YouVersion Logo
Search Icon

அப்போஸ்தலர் 13

13
1அந்தியோகியாவில் இருந்த திருச்சபையிலே இறைவாக்கினரும், ஆசிரியரும் இருந்தார்கள். பர்னபா, நீகர் எனப்பட்ட சிமியோன், சிரேனேயைச் சேர்ந்த லூசியஸ், அரசனான ஏரோதுவுடன் வளர்ந்த மனாயீன், சவுல் ஆகியோரே இவர்கள். 2அவர்கள் கர்த்தரை வழிபட்டு உபவாசித்துக்கொண்டிருக்கையில், பரிசுத்த ஆவியானவர் அவர்களிடம், “நான் அவர்களை அழைத்த ஊழியத்திற்காக பர்னபாவையும் சவுலையும் எனக்கென வேறுபிரித்துவிடுங்கள்” என்றார். 3எனவே அவர்கள் உபவாசித்து மன்றாடியபின், தங்கள் கைகளை அந்த இருவர்மேலும் வைத்து, அவர்களை அனுப்பிவிட்டார்கள்.
சீப்புரு தீவிற்கு பிரயாணம்
4அவர்கள் இருவரும் பரிசுத்த ஆவியானவரால் வழியனுப்பப்பட்டு, செலூக்கியாவுக்குப்போய், அங்கிருந்து கப்பல் மூலமாய் சீப்புரு தீவுக்குச் சென்றார்கள். 5அவர்கள் சலாமி பட்டணத்திற்கு வந்து சேர்ந்தபோது, அங்குள்ள யூத ஜெப ஆலயங்களில் இறைவனுடைய வார்த்தையை அறிவித்தார்கள். மாற்கு எனப்பட்ட யோவான், அவர்களோடு அவர்களின் உதவியாளனாய் இருந்தான்.
6அவர்கள் அந்தத் தீவு முழுவதும் பிரயாணம் செய்து, பாப்போ பட்டணத்திற்கு வந்தார்கள். அங்கே அவர்கள் ஒரு யூத மந்திரவாதியும், பொய் தீர்க்கதரிசியுமான பர்யேசு என்னும் ஒருவனைச் சந்தித்தார்கள். 7அவன் செர்கியுபவுல் என்னும் அதிபதியின் உதவியாளனாய் இருந்தான். அறிவாற்றல் உள்ளவனான அந்த அதிபதி, இறைவனுடைய வார்த்தையைக் கேட்க விரும்பியதால், பர்னபாவையும் சவுலையும் அழைத்துவர ஆளனுப்பினான். 8ஆனால் மந்திரவாதி எலிமா அவர்களை எதிர்த்து நின்று, அந்த அதிபதி விசுவாசிக்காதபடி தடைசெய்ய முயற்சித்தான். எலிமா என்பது மந்திரவாதி என்ற அவனது பெயரின் அர்த்தமாகும். 9அப்பொழுது பவுல் என்று அழைக்கப்பட்ட சவுல் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, நேரே எலிமாவைப் பார்த்துச் சொன்னதாவது, 10“பிசாசின் பிள்ளையே, எல்லா நீதிக்கும் பகைவனே, நீ எல்லாவித ஏமாற்றுக்களினாலும் தந்திரங்களினாலும் நிறைந்திருக்கிறாய். கர்த்தருடைய நேர்வழிகளைப் புரட்டுவதை நீ ஒருபோதும் நிறுத்தமாட்டாயோ? 11இப்பொழுதே, கர்த்தருடைய கரம் உனக்கு எதிராய் இருக்கிறது. நீ இப்பொழுது குருடனாகி கொஞ்சக் காலத்திற்கு சூரிய வெளிச்சத்தைக் காணமாட்டாய்” என்றான்.
உடனே அவன் பார்வை மங்கியது, இருளும் சூழ்ந்தது. அவன் கைகளினால் தடவி, தன் கையைப் பிடித்து நடத்துவதற்கு ஒருவனைத் தேடினான். 12நடந்ததை அந்த அதிபதி கண்டபோது, அவன் கர்த்தருடைய போதனையைக்குறித்து வியப்படைந்து விசுவாசித்தான்.
பிசிதியாவிலுள்ள அந்தியோகியாவில் பவுல்
13பாப்போ பட்டணத்திலிருந்து, பவுலும் அவனுடைய கூட்டாளிகளும் கப்பல் மூலமாய் பம்பிலியாவிலுள்ள பெர்கேவுக்குச் சென்றார்கள். யோவான் எருசலேமுக்குத் திரும்பிப் போவதற்காக அங்கிருந்து அவர்களைவிட்டுப் போனான். 14அவர்கள் பெர்கேவிலிருந்து பிசீதியாவைச் சேர்ந்த அந்தியோகியாவுக்குச் சென்றார்கள். ஓய்வுநாளிலே அவர்கள் ஜெப ஆலயத்திற்குள்ளே போய் உட்கார்ந்தார்கள். 15மோசேயின் சட்டமும், இறைவாக்குகளும் வாசிக்கப்பட்ட பின்பு, ஜெப ஆலயத் தலைவர்கள் அவர்களுக்குச் செய்தி அனுப்பி, “சகோதரரே, மக்களை உற்சாகப்படுத்தக்கூடிய செய்தி உங்களிடம் இருந்தால், நீங்கள் பேசுங்கள்” என்றார்கள்.
16பவுல் எழுந்து, தன் கையால் அவர்களுக்கு சைகை காட்டிச் சொன்னதாவது: “இஸ்ரயேல் மக்களே, இறைவனுக்குப் பயப்படுகிற மக்களே, எனக்குச் செவிகொடுங்கள். 17இஸ்ரயேல் மக்களின் இறைவன், நமது தந்தையரைத் தெரிந்துகொண்டார்; அவர் அந்த மக்களை, அவர்கள் எகிப்தில் தங்கியிருந்த காலத்தில் செழிப்படையச் செய்தார். பின்பு அவர் தம்முடைய மிகுந்த வல்லமையினால், அந்த நாட்டிலிருந்து அவர்களை வெளியே கொண்டுவந்தார். 18ஏறக்குறைய நாற்பது வருடங்களாக பாலைவனத்திலே அவர்களின் நடத்தையைச் சகித்துக்கொண்டார். 19கானானில் இருந்த ஏழு நாட்டு மக்களை மேற்கொண்டு, அவர்களுடைய நாட்டைத் தமது மக்களுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுத்தார். 20இவையெல்லாம் நடந்து முடிய நானூற்றைம்பது வருடங்கள் ஆயிற்று.
“இதற்குப்பின், இறைவாக்கினன் சாமுயேலின் காலம்வரைக்கும், இறைவன் அவர்களுக்கு நீதிபதிகளைக் கொடுத்தார். 21பின்பு மக்கள் தங்களுக்கு ஒரு அரசனைத் தரும்படி கேட்டார்கள். அப்பொழுது இறைவன் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த கீசுவின் மகனான சவுலை அவர்களுக்கு அரசனாகக் கொடுத்தார். அவன் நாற்பது ஆண்டுகள் ஆட்சிசெய்தான். 22இறைவன் சவுலை நீக்கியபின், தாவீதை அவர்களுக்கு அரசனாக ஏற்படுத்தினார்.” இறைவன் தாவீதைக்குறித்து சாட்சியாக: “ஈசாயின் மகனான தாவீது என் இருதயத்திற்கு உகந்த மனிதனாய் இருப்பதை நான் கண்டேன்; அவன் செய்யவேண்டும் என்று நான் விரும்பின எல்லாவற்றையும் அவன் செய்வான்” என்று சொன்னார்.
23“தாவீதினுடைய சந்ததியிலே, அவர் வாக்குப்பண்ணியபடி, இயேசு என்னும் இரட்சகரை, இஸ்ரயேலுக்கு இறைவன் கொண்டுவந்தார். 24இயேசுவின் வருகைக்கு முன்னதாக, எல்லா இஸ்ரயேல் மக்களுக்கும் மனந்திரும்புதலைக்குறித்தும் திருமுழுக்கைக்குறித்தும் யோவான் ஸ்நானகன் பிரசங்கித்தான். 25யோவான் தனது ஊழியத்தை நிறைவேற்றியபோது, அவன் சொன்னதாவது: ‘நான் யாரென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? நான் அவர் அல்ல. அவர் எனக்குப்பின் வருகிறார். அவருடைய பாதரட்சையை அவிழ்ப்பதற்கும் நான் தகுதியற்றவன்.’
26“சகோதரரே, ஆபிரகாமின் பிள்ளைகளே, இறைவனுக்குப் பயந்து நடக்கிற யூதரல்லாத மக்களே, இந்த இரட்சிப்பின் செய்தி நமக்கே அனுப்பப்பட்டிருக்கிறது. 27எருசலேமின் மக்களும், அவர்களுடைய ஆளுநர்களும், இயேசுவை யாரெனப் புரிந்துகொள்ளவில்லை. ஆனால் அவருக்கு மரணதண்டனையைக் கொடுத்ததின் மூலம், ஒவ்வொரு ஓய்வுநாளிலும் வாசிக்கப்படும் இறைவாக்கினரின் வார்த்தைகளை நிறைவேற்றிவிட்டார்கள். 28இயேசுவுக்கு மரண தண்டனை கொடுக்கக்கூடிய தகுந்த ஆதாரம் எதுவும் கிடைக்காத போதுங்கூட, அவருக்கு மரணத்தீர்ப்பே கொடுக்கப்படவேண்டும் என்று அவர்கள் பிலாத்துவைக் கேட்டுக்கொண்டார்கள். 29இயேசுவைக்குறித்து வேதத்தில் எழுதியிருப்பதையெல்லாம் அவர்கள் செய்துமுடித்த பின்பு, அவருடைய உடலை சிலுவையிலிருந்து கீழே இறக்கி, அதைக் கல்லறையில் வைத்தார்கள். 30ஆனால் இறைவனோ இயேசுவை மரித்தோரிலிருந்து உயிருடன் எழுப்பினார். 31இயேசுவோடுகூட கலிலேயாவிலிருந்து எருசலேமுக்கு வந்திருந்தவர்களுக்கு பல நாட்கள் அவர் காணப்பட்டார். அவர்கள் இன்று நமது மக்களுக்கு சாட்சிகளாய் இருக்கிறார்கள்.
32“நாங்கள் உங்களுக்கு நற்செய்தியையே சொல்கிறோம்: இறைவன் நமது தந்தையருக்கு வாக்குப்பண்ணியதை 33இயேசுவை உயிருடன் எழுப்பியதாலேயே அவருடைய பிள்ளைகளாகிய நமக்கென்று நிறைவேற்றியிருக்கிறார். இது இரண்டாம் சங்கீதத்தில் எழுதியிருக்கிறது:
“ ‘நீர் என்னுடைய மகன்;
இன்று நான் உமக்குத் தந்தையானேன்.’#13:33 சங். 2:7
34அவரை இனி ஒருபோதும் அழிவுக்குட்படுத்தாதபடி, இறைவன் அவரை இறந்தோரிலிருந்து எழுப்பினார் என்ற உண்மை, இந்த வேதவசனங்களில் சொல்லப்பட்டிருக்கிறது:
“ ‘தாவீதுக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்ட பரிசுத்தமானதும் நிச்சயமானதுமான ஆசீர்வாதங்களை நான் உங்களுக்குத் தருவேன்.’#13:34 ஏசா. 55:3
35அப்படியே இது இன்னுமொரு இடத்தில்,
“ ‘உமது பரிசுத்தர் அழிவைக் காணவும் நீர் விடமாட்டீர்,’#13:35 சங். 16:10 (எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதியைப் பார்க்கவும்)
என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
36“தாவீது இறைவனுடைய நோக்கத்தைத் தன் தலைமுறையினரிடையே செய்து முடித்தபோது, அவன் நித்திரையடைந்தானே; அவன் தனது முற்பிதாக்களுடன் அடக்கம்பண்ணப்பட்டு, அவனது உடலும் அழிந்துபோனது. 37ஆனால் இறந்தோரிலிருந்து இறைவனால் உயிரோடு எழுப்பப்பட்டவரோ, அழிவைக் காணவில்லை.
38“ஆகையால் என் சகோதரரே, ‘இயேசுவின் மூலமே உங்கள் பாவங்களுக்கான மன்னிப்பு உண்டு என்று உங்களுக்கு அறிவிக்கப்படுகிறது’ என்பதை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும் என நான் விரும்புகிறேன். 39மோசேயினுடைய சட்டத்தின் மூலமாய் நீதிமான்களாக்கப்பட முடியாதிருந்த எல்லாப் பாவங்களிலுமிருந்தும் விடுதலையாகி, இயேசுவை விசுவாசிக்கிற ஒவ்வொருவரும், அவர் மூலமாய் நீதிமான்களாக்கப்படுகிறார்கள். 40ஆனால் இறைவாக்கினர் சொன்னது உங்களுக்கு நடக்காதபடி கவனமாயிருங்கள் என்று பவுல் சொன்னதாவது:
41“ ‘பாருங்கள், ஏளனம் செய்வோரே!
அதிசயப்பட்டு சிதறிப்போங்கள்.
ஏனெனில் உங்கள் நாட்களிலே நான் ஒரு காரியத்தைச் செய்யப்போகிறேன்.
அதை யாராவது உங்களுக்குச் சொன்னாலும்,
நீங்கள் ஒருபோதும் நம்பமாட்டீர்கள்.’ ”#13:41 எபி. 1:5
42பவுலும் பர்னபாவும் ஜெப ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டபோது, இந்தக் காரியங்களைக்குறித்து அடுத்த ஓய்வுநாளிலேயும் பேசும்படி மக்கள் அவர்களை அழைத்தார்கள். 43கூடியிருந்த மக்கள் கலைந்துபோனபின், அநேக யூதரும், யூத விசுவாசத்தை பின்பற்றிய பக்தியுள்ளோரும், பவுலையும் பர்னபாவையும் பின்பற்றினார்கள். பவுலும் பர்னபாவும் தங்களோடு வந்தவர்களுடன் பேசி, அவர்களை இறைவனுடைய கிருபையில் தொடர்ந்து இருக்கும்படி உற்சாகப்படுத்தினார்கள்.
44அடுத்த ஓய்வுநாளிலே ஏறக்குறைய பட்டணத்திலுள்ள அனைவரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேட்கும்படி கூடியிருந்தார்கள். 45மக்கள் பெருங்கூட்டமாய் கூடியிருப்பதை யூதர்கள் கண்டபோது, அவர்கள் பொறாமையினால் நிறைந்து, அவர்கள் பவுல் சொல்வதற்கு எதிரிடையாய் பேசி, விரோதித்து தூஷித்தார்கள்.
46அப்பொழுது பவுலும், பர்னபாவும் துணிவுடன் அவர்களுக்குப் பதிலளித்துச் சொன்னதாவது: “இறைவனுடைய வார்த்தையை நாங்கள் உங்களுடனே முதலாவதாக பேசவேண்டியிருந்தது. ஆனால் நீங்கள் அதைப் புறக்கணித்து, நீங்கள் உங்களை நித்திய வாழ்வுக்குத் தகுதியுள்ளவர்கள் என்று எண்ணாமல் இருக்கிறதினால், நாங்கள் இப்போது யூதரல்லாத மக்களிடம் போகிறோம். 47ஏனெனில், கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது இதுவே:
“ ‘பூமியின் கடைமுனை வரையிலுள்ள அனைவருக்கும்
நீ என் இரட்சிப்பைக் கொண்டுசெல்லும்படி,
நான் உன்னை யூதரல்லாத மக்களுக்கு ஒரு வெளிச்சமாக ஏற்படுத்தியிருக்கிறேன்.’#13:47 ஏசா. 49:6
48யூதரல்லாத மக்கள் இதைக் கேட்டபோது, மிகவும் மகிழ்ச்சியடைந்து, கர்த்தரின் வார்த்தையை மேன்மைப்படுத்தினார்கள்; நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்ட அனைவரும் விசுவாசித்தார்கள்.
49அந்த நாடெங்கும், கர்த்தருடைய வார்த்தை பரவியது. 50ஆனால் யூதர்கள் பக்தியும், உயர்ந்த மதிப்புக்குரிய பெண்களையும் அந்தப் பட்டணத்திலுள்ள முதன்மைவாய்ந்தவரையும் தூண்டிவிட்டார்கள். அவர்கள் துன்புறுத்தலை ஏற்படுத்தி, பவுலையும் பர்னபாவையும் அந்தப் பகுதியிலிருந்து துரத்திவிட்டார்கள். 51எனவே பவுலும் பர்னபாவும் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக, தங்களுடைய காலிலிருந்த தூசியை உதறிவிட்டு, இக்கோனியா பட்டணத்திற்குச் சென்றார்கள். 52சீடர்களோ மகிழ்ச்சியினாலும் பரிசுத்த ஆவியானவரினாலும் நிரப்பப்பட்டார்கள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy