தானியேல் 5
5
பெல்ஷாத்சாரின் விருந்து
1பல வருடங்களுக்குப்பின் பெல்ஷாத்சார் அரசன் தனது பெருங்குடி மக்கள் ஆயிரம்பேருக்கு பெரிய விருந்தொன்றை செய்து, அவர்களுடன் திராட்சை இரசம் குடித்துக்கொண்டிருந்தான். 2பெல்ஷாத்சார் திராட்சை இரசத்தைக் குடித்துக் கொண்டிருக்கும்போது, தன் தகப்பன் நேபுகாத்நேச்சார் எருசலேம் ஆலயத்திலிருந்து கொண்டுவந்திருந்த தங்கக் கிண்ணங்களையும், வெள்ளிக் கிண்ணங்களையும் கொண்டுவரும்படி உத்தரவிட்டான். அவனும் அவனுடைய பெருங்குடி மக்களும், அவனுடைய மனைவியரும், அவனுடைய வைப்பாட்டிகளும் அவைகளில் குடிக்கும்படியே கொண்டுவரும்படி சொன்னான். 3அவ்வாறே எருசலேமிலுள்ள இறைவனின் ஆலயத்திலிருந்து எடுக்கப்பட்ட தங்கக் கிண்ணங்களைக் கொண்டுவந்தார்கள். அவற்றிலே அரசனும், அவனுடைய பெருங்குடி மக்களும், அவனுடைய மனைவிகளும், அவனுடைய வைப்பாட்டிகளும் குடித்தார்கள். 4அவர்கள் திராட்சை இரசத்தைக் குடித்துக் கொண்டிருக்கையில் தங்கம், வெள்ளி, வெண்கலம், இரும்பு, மரம், கல் ஆகியவற்றாலான தெய்வங்களைப் புகழ்ந்தார்கள்.
5திடீரென, அரண்மனையின் குத்துவிளக்கின் அருகே மனித கைவிரல்கள் தோன்றி, சுவர்களில் மேல்பூச்சில் எழுதின. அந்தக் கை எழுதுவதை பார்த்துக்கொண்டிருந்த அரசனின் 6முகம் பயத்தினால் வேறுபட்டது. அவன் மிகவும் பயந்ததினால், முழங்கால்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. கால்களும் வலுவிழந்து போயின.
7பின்பு அரசன் மாந்திரீகர்கள், சோதிடர்கள், குறிசொல்வோர் ஆகியோரைக் கொண்டுவரும்படி கூப்பிட்டான். அவன் அந்த பாபிலோனின் ஞானிகளிடம், “இதில் இருக்கும் எழுத்தை வாசித்து, அதன் விளக்கத்தை எனக்குச் சொல்லுகிறவன் சிவப்பு பட்டு உடை உடுத்தப்பட்டு, கழுத்திற்கு தங்க மாலையும் அணிவிக்கப்பட்டு, இந்த அரசாட்சியில் மூன்றாவது பெரிய ஆளுநனாக ஏற்படுத்தப்படுவான் என்றான்.”
8அரசனுடைய எல்லா ஞானிகளும் உள்ளே வந்தார்கள். ஆனால் சுவரில் எழுதியிருந்த எழுத்தை வாசிக்கவோ, அதன் விளக்கத்தை அரசனுக்குச் சொல்லவோ அவர்களால் முடியவில்லை. 9அப்பொழுது பெல்ஷாத்சார் அரசன் இன்னும் அதிகமாய்ப் பயந்து, அவனுடைய முகமும் அதிகமாய் வேறுபட்டது. அவனுடைய பெருங்குடி மக்களும் கலக்கமடைந்தனர்.
10அவ்வேளையில் அங்கு நடந்தவற்றினால் ஏற்பட்ட கூச்சலைக்கேட்ட அரசனின் தாய், விருந்து மண்டபத்திற்குள் விரைந்து வந்தாள். அவள், “அரசே, நீர் நீடூழி வாழ்க. நீர் இதனால் கலங்கவோ, உமது முகம் வேறுபவோ வேண்டியதில்லை. 11உமது அரசில் பரிசுத்த தெய்வங்களின் ஆவியைப்பெற்ற ஒரு மனிதன் இருக்கிறான். அவன் உமது தந்தையின் காலத்தில் தெய்வங்களுக்குரிய நுண்ணறிவும், புத்திக்கூர்மையும், ஞானமும் உள்ளவனாய் காணப்பட்டான். அதனால் உமது தந்தை நேபுகாத்நேச்சார் அவனை மந்திரவாதிகளுக்கும், மாந்திரீகர்களுக்கும், சோதிடருக்கும், குறிசொல்பவர்களுக்கும் தலைவனாக நியமித்தார். 12பெல்தெஷாத்சார் என அரசனால் பெயரிடப்பட்ட இந்த மனிதனான தானியேல் மதிநுட்பமும், அறிவும், விளங்கிக்கொள்ளும் தன்மையும் உடையவனாய் காணப்பட்டான். அத்துடன் கனவுகளுக்கு விளக்கம் கூறுவதற்கும், விடுகதைகளை விடுவிப்பதற்கும், பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் ஆற்றல் உடையவனாயிருந்தான். தானியேலைக் கூப்பிடும். அவன் அந்த எழுத்துகளுக்கு அர்த்தத்தைச் சொல்வான் என்றாள்.”
13எனவே தானியேல் அரசனின் முன் கொண்டுவரப்பட்டான். அரசன் அவனிடம், “அரசனாகிய எனது தந்தை யூதாவிலிருந்து சிறைப்பிடித்து வந்தவர்களில் ஒருவனாகிய தானியேல் நீ தானா? 14உன்னிடத்தில் பரிசுத்த தெய்வங்களின் ஆவி இருப்பதாகவும், நுண்ணறிவும், புத்திக்கூர்மையும், சிறந்த ஞானமும் உண்டெனவும் கேள்விப்பட்டேன். 15அந்த எழுத்தை வாசிக்கவும், அதன் அர்த்தத்தைச் சொல்லவும் ஞானிகளும், சாஸ்திரிகளும் எனக்கு முன்பாகக் கொண்டுவரப்பட்டார்கள். ஆனால் அதற்கு விளக்கம்கூற அவர்களால் முடியவில்லை. 16இப்பொழுது உனக்கு விளக்கம் கூறவும், கடினமான பிரச்சனைகளைத் தீர்க்கவும் ஆற்றல் உண்டு எனக் கேள்விப்பட்டேன். அந்த எழுத்தை வாசித்து, அதன் விளக்கத்தை எனக்கு உன்னால் கூறமுடியுமானால், உனக்கு சிவப்பு பட்டு உடை உடுத்தப்பட்டு, உனது கழுத்திற்கு தங்க மாலையும் அணிவிக்கப்பட்டு, அதோடு எனது அரசில் மூன்றாம் பெரிய ஆளுநனாக நியமிக்கப்படுவாய் என்றான்.”
17அதற்குத் தானியேல் அரசனிடம், “உமது அன்பளிப்புகளை நீரே வைத்துக்கொள்ளும். உமது வெகுமதிகளை வேறு யாருக்காவது கொடும். ஆயினும் அரசருக்கான அந்த எழுத்தை வாசித்து, அதன் விளக்கத்தை நான் சொல்வேன்.
18“அரசே, மகா உன்னதமான இறைவன் உமது தகப்பன் நேபுகாத்நேச்சாருக்கு ஆளுமையையும், மேன்மையையும், மகிமையையும், மகத்துவத்தையும் கொடுத்திருந்தார். 19அவர் உமது தந்தைக்குக் கொடுத்த அந்த உயர்ந்த நிலைமையினால் மக்களும், நாடுகளும், பல்வேறு மொழி பேசும் மனிதரும் அரசனுக்குப் பயமும் அச்சமும் உடையவர்களாயிருந்தார்கள். அரசர் யாரைக் கொல்ல நினைத்தாரோ அவர்களைக் கொலைசெய்தார். தான் விடுவிக்க விரும்பியவர்களை விடுவித்தார். தான் பதவி உயர்த்த விரும்பியவர்களை பதவி உயர்த்தினார். தான் தாழ்த்த விரும்பியவர்களைத் தாழ்த்தினார். 20ஆனால் அவரது இருதயம் கர்வங்கொண்டு அகந்தையினால் கடினப்பட்டபோது, அவர் தனது அரியணையிலிருந்து தள்ளப்பட்டார். அவருக்குக் கொடுக்கப்பட்ட மகிமையும் எடுக்கப்பட்டது. 21அவர் மக்களிடமிருந்து துரத்தப்பட்டார். மிருகத்தின் மனம் அவருக்குக் கொடுக்கப்பட்டது. அவர் காட்டுக்கழுதைகளுடன் வாழ்ந்து, ஆடு மாடுகளைப்போல் புல்லைத் தின்றார். மகா உன்னதமான இறைவனே மனிதரின் அரசாட்சிக்கு மேலாக ஆளுமை உடையவர் என்றும், தாம் விரும்பியவர்களையே அதில் அமர்த்துவார் என்றும் உமது தந்தை உணர்ந்துகொள்ளும்வரை அவருடைய உடல் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது.
22“ஆனால் அவருடைய மகனாகிய பெல்ஷாத்சாராகிய நீரோ இவைகளையெல்லாம் அறிந்திருந்தும் உம்மைத் தாழ்த்தவில்லை. 23மாறாக, பரலோகத்தின் இறைவனுக்கு எதிராக நீர் உம்மை உயர்த்தினீர். அவருடைய ஆலயத்தின் கிண்ணங்களைக் கொண்டுவரச்செய்து, நீரும், உமது பெருங்குடி மக்களும், உமது மனைவிகளும், வைப்பாட்டிகளும் அதில் திராட்சை இரசம் குடித்தீர்கள். நீரோ தங்கம், வெள்ளி, வெண்கலம், இரும்பு, மரம், கல் ஆகியவற்றால் செய்யப்பட்டவையும் பார்க்கவோ, கேட்கவோ, விளங்கிக்கொள்ளவோ முடியாதவையுமான தெய்வங்களைப் புகழ்ந்தீர். ஆனால் உமது உயிரையும், வழிகளையும் தமது கையில் வைத்திருக்கும் இறைவனை நீர் மேன்மைப்படுத்தவில்லை. 24எனவே இறைவன் அந்த கையை அனுப்பினார். அது அந்த எழுத்துக்களை எழுதிற்று.
25“எழுதப்பட்ட எழுத்துக்கள்
மெனெ, மெனெ, தெக்கேல் உபார்சின் என்பதே.
26“இந்த எழுத்துக்களின் அர்த்தமாவது:
“மெனெ: என்பதன் விளக்கம் இறைவன் உனது ஆட்சிக்காலத்தைக் கணக்கிட்டு, அதை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்து விட்டார்” என்பதாகும்.
27 “தெக்கேல்: என்பதன் விளக்கம், ‘நீ தராசில் நிறுக்கப்பட்டு குறைவுடையவனாய் காணப்பட்டிருக்கிறாய்’ என்பதாகும்.
28 “உபார்சின்: என்பதன் விளக்கம், ‘உனது அரசு பிரிக்கப்பட்டு மேதியருக்கும், பெரிசியருக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது’ என்பதாகும்” என்றான்.
29அப்பொழுது பெல்ஷாத்சார் தானியேலுக்கு இரத்தாம்பரத்தையும், அவனுடைய கழுத்தில் தங்கச்சங்கிலியையும் அணிவிக்கவும், ராஜ்ஜியத்திலே அவன் மூன்றாம் அதிகாரியாயிருப்பவன் என்று அவனைக்குறித்துப் பறைசாற்றவும் கட்டளையிட்டான்.
30அந்த இரவே பாபிலோன் அரசன் பெல்ஷாத்சார் கொலைசெய்யப்பட்டான். 31மேதியனாகிய தரியு தனது அறுபத்திரண்டாம் வயதில் அரசாட்சியை எடுத்துக்கொண்டான்.
Currently Selected:
தானியேல் 5: TCV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.