2 சாமுயேல் 23
23
தாவீதின் இறுதி வார்த்தைகள்
1தாவீதின் இறுதி வார்த்தைகள் இவையே:
“ஈசாயின் மகனான தாவீதின் இறைவாக்கு:
மகா உன்னதமானவரால் உயர்த்தப்பட்ட மனிதன்
இந்த இறைவாக்கைச் சொன்னான். அவன் யாக்கோபின் இறைவனால் அபிஷேகம் செய்யப்பட்டவன்.
அவன் இஸ்ரயேலில் பாடல்களைப் பாடுபவன்.
2“யெகோவாவின் ஆவியானவர் என் மூலமாகப் பேசினார்.
அவரது வார்த்தை என் நாவிலிருந்தது.
3இஸ்ரயேலின் இறைவன் என்னிடம் பேசி, இஸ்ரயேலின்
கற்பாறையானவர் என்னிடம் சொன்னதாவது:
‘ஒருவன் நியாயத்துடன் மனிதர்களை அரசாளும்போதும்,
இறை பயத்துடன் ஆட்சி செய்யும்போதும்,
4அவன் காலையில் மேகங்களால்
மூடப்படாத சூரியனின் ஒளியைப்போல் இருப்பான்.
பூமியிலிருந்து புல்லை முளைக்கச் செய்யும் மழையின்
பின் தோன்றும் செழிப்பைப் போலவும் இருப்பான்.’
5“எனது குடும்பம் இறைவனுக்கு உகந்ததாய் இருக்கவில்லையா?
அவர் என்னுடன் ஒரு நித்திய உடன்படிக்கையை செய்யவில்லையா?
அதை ஒழுங்குபடுத்தியும், எல்லாப் பக்கத்திலும் பாதுகாத்துமிருந்தாரே.
அவர் எனது இரட்சிப்பை முழுமையாக்க மாட்டாரோ.
அவர் எனது எல்லா விருப்பத்தையும் நிறைவேற்ற மாட்டாரோ.
6கையால் சேர்க்கப்படாத முட்களைப்போல்
தீய மனிதர்கள் வெளியே வீசப்பட வேண்டும்.
7ஆனால் முட்களைத் தொடுகிற எவனும்
இரும்பு ஆயுதத்தையோ அல்லது ஈட்டியையோ பயன்படுத்துகிறான்.
அவை கிடக்கும் இடத்திலேயே எரித்துப் போடப்படும்.”
தாவீதின் வலிமையுள்ள மனிதர்
8தாவீதின் வலிமைவாய்ந்த வீரர்களின் பெயர்கள்:
தக்கெமோனியனான யோசேப்பாசெபெத் அந்த மூவரில் முக்கியமானவன். இவன் ஒரு போர்முனையில் எண்ணூறு பேரைக் குத்திக் கொன்றான்.
9அவனுக்கு அடுத்தாக அகோகியனான தோதோவின் மகன் எலெயாசார் என்பவன். இவன் பெலிஸ்தியர் பாஸ்தம்மீம் என்னும் இடத்தில் போருக்குக் கூடியிருந்தபோது, தாவீதுடன் இருந்து பெலிஸ்தியரை நிந்தித்த வலிமைமிக்க மூவரில் ஒருவன். அவ்வேளையில் இஸ்ரயேலர் பின்வாங்கி ஓடினார்கள். 10ஆனாலும் இவனே நிலைநின்று தன் கை சோர்ந்து, வாளோடு விறைத்துப் போகும்வரை பெலிஸ்தியரை வெட்டி வீழ்த்தியவன். அன்றையதினம் யெகோவா பெரும் வெற்றியைக் கொடுத்தார். போர்வீரர் எலெயாசாரிடம் திரும்பினார்கள். இறந்தவர்களிடம் கொள்ளையிட மட்டுமே அவனிடம் திரும்பி வந்தார்கள்.
11அடுத்தவன் ஆகேயின் மகன் சம்மா என்னும் ஆராரியன். ஒருமுறை பெலிஸ்தியர் சிறுபயறு நிறைந்து விளைந்திருந்த இடத்திலே ஒன்றாகத் திரண்டிருந்தபோது இஸ்ரயேலர் அவர்களிடமிருந்து தப்பி ஓடினார்கள். 12ஆனால் சம்மாவோ வயல் நடுவில் நின்று தனியாக பெலிஸ்தியரை எதிர்த்து, அவர்களைக் கொன்று அதைக் காத்துக்கொண்டான். யெகோவா பெரும் வெற்றியைக் கொண்டுவந்தார்.
13அறுவடை காலத்தில் முப்பது படைத்தலைவர்களில் மூன்றுபேர் தாவீதைச் சந்திக்க அதுல்லாம் குகைக்கு வந்தார்கள். அப்பொழுது பெலிஸ்தியரின் படை ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் முகாமிட்டிருந்தது. 14அந்த நேரத்தில் தாவீது அரணான இடத்தில் இருந்தான். பெலிஸ்தியரின் படையோ பெத்லெகேமில் இருந்தது. 15தாவீது தாகமாயிருந்தபடியால், “யாராவது பெத்லெகேம் வாசலருகேயுள்ள கிணற்றிலிருந்து எனக்குக் குடிக்கத் தண்ணீர் கொண்டுவருவீர்களா?” என்று கேட்டான். 16எனவே அந்த மூன்று வீரரும் பெலிஸ்தியரின் முகாமின் உள்ளே சென்று பெத்லெகேம் வாசலருகேயுள்ள கிணற்றில் தண்ணீர் எடுத்துத் தாவீதிடம் கொண்டுவந்தார்கள். ஆனாலும் தாவீது அதைக் குடிக்க மறுத்தான். அதற்குப் பதிலாக யெகோவாவுக்குமுன் அதை ஊற்றினான். 17“யெகோவாவே, நான் இதைக் குடிப்பதை எண்ணிப்பார்க்கவும் கூடாது. இது தங்கள் உயிரைப் பணயம் வைத்துச் சென்ற வீரர்களின் இரத்தமல்லவா?” என்று சொல்லி தாவீது அதைக் குடிக்க மறுத்தான்.
இப்படிப்பட்ட செயல்களை இந்த மூன்று வீரர்களும் செய்தார்கள்.
18யோவாபின் சகோதரனும், செருயாவின் மகனுமான அபிசாய் என்பவன் அந்த மூன்றுபேரில் முதல்வனாயிருந்தான். இவனே ஈட்டியால் முந்நூறுபேரைக் கொலைசெய்து அந்த மூன்றுபேரைப்போல் பேர்பெற்றவனானான். 19அவன் அந்த மூன்று தலைவர்களில் அதிகமாய் மதிக்கப்படவில்லையோ? அவன் அவர்களுடன் சேர்க்கப்படாத போதிலும் அவர்களுக்குத் தளபதியானான்.
20கப்சேயேல் ஊரைச்சேர்ந்த யோய்தாவின் மகன் பெனாயா, மிகவும் பலமுள்ள போர்வீரனாயிருந்தான்; அவன் பல துணிச்சலான செயல்களைச் செய்திருந்தான். இவன் மோவாபியரில் இரண்டு சிறந்த வீரர்களை கொலைசெய்திருந்தான். அதோடு உறைபனி காலத்தில் ஒரு குழிக்குள் இறங்கி ஒரு சிங்கத்தையும் கொன்றான். 21அவன் ஒரு உடல் பருத்த எகிப்தியனை அடித்து வீழ்த்தினான். எகிப்தியன் தனது கையில் ஈட்டியை வைத்திருந்தும் பெனாயா ஒரு தடியுடன் எதிர்த்துப் போனான். அவன் ஈட்டியைப் பறித்து, அதனாலேயே எகிப்தியனைக் கொன்றான். 22இவ்விதமாக யோய்தாவின் மகன் பெனாயா பல வீரச்செயல்களைச் செய்தான். அவனும் மற்ற மூன்று தலைவர்களைப்போல் பிரபலமானவனாக இருந்தான். 23அந்த முப்பது தலைவர்களில் எவரையும்விட இவனே மதிப்புக்குரியவனாயிருந்தான். ஆனாலும் அந்த மூன்றுபேருள் இவன் சேர்க்கப்படவில்லை. தாவீது அவனைத் தன் மெய்க்காவலருக்குப் பொறுப்பாக நியமித்தான்.
24அந்த முப்பதுபேரின் பெயர்களாவன:
யோவாபின் சகோதரன் ஆசகேல்,
பெத்லெகேமைச் சேர்ந்த தோதோவின் மகன் எல்க்கானான்,
25ஆரோதியனான சம்மா,
ஆரோதியனான எலிக்கா,
26பல்தியனான ஏலேஸ்,
தெக்கோவியனான இக்கேசின் மகன் ஈரா,
27ஆனதோத்தியனான அபியேசர்,
ஊஷாத்தியனான மெபுன்னாயி,
28அகோகியனான சல்மோன்,
நெத்தோபாத்தியனான மகராயி,
29நெத்தோபாத்தியனான பானாவின் மகன் ஏலேப்,
பென்யமீனியரின் கிபியா ஊரைச்சேர்ந்த ரிபாயின் மகன் இத்தாயி,
30பிரத்தோனியனான பெனாயா,
காயாஸ் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவனான ஈத்தாயி,
31அர்பாத்தியனான அபிஅல்போன்,
பர்குமியனான அஸ்மாவேத்,
32சால்போனியனான எலியாபா,
யாசேனின் மகன்களில் ஒருவனான
யோனத்தான், 33ஆராரியனான சம்மா,
ஆராரியனான சாராரின் மகன் அகியாம்,
34மாகாத்தியனான அகஸ்பாயின் மகன் எலிப்பெலேத்,
கீலொனியனான அகிதோப்பேலின் மகன் எலியாம்,
35கர்மேலியனான எஸ்ராயி,
அர்பியனான பாராயி,
36சோபா ஊரானான நாத்தானின் மகன் ஈகால்,
காதியனான பானி,
37அம்மோனியனான சேலேக்,
செருயாவின் மகனும் யோவாபின் யுத்த ஆயுதங்களைச் சுமக்கிறவனுமான பேரோத்தியனான நகராய்,
38இத்திரியனான ஈரா,
இத்திரியனான காரேப்,
39ஏத்தியனான உரியா என்பவர்களே.
எல்லாமாக முப்பத்தேழுபேர் இருந்தார்கள்.
Currently Selected:
2 சாமுயேல் 23: TCV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.