YouVersion Logo
Search Icon

தானியேல் 12

12
முடிவுகாலம்
1“அக்காலத்தில் உன் மக்களைப் பாதுகாக்கிற பிரதான அதிபதிகளில் ஒருவனாகிய மிகாயேல் எழும்புவான். எந்தவொரு நாடுகளும் தோன்றியதிலிருந்து அதுவரை ஒருபோதும் நிகழ்ந்திராத துன்பகாலம் ஒன்று வரும். ஆனால் அந்தக் காலத்திலே புத்தகத்தில் தங்களுடைய பெயர்கள் எழுதப்பட்டவர்களாகக் காணப்படுகிற உனது மக்கள் விடுவிக்கப்படுவார்கள். 2பூமியில் புழுதியில் புதைக்கப்பட்டிருக்கிற மக்கள் கூட்டங்கள் எழுந்திருப்பார்கள். சிலர் நித்திய வாழ்வுக்கும், மற்றவர்கள் நித்திய வெட்கத்திற்கும், இழிவுக்கும் எழுந்திருப்பார்கள். 3ஞானமுள்ளவர்கள் வானங்களின் பிரகாசத்தைப்போலவும், பலரை நேர்மைக்கு வழிநடத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றும் பிரகாசிப்பார்கள். 4ஆனால் தானியேலே, நீயோ புத்தகச்சுருளின் வார்த்தைகளை முடிவு காலம்வரைக்கும் மூடி முத்திரையிட்டு வை. பலர் அங்குமிங்கும் ஓடித் தேடுவார்கள். அறிவோ வளரும் என்றார்.”
5அப்பொழுது தானியேலாகிய நான் பார்க்கையில், ஆற்றுக்கு இக்கரையில் ஒருவனும், அக்கரையில் ஒருவனுமாக இன்னும் இருவர் எனக்கு முன்பாக நிற்பதைக் கண்டேன். 6அவர்களில் ஒருவன் மென்பட்டு உடை உடுத்தி, ஆற்றின் தண்ணீரின்மேல் நின்ற மனிதனிடம், “இந்தத் திகைப்பூட்டும் சம்பவங்கள் நிறைவேற எவ்வளவு காலம் எடுக்கும் என்று கேட்டான்?”
7அப்பொழுது மென்பட்டு உடை உடுத்தி ஆற்றின் தண்ணீரின்மேல் நின்ற மனிதன் தன் வலதுகையையும், இடதுகையையும் வானத்தை நோக்கி உயர்த்தி, என்றென்றும் வாழ்கிறவர் மேல் ஆணையிட்டு, “ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லும். கடைசியாக பரிசுத்த மக்களின் வல்லமை முறியடிக்கப்படுவது முடிவுக்கு வரும்போது இவை முழுவதும் நிறைவேறும் என்று சொல்லக்கேட்டேன்.”
8நான் கேட்டேன்; ஆனால் எனக்கோ அது விளங்கவில்லை. எனவே நான் அவரிடம், “ஐயா, இவை எல்லாவற்றினதும் முடிவு என்னவாகும் என்று கேட்டேன்?”
9அப்பொழுது அவர், “தானியேலே, உன் வழியில் போ; ஏனெனில், கடைசிக் காலம் வரும்வரைக்கும் இந்த வார்த்தைகள் மூடி முத்திரையிடப் பட்டிருக்கின்றன என எனக்குப் பதிலளித்தார். 10அநேகர் தூய்மையாக்கப்பட்டு, கறையற்றவர்களாக்கப்பட்டு சுத்திகரிக்கப்படுவார்கள். ஆயினும் கொடுமையானவர்கள் தொடர்ந்து கொடுமையானவர்களாகவே இருப்பார்கள். கொடுமையானவர்களில் யாரும், இவற்றை விளங்கிக்கொள்ளமாட்டார்கள். ஞானமுள்ளவர்களோ, விளங்கிக்கொள்வார்கள்.
11“அன்றாட பலி நிறுத்தப்பட்டு, பாழாக்கும் அருவருப்பு வைக்கப்பட்டது முதல் 1,290 நாட்கள் செல்லும். 12இவ்வாறு 1,335 நாள்வரை காத்திருந்து அதன் முடிவைக் காண்கிறவன் ஆசீர்வதிக்கப்படுவான்.
13“நீயோ முடிவு வரும்வரை உன் வழியே போ; நீ இளைப்பாறும் நாட்களின் முடிவில், உனக்கென நியமிக்கப்பட்டிருக்கும் உரிமைச்சொத்தை அடைவதற்கு நீ எழுந்திருப்பாய் என்றார்.”

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in