YouVersion Logo
Search Icon

உபாகமம் 18

18
ஆசாரியருக்கும் லேவியருக்கும் காணிக்கைகள்
1லேவியரான ஆசாரியருக்கு அதாவது, முழு லேவிகோத்திரத்தாருக்கும் இஸ்ரயேலருடன் நிலப்பங்கோ, உரிமைச்சொத்தோ இருக்கக்கூடாது. யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கைகளாலேயே அவர்கள் வாழவேண்டும். ஏனெனில், அதுவே அவர்களின் உரிமைச்சொத்து. 2தங்கள் சகோதரருக்குள் அவர்களுக்கு உரிமைச்சொத்து இருக்கக்கூடாது. யெகோவா அவர்களுக்கு வாக்குக் கொடுத்தபடி யெகோவாவே அவர்களுடைய உரிமைச்சொத்தாய் இருக்கிறார்.
3மாட்டையோ, செம்மறியாட்டையோ மக்கள் பலியிடும்போது, முன்னந்தொடைகளும், தாடைகளும், உள்ளுறுப்புகளும் ஆசாரியருக்குப் பங்காகக் கொடுக்கப்படவேண்டும். 4நீங்கள் உங்கள் தானியம், திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவற்றின் முதற்பலன்களையும், ஆடுகளை மயிர் கத்தரிக்கும்போது அதன் முதல் ஆட்டுமயிரையும் ஆசாரியருக்குக் கொடுக்கவேண்டும். 5ஏனெனில், உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் எல்லா கோத்திரங்களிலுமிருந்து யெகோவாவின் பெயரில் எப்பொழுதும் நிற்பதற்கும், ஊழியம் செய்வதற்கும் அவர்களையும், அவர்கள் சந்ததிகளையும் தெரிந்துகொண்டார்.
6லேவியன் ஒருவன் இஸ்ரயேல் நாட்டிலே எங்காவது தான் வாழும் உங்கள் பட்டணங்கள் ஒன்றிலிருந்து புறப்பட்டு, யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்திற்கு வாஞ்சையுடன் வருவானாகில், 7யெகோவாவுக்குமுன் பணிசெய்யும் தன் உடனொத்த எல்லா லேவியர்களைப்போல, தன் இறைவனாகிய யெகோவாவின் பெயரில் அங்கே அவனும் பணிசெய்யலாம். 8குடும்பச் சொத்துக்களை விற்றதிலிருந்து அவன் பணத்தைப் பெற்றுக்கொண்டாலும்கூட, ஆசாரியருக்குக் கிடைப்பவற்றில் சமமான பங்கை அவனும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
அருவருப்பான வழக்கங்கள்
9நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவா, உங்களுக்குக் கொடுக்கும் நாட்டிற்குள் போய்ச்சேர்ந்ததும், அங்கிருக்கும் நாடுகளின் அருவருப்பான நடைமுறைகளைக் கைக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டாம். 10உங்களில் யாராவது தனது மகனையோ, மகளையோ தீக்கடக்கப் பண்ணக்கூடாது. குறிபார்ப்பவனோ, மாந்திரீகம் செய்பவனோ, சகுனங்களுக்கு வியாக்கியானம் சொல்லுகிறவனோ, சூனியம் செய்பவனோ உங்களுக்குள் இருக்கக்கூடாது. 11மந்திரித்துக் கட்டுபவனோ, ஆவி உலகுடன் தொடர்புகொள்பவனோ, செத்தவர்களிடத்தில் ஆலோசனை கேட்பவனோ உங்களுக்குள் இருக்கக்கூடாது. 12இப்படிப்பட்டவைகளைச் செய்கிற எவனும் யெகோவாவுக்கு அருவருப்பானவன். இப்படி அருவருப்பான செயல்களின் காரணமாகவே அந்த நாடுகளை உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு முன்பாகத் துரத்துவார். 13உங்கள் இறைவனாகிய யெகோவா முன்பாக நீங்கள் குற்றமற்றவர்களாக இருக்கவேண்டும்.
இறைவாக்கினன்
14நீங்கள் வெளியேற்றப்போகும் நாட்டவர்கள் மாந்திரீகம் செய்கிறவர்களுக்கும், குறிசொல்கிறவர்களுக்கும் செவிகொடுக்கிறார்கள். ஆனால் உங்களுக்கோ அப்படிச் செய்வதற்கு உங்கள் இறைவனாகிய யெகோவா அனுமதிகொடுக்கவில்லை. 15உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் சொந்த மக்கள் மத்தியிலிருந்து என்னைப்போன்ற ஒரு இறைவாக்கினனை உங்களுக்காக எழுப்புவார். நீங்கள் அவருக்குச் செவிகொடுக்கவேண்டும். 16ஓரேபிலே பரிசுத்த சபை கூடிய நாளிலே, “எங்கள் இறைவனாகிய யெகோவாவின் சத்தத்தை இனி நாம் கேளாமல் இருப்போம்; அவருடைய இந்தப் பெரிய நெருப்பைத் தொடர்ந்து பார்க்காமல் இருப்போம். பார்த்தால் நாங்கள் சாவோம்” என்று நீங்கள் சொன்னபோது கேட்டுக்கொண்டது இதுவே.
17அப்பொழுது யெகோவா என்னிடம் சொன்னதாவது: “அவர்கள் சொல்வது நல்லதே. 18அவர்களுடைய சகோதரருள் இருந்து அவர்களுக்காக உன்னைப்போன்ற இறைவாக்கு உரைப்பவன் ஒருவரை எழுப்புவேன். என் வார்த்தைகளை அவர் வாயில் வைப்பேன். நான் கட்டளையிட்டதையெல்லாம் அவர் அவர்களுக்குச் சொல்லுவார். 19அந்த இறைவாக்கினன் என் பெயரில் சொல்லும் என் வார்த்தைகளுக்கு யாராவது செவிகொடாமல்போனால், நான் நானே அவனிடம் கணக்குக்கேட்பேன். 20ஆனால் நான் கட்டளையிடாத வார்த்தையை என் பெயரில் பேசத் துணியும் இறைவாக்கு உரைப்போனும், வேறு தெய்வங்களின்பேரில் பேசுகிற தீர்க்கதரிசியும் கொல்லப்படவேண்டும்.”
21“இந்தச் செய்தி யெகோவாவினால் கொடுக்கப்படாதது என்று நாங்கள் எப்படி அறிவோம்?” என்று நீங்கள் உங்கள் இருதயத்தில் எண்ணிக்கொள்ளலாம். 22ஒரு இறைவாக்கினன் யெகோவாவின் பெயரில் அறிவிப்பது நடக்காமலும், உண்மையாய் நிறைவேறாமலும் போனால், அது யெகோவாவினால் பேசப்படாத செய்தி. அத்தீர்க்கதரிசி துணிகரமாய் பேசுபவன், நீங்கள் அவனுக்குப் பயப்படவேண்டாம்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in