வணங்கவோ வழிபடவோ வேண்டாம்; ஏனெனில், உன் இறைவனான யெகோவாவாகிய நான் எனக்குரிய வழிபாட்டைக் குறித்து, வைராக்கியமுடைய இறைவன். என்னை வெறுக்கிறவர்கள் மத்தியில் பெற்றோரின் பாவத்திற்காக மூன்றாம், நான்காம் தலைமுறை மட்டும் அவர்களுடைய பிள்ளைகளைத் தண்டிக்கிறவராயும் இருக்கிறேன். 10ஆனால் என்னிடம் அன்பாயிருந்து, என் கட்டளைகளைக் கைக்கொள்கிறவர்களுக்கோ, ஆயிரம் தலைமுறைகளுக்கும் அன்பு காட்டுகிறவராயும் இருக்கிறேன்.
11உன் இறைவனாகிய யெகோவாவின் பெயரைத் தவறான முறையில் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில், யெகோவா தமது பெயரைத் தவறான முறையில் பயன்படுத்தும் எவனையும் குற்றமற்றவனாகக் கருதமாட்டார்.
12உன் இறைவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிட்டபடியே ஓய்வுநாளைப் பரிசுத்தமாய்க் கைக்கொள். 13ஆறு நாட்களிலும் நீ உழைத்து, உன் வேலைகளையெல்லாம் செய்யலாம். 14ஏழாம்நாளோ உன் இறைவனாகிய யெகோவாவின் ஓய்வுநாள். அந்த நாளில் நீ எந்த வேலையையும் செய்யக்கூடாது. நீயோ, உன் மகனோ, உன் மகளோ, உன் வேலைக்காரனோ, வேலைக்காரியோ, உன் எருதோ, கழுதையோ, உன் மிருகங்களில் எதுவோ, உன் பட்டணங்களுக்குள் வாழும் பிறநாட்டினனோ எந்த வேலையையும் செய்யக்கூடாது. நீ ஓய்வெடுப்பதுபோலவே உன் வேலைக்காரனும், வேலைக்காரியும் ஓய்வெடுக்கவேண்டும். 15நீ எகிப்திலே அடிமையாக இருந்தாய் என்றும், உன் இறைவனாகிய யெகோவா தமது வல்லமையான கையினாலும், நீட்டப்பட்ட கரத்தினாலும் அங்கிருந்து உன்னை மீட்டு, வெளியே கொண்டுவந்தார் என்றும் ஞாபகத்தில் வைத்துக்கொள். அதினாலேயே உன் இறைவனாகிய யெகோவா ஓய்வுநாளை நீ கைக்கொள்ளும்படி உனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.
16உன் இறைவனாகிய யெகோவா கட்டளையிட்டிருக்கிறபடியே உன் தகப்பனையும், உன் தாயையும் கனம்பண்ணு, அப்பொழுது உன் இறைவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கும் நாட்டிலே நீ நீடித்து வாழ்ந்து நலமாயிருப்பாய்.
17கொலைசெய்ய வேண்டாம்.
18விபசாரம் செய்யவேண்டாம்.
19களவு செய்யவேண்டாம்.
20உன் அயலானுக்கு எதிராகப் பொய்ச்சாட்சி சொல்லாதே.
21உன் அயலானுடைய மனைவியை அபகரிக்க ஆசைகொள்ளாதே. உன் அயலானுடைய வீட்டையோ, நிலத்தையோ வேலைக்காரனையோ, வேலைக்காரியையோ, அவனுடைய எருதையோ, கழுதையையோ, அவனுக்குச் சொந்தமான வேறு எதையுமோ அபகரிக்க ஆசைகொள்ளாதே.”
22மேகமும், காரிருளும் சூழ்ந்த அந்த மலையின்மேல், நெருப்பின் நடுவிலிருந்து உங்கள் முழு சபையாருக்கும் உரத்த குரலில் யெகோவா அறிவித்த கட்டளைகள் இவையே; அவற்றுடன் அவர் எதையும் கூட்டவில்லை. அவர் அக்கட்டளைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதி, அவற்றை என்னிடத்தில் கொடுத்தார்.
23அந்த மலை நெருப்புப் பற்றி எரியும்பொழுது, இருளிலிருந்து உண்டான குரலை நீங்கள் கேட்டீர்கள். அப்போது உங்கள் கோத்திரங்களின் தலைவர்களும் உங்கள் சபைத்தலைவர்களும் என்னிடத்தில் வந்து சொன்னதாவது: 24“எங்கள் இறைவனாகிய யெகோவா தமது மகிமையையும் மகத்துவத்தையும் எங்களுக்குக் காட்டியிருக்கிறார். நாங்கள் நெருப்பிலிருந்து வருகிற அவர் குரலைக் கேட்டோம். இறைவன் ஒரு மனிதனோடு பேசிய பின்பும் அவன் உயிரோடிருப்பான் என்பதை இன்று கண்டோம். 25ஆனாலும் இப்பொழுது ஏன் நாங்கள் சாகவேண்டும்? இந்தப் பெரிய நெருப்பு எங்களை எரித்து அழித்துவிடும். தொடர்ந்து நாங்கள் எங்கள் இறைவனாகிய யெகோவாவின் குரலைக் கேட்டால், நாங்கள் இறந்துபோவோம். 26நாங்கள் இன்று கேட்டதுபோல உயிருள்ள இறைவனின் குரல் நெருப்பிலிருந்து பேசுவதைக் கேட்டும் உயிர்த்தப்பியிருக்கிற மனிதர் யார்? 27நீரே கிட்டப்போய் நமது இறைவனாகிய யெகோவா சொல்வதெல்லாவற்றையும் கேளும். பின் எங்கள் இறைவனாகிய யெகோவா உமக்குச் சொல்லும் அனைத்தையும் எங்களுக்குச் சொல்லும். நாங்கள் அதற்குச் செவிகொடுத்துக் கீழ்ப்படிவோம்” என்றீர்கள்.
28நீங்கள் என்னோடு பேசுவதை யெகோவா கேட்டார். அவர் என்னிடம், “இந்த மக்கள் உனக்குச் சொன்னவற்றை எல்லாம் நான் கேட்டேன். அவர்கள் சொன்னதெல்லாம் நல்லதே. 29அவர்களுடைய இருதயங்கள் எனக்குப் பயந்து, எப்பொழுதும் என் கட்டளைகளைக் கைக்கொண்டால் அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் என்றென்றைக்கும் நலமாய் இருப்பார்களே!
30“நீ போய் அவரவர் கூடாரங்களுக்குப் போகும்படி அவர்களுக்குச் சொல். 31ஆனால் நீயோ இங்கே என்னிடம் தங்கியிரு. அவர்கள் உரிமையாக்கிக்கொள்ளும்படி நான் அவர்களுக்குக் கொடுக்கிற நாட்டில், அவர்கள் பின்பற்றும்படி நீ அவர்களுக்குப் போதிக்கவேண்டிய எல்லா கட்டளைகளையும், விதிமுறைகளையும், சட்டங்களையும் நான் உனக்குக் கொடுப்பேன்” என்றார்.
32ஆகவே நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவா கட்டளையிட்டிருக்கிறதை கைக்கொள்ளக் கவனமாயிருங்கள். அதைவிட்டு வலதுபக்கமோ, இடது பக்கமோ விலகிப்போக வேண்டாம். 33உங்கள் இறைவனாகிய யெகோவா கட்டளையிட்டிருக்கிற வழிகளிலெல்லாம் நடவுங்கள், அப்பொழுது நீங்கள் உரிமையாக்கிக்கொள்ளும் அந்த நாட்டில் வாழ்ந்து, செழித்து நீடித்திருப்பீர்கள்.

Currently Selected:

உபாகமம் 5: TCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in