YouVersion Logo
Search Icon

தானியேல் 10

10
மனிதனைப்பற்றிய தரிசனம்
1பெர்சியாவின் அரசன் கோரேஸின் மூன்றாவது வருடத்திலே, “பெல்தெஷாத்சார்” என அழைக்கப்படும் தானியேலுக்கு ஒரு வெளிப்படுத்துதல் கொடுக்கப்பட்டது. அச்செய்தி உண்மையானது. அது ஒரு பெரிய யுத்தத்தைப்பற்றியது. அந்த செய்தியைப்பற்றிய விளக்கம் ஒரு தரிசனத்தின் மூலம் அவனுக்குக் கிடைத்தது.
2தானியேலாகிய நான் அந்நாட்களில் மூன்று வாரங்களுக்குத் துக்கங்கொண்டாடினேன். 3மூன்று வாரங்கள் முடியும் நாள்வரை நான் சிறந்த உணவைச் சாப்பிடவில்லை. இறைச்சியையோ, திராட்சை இரசத்தையோ என் உதடுகள் தொடவும் இல்லை. எனது உடலில் எண்ணெய் தேய்க்கவும் இல்லை.
4முதலாம் மாதம் இருபத்து நான்காம் நாளில், பெரிய ஆறான இதெக்கேல் ஆற்றின் கரையில் நான் நின்றேன். 5நான் கண்களை உயர்த்திப் பார்த்தபோது, எனக்கு முன்பாக மென்பட்டு உடை உடுத்தி, இடுப்பிலே ஊப்பாசின் சுத்த தங்கத்தால் செய்யப்பட்ட இடைக்கச்சையைக் கட்டிய ஒருவர் நின்றார். 6அவரது உடல் பத்மராகக் கல் போலிருந்தது. அவரது முகம் மின்னல் கீற்றுப்போலிருந்தது. அவரது கண்கள் சுடர் விட்டெரியும் பந்தங்கள் போலிருந்தன. அவரது கைகளும், கால்களும் துலக்கப்பட்ட வெண்கலத்தின் மினுக்கம் போலிருந்தன. அவரது குரல் மக்கள் கூட்டத்தின் சத்தம் போலிருந்தது.
7தானியேலாகிய நான் மட்டுமே அந்தத் தரிசனத்தைக் கண்டேன். என்னோடிருந்த மனிதர்கள் யாரும் அதனைக் காணவில்லை. ஆனால் அவர்கள் மிகவும் திகிலடைந்ததினால் ஓடி ஒளிந்துகொண்டார்கள். 8எனவே நான் மட்டுமே தனிமையில் விடப்பட்டு, அப்பெரிய தரிசனத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். என் உடல் தளர்ந்தது, என் முகமும் மாறி வாடியது, நான் எதுவும் செய்ய முடியாதவனாயிருந்தேன். 9அப்பொழுது அவர் பேசுவதை நான் கேட்டேன். அந்தச் சத்தத்தை நான் கேட்டவுடன் முகங்குப்புற தரையில் விழுந்து, ஆழ்ந்த நித்திரைக்குள்ளானேன்.
10உடனே ஒரு கரம் என்னைத் தொட்டு, நடுங்கிய என் கைகளையும் முழங்கால்களையும் உறுதியாக்கியது. 11பின் அவர் என்னிடம், “மிக மதிப்பிற்குரிய தானியேலே, நான் இப்பொழுது உனக்குச் சொல்லப்போகும் வார்த்தைகளைக் கவனமாகக் கேள். எழுந்து நில், ஏனெனில் நான் உன்னிடத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறேன் என்றார்.” இதை அவர் சொன்னபோது நான், நடுக்கத்தோடு எழுந்து நின்றேன்.
12அப்பொழுது அவர் தொடர்ந்து, “தானியேலே, நீ பயப்படவேண்டாம். நீ விளங்கிக்கொள்ளும் ஆற்றலைத் தேடவும், அதை அடையும்படி உன் மனதில் தீர்மானித்து, இறைவனுக்கு முன்பாக உன்னைத் தாழ்த்தவும் தொடங்கிய அந்த நாளிலிருந்தே, உன் வார்த்தைகள் கேட்கப்பட்டன. அந்த வார்த்தைகளுக்குப் பதில் கொடுக்கவே நான் வந்திருக்கிறேன். 13ஆனால் பெர்சியா அரசின் இளவரசன் இருபத்தொரு நாட்கள் என் வழியைத் தடுத்து நின்றான். பாரசீக அரசனிடம் நான் தடைப்பட்டு இருந்ததால், பிரதான அதிபதிகளில் ஒருவனாகிய மிகாயேல் எனக்கு உதவிசெய்ய வந்தான். 14இப்பொழுது உனது மக்களுக்கு வருங்காலத்தில் நிகழப்போவதை விளங்கப்பண்ணவே நான் வந்திருக்கிறேன். ஏனெனில் இந்தத் தரிசனம், வரப்போகும் அந்த நாட்களைப் பற்றியதே என்றான்.”
15அவன் என்னிடம் சொல்லும்போது, நான் பேச முடியாதவனாய் முகங்குப்புற விழுந்து வணங்கினேன். 16உடனே மனிதனைப் போன்ற ஒருவர் என் உதடுகளைத் தொட்டார். அப்பொழுது நான் என் வாயைத் திறந்து பேசத் தொடங்கினேன். நான் எனக்குமுன் நின்றவரைப் பார்த்து, “ஐயா, இந்தத் தரிசனத்தால் நான் வேதனையில் மூழ்கி, எதுவும் செய்யமுடியாதவனாய் இருக்கிறேன். 17ஐயா, உமது அடியவனாகிய நான் உம்மோடு எப்படிப் பேசலாம்? எனக்குப் பெலன் இல்லை. என்னால் மூச்சுவிடவும் முடியவில்லை என்றேன்.”
18திரும்பவும் மனிதனைப்போல் காணப்பட்ட அவர் என்னைத் தொட்டு எனக்குப் பெலன்தந்தார். 19“மிக மதிப்பிற்குரிய மனிதனே, பயப்படாதே. உன்னுடன் சமாதானம் இருப்பதாக. இப்பொழுது திடன்கொண்டு தைரியமாயிரு என்றார்.”
என்னுடன் அவர் அப்படிப் பேசியபோது, நான் பெலன்கொண்டு, “பேசும் ஐயா, நீர் எனக்கு பெலனைக் கொடுத்திருக்கிறீர்” என்று சொன்னேன்.
20தொடர்ந்து அவர் என்னிடம், “நான் ஏன் இங்கு வந்தேன் என்று உனக்குத் தெரியுமா? நான் மிக விரைவாக பெர்சிய இளவரசனுக்கு எதிராகத் திரும்பவும் சண்டைக்குப் போகப்போகிறேன். நான் போகிறபோது கிரேக்க இளவரசனும் என்னை எதிர்த்து வருவான். 21ஆனால் முதலில் நான் உனக்கு உண்மையின் புத்தகத்தில் என்ன எழுதி இருக்கிறது என்பதைச் சொல்கிறேன். உங்கள் இளவரசன் மிகாயேலைத் தவிர அந்த இளவரசர்களை எதிர்க்க வேறு ஒருவரும் எனக்கு உதவிசெய்யவில்லை.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in