உபாகமம் 14
14
சுத்த அசுத்த உணவுகள்
1நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவின் பிள்ளைகள். ஆகவே நீங்கள் இறந்தவர்களுக்காக உங்களை வெட்டிக்கொள்ளவோ, தலைகளின் முன்பக்கத்தைச் சிரைக்கவோவேண்டாம். 2நீங்களே உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குரிய பரிசுத்தமான மக்கள். அவர் பூமியின் மீதுள்ள எல்லா மக்களிலும் உங்களையே தமக்கு அருமையான உரிமைச்சொத்தாய் இருக்கும்படி தெரிந்தெடுத்திருக்கிறார்.
3அருவருப்பான எதையும் நீங்கள் சாப்பிடவேண்டாம். 4நீங்கள் சாப்பிடக்கூடிய மிருகங்களாவன: மாடு, செம்மறியாடு, வெள்ளாடு, 5மான், வெளிமான், கலைமான், காட்டாடு, புள்ளிமான், சருகுமான், மலையாடு ஆகியன. 6இரண்டாக விரிந்த குளம்புடையதும், இரையை அசைப்போடுகிறதுமான எந்த மிருகத்தையும் நீங்கள் சாப்பிடலாம். 7சில மிருகங்கள் இரையை அசைப்போடுகிறதாய் மட்டும் இருக்கின்றன, சில மிருகங்கள் குளம்புகள் விரிந்ததாய் மட்டும் இருக்கின்றன. இவற்றில் ஒட்டகம், முயல், குழிமுயல் ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது. ஏனெனில், இவை இரையை அசைபோட்டாலும் அவற்றுக்குப் விரிந்த குளம்புகள் இல்லை. ஆகையால் சம்பிரதாய முறைப்படி அவை உங்களுக்கு அசுத்தமானவை. 8பன்றியும் அசுத்தமானது. ஏனெனில், அதற்கு விரிந்த குளம்பு இருந்தாலும், அது இரையை அசைப்போடுகிறதில்லை. நீங்கள் அவற்றின் இறைச்சியைச் சாப்பிடவோ, அவற்றின் செத்த உடலை தொடவோகூடாது.
9நீரில் வாழும் உயிரினங்களில் துடுப்புகளும், செதில்களும் உள்ள எதையும் நீங்கள் சாப்பிடலாம். 10துடுப்புகளும் செதில்களும் இல்லாத வேறொன்றையும் நீங்கள் சாப்பிடக்கூடாது. அவை உங்களுக்கு அசுத்தமானவை.
11சுத்தமான எந்தப் பறவையையும் 12நீங்கள் சாப்பிடலாம். நீங்கள் சாப்பிடக்கூடாத பறவைகளாவன: கழுகு, கருடன், கடலூராஞ்சி, 13செம்பருந்து, கரும்பருந்து, எல்லாவித வல்லூறுகள், 14சகலவித அண்டங்காக்கைகள், 15தீக்கோழி, ஆந்தை, கடல் பறவை, எல்லாவித பருந்துகள், 16சிறு ஆந்தை, பெரிய ஆந்தை, வெள்ளை ஆந்தை, 17பாலைவன ஆந்தை, கூழக்கடா, நீர்க்காகம், 18கொக்கு, எல்லாவித நாரை, புழுக்கொத்தி, வவ்வால் ஆகியனவாகும்.
19பறக்கும் பூச்சி வகைகளில் யாவும் உங்களுக்கு அசுத்தமானவை. அவற்றைச் சாப்பிடவேண்டாம். 20சிறகுள்ள உயிரினங்களில் சுத்தமானவற்றை நீங்கள் சாப்பிடலாம்.
21ஏற்கெனவே இறந்து கிடக்கிறதாக நீங்கள் காணும் எதையும் சாப்பிடவேண்டாம். உங்கள் பட்டணங்களில் ஒன்றில் வாழும் அந்நியனுக்கு அவற்றைக்கொடுங்கள், அவன் சாப்பிடட்டும் அல்லது வேறு நாட்டவனுக்கு விற்றுவிடுங்கள். ஏனெனில் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பரிசுத்தமான மக்கள் நீங்களே.
வெள்ளாட்டுக்குட்டியை அதன் தாயின் பாலில் சமைக்கவேண்டாம்.
பத்திலொரு பாகம்
22ஒவ்வொரு வருடமும் உங்கள் வயல்நிலம் விளைவிக்கும் எல்லாவற்றிலும் இருந்து பத்திலொருபாகத்தைப் புறம்பாக்கிவைக்கக் கவனமாயிருங்கள். 23உங்கள் தானியம், புதுத் திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவற்றின் பத்திலொரு பங்கையும் மாட்டு மந்தை, ஆட்டு மந்தை ஆகியவற்றின் தலையீற்றையும், உங்கள் இறைவனாகிய யெகோவா தமது பெயர் விளங்கும் வசிப்பிடமாக தெரிந்துகொள்ளும் இடத்தில் அவருக்கு முன்பாக சாப்பிடுங்கள். அப்பொழுது நீங்கள் எப்பொழுதும் உங்கள் இறைவனாகிய யெகோவாவிடத்தில் பயபக்தியாயிருக்கக் கற்றுக்கொள்வீர்கள். 24யெகோவா தமது பெயர் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் இடம் தூரமாய் இருக்கலாம். அவ்வாறு தூரமாய் இருப்பதினால் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களை ஆசீர்வதிக்கும்போது, உங்கள் பத்திலொரு பங்கைச் சுமந்துகொண்டு அங்குபோக உங்களால் முடியாதிருக்கலாம். 25அப்பொழுது உங்கள் பத்திலொரு பங்கை வெள்ளிக்கு பதிலீடுசெய்து, அந்த வெள்ளியை உங்களுடன் எடுத்துக்கொண்டு உங்கள் இறைவனாகிய யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்துக்குப் போங்கள். 26அங்கேபோய், அந்த வெள்ளிக்கு செம்மறியாடுகளையோ மாடுகளையோ திராட்சை இரசத்தையோ அல்லது மதுபானத்தையோ நீங்கள் விரும்பும் எதையும் வாங்குங்கள். பின்பு நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு முன்பாக நீங்களும், உங்கள் வீட்டாரும் அவற்றைச் சாப்பிட்டுக் களிகூருங்கள். 27ஆனாலும் உங்கள் பட்டணங்களில் இருக்கும் லேவியரை மறவாதீர்கள். ஏனெனில் அவர்களுக்குச் சொந்தமாக நிலப்பங்குகளோ உரிமைச்சொத்தோ இல்லை.
28ஒவ்வொரு மூன்று வருட முடிவிலும் அந்த வருட விளைச்சலின் பத்திலொருபங்கைக் கொண்டுவந்து, உங்கள் பட்டணங்களில் உள்ள களஞ்சியங்களில் சேர்த்துவையுங்கள். 29இவற்றில், தங்களுக்குச் சொந்தமான நிலப்பங்கும், உரிமைச்சொத்தும் இல்லாமல் உங்கள் பட்டணத்தில் வாழும் லேவியரும், அந்நியரும், தகப்பன் இல்லாதவர்களும், விதவைகளும் வந்து சாப்பிட்டுத் திருப்தியடையட்டும். அப்பொழுது உங்கள் இறைவனாகிய யெகோவா நீங்கள் கையிட்டுச்செய்யும் எல்லா வேலைகளையும் ஆசீர்வதிப்பார்.
Currently Selected:
உபாகமம் 14: TCV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.