YouVersion Logo
Search Icon

ஆமோஸ் 4

4
இஸ்ரயேல் இறைவனிடம் திரும்பவில்லை
1ஏழைகளை ஒடுக்கி, வறியவரை நசுக்கும் பெண்களே,
“எங்களுக்குக் குடிவகைகளைக் கொண்டுவாருங்கள்”
என உங்கள் கணவர்களிடம் சொல்லுகிறவர்களே,
இந்த வார்த்தையைக் கேளுங்கள்;
நீங்கள் சமாரியா மலையிலுள்ள பாசானின்
கொழுத்த பசுக்களைப்போல் இருக்கிறீர்கள்.
2எல்லாம் வல்ல ஆண்டவராகிய யெகோவா தமது பரிசுத்த பெயரினால் ஆணையிட்டார்:
“நிச்சயமாய் ஒரு காலம் வரும்.
அப்பொழுது நீங்கள் கொக்கிகளினாலும்,
உங்களில் எஞ்சியிருப்போரில் கடைசியானவர் வரைக்கும்
தூண்டில்களினாலும் இழுத்துக்கொண்டு செல்லப்படுவீர்கள்.
3நீங்கள் ஒவ்வொருவரும்
சுவர் வெடிப்புகளின் வழியாக ஓடிப்போவீர்கள்.
அர்மோன் மலைப் பக்கமாக நீங்கள் இழுத்தெறியப்படுவீர்கள்”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
4“சமாரியா மக்களே போங்கள்; பெத்தேலுக்குப் போய் பாவம் செய்யுங்கள்.
கில்காலுக்குப் போய் இன்னும் அதிக பாவம் செய்யுங்கள்.
காலைதோறும் உங்கள் பலிகளையும்,
மூன்று வருடத்திற்கொரு முறை உங்கள் பத்தில் ஒரு பாகத்தையும் கொண்டுவாருங்கள்.
5புளிப்பூட்டப்பட்ட அப்பத்தை நன்றிக் காணிக்கையாக எரியுங்கள்.
உங்கள் சுயவிருப்புக் காணிக்கையைப் பற்றி பெருமையாய் பேசி
அவற்றைக்குறித்துப் புகழுங்கள்,
இஸ்ரயேலரே, இவற்றைத் செய்வதற்குத்தானே நீங்கள் விரும்புகிறீர்கள்”
என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
6“ஆனால் நான் உங்கள் நகரங்கள் ஒவ்வொன்றிலும் பட்டினியையும்,
பட்டணங்கள் ஒவ்வொன்றிலும் உணவுப் பற்றாக்குறையையும் கொண்டுவந்தேன்.
அப்படியிருந்தும், நீங்கள் என்னிடமாய்த் திரும்பவில்லை”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
7“அறுவடைக்கு இன்னும் மூன்று மாதம் இருக்கையில்
நான் வேண்டிய மழையை அனுப்பாமல் விட்டேன்.
நான் ஒரு நகரத்துக்கு மழையை அனுப்பி,
இன்னொரு நகரத்திற்கு அதை அனுப்பாமல் விட்டேன்.
ஒரு வயலுக்கு மழை பெய்தது.
இன்னொன்றோ மழையின்றிக் காய்ந்தது.
8மக்கள் ஊரூராகத் தண்ணீர் தேடி அலைந்து திரிந்தும்,
குடிப்பதற்குப் போதிய தண்ணீர் கிடைக்கவில்லை.
அப்படியிருந்தும் நீங்கள் என்னிடமாய்த் திரும்பவில்லை”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
9“பலமுறை உங்கள் தோட்டங்களையும், திராட்சைத் தோட்டங்களையும் தாக்கினேன்.
நான் அவற்றைக் கருகல் நோயினாலும், பூஞ்சணத்தினாலும் தாக்கினேன்.
உங்கள் அத்திமரங்களையும், ஒலிவ மரங்களையும் வெட்டுக்கிளிகள் தின்று முடித்தன.
அப்படியிருந்தும் நீங்கள் என்னிடமாய்த் திரும்பவில்லை”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
10“நான் எகிப்தில் செய்ததுபோல,
உங்கள் மத்தியில் கொள்ளைநோயை அனுப்பினேன்.
உங்கள் வாலிபரை வாளினால் கொன்றேன்.
அவர்களுடன் கைப்பற்றப்பட்ட உங்கள் குதிரைகளையும் கொன்றேன்;
கூடாரங்களின் துர்நாற்றத்தினால் உங்கள் நாசிகளை நிரப்பினேன்.
அப்படியிருந்தும் நீங்கள் என்னிடமாய்த் திரும்பவில்லை”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
11“நான் சோதோம், கொமோராவை கவிழ்த்துப் போட்டதுபோல்,
உங்களில் சிலரையும் கவிழ்த்துப் போட்டேன்.
நீங்கள் நெருப்பினின்று இழுத்தெடுக்கப்பட்ட கொள்ளியைப்போல் இருந்தீர்கள்.
அப்படியிருந்தும் நீங்கள் என்னிடமாய்த் திரும்பவில்லை”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
12“ஆகவே இஸ்ரயேலே, நான் உனக்குச் செய்யப்போவது இதுவே;
இதை நான் செய்யப்போவதால், இஸ்ரயேலே,
உன் இறைவனை நீ சந்திக்க ஆயத்தப்படு.”
13மலைகளை உருவாக்குகிறவரும்,
காற்றை உண்டாக்குகிறவரும் அவரே,
மனிதனுக்குத் தன் எண்ணங்களை வெளிப்படுத்துகிறவரும்,
அதிகாலையில் வெளிச்சத்தை இருளாக மாற்றுகிறவரும் அவரே,
பூமியின் உயர்ந்த மேடுகளில் நடக்கிறவரும் அவரே,
சேனைகளின் இறைவனாகிய யெகோவா என்பது அவர் பெயர்.

Currently Selected:

ஆமோஸ் 4: TCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in