YouVersion Logo
Search Icon

2 சாமுயேல் 15

15
அப்சலோமின் சூழ்ச்சி
1சிறிது காலத்தின்பின் அப்சலோம் ஒரு தேரையும், குதிரைகளையும், தனக்கு முன்னால் செல்லத்தக்க ஐம்பது பேரையும் தேடிக்கொண்டான். 2மேலும் அப்சலோம் அதிகாலையில் எழுந்து பட்டண வாசலுக்குச் செல்லும் பாதையோரத்தில் நிற்பான். யாராவது தன் முறையீட்டுடன் அரசனிடம் தீர்ப்பைக் கேட்க வரும்போது அப்சலோம் அவனைக் கூப்பிட்டு அவனிடம், “நீ எந்த பட்டணத்தான்?” என்று கேட்பான். அவன், “உமது அடியவன் இஸ்ரயேல் கோத்திரத்தைச் சேர்ந்தவன்” என்பான். 3அப்பொழுது அப்சலோம் அவனிடம், “பார், உன் வழக்கு உண்மையும் தகுதியுமானது. ஆனால் உன் முறையீட்டை விசாரிக்க அரசனின் பிரதிநிதி ஒருவனும் இல்லையே. 4மேலும் அப்சலோம், நான் இந்த நாட்டின் நீதிபதியாய் நியமிக்கப்பட்டால், வழக்கோ முறையீடோ உள்ள அனைவரும் என்னிடம் வரலாம். நான் அவனுக்கு நியாயம் வழங்கும்படி பார்த்துக்கொள்வேன்” என்பான்.
5அத்துடன் யாராவது அப்சலோம் முன்வந்து வணங்கினால் அவன் தன் கையை நீட்டி அவனை அணைத்து முத்தமிடுவான். 6இவ்விதமாகவே அப்சலோம் அரசனிடம் நீதி கேட்டு வரும் இஸ்ரயேலர் அனைவருக்கும் செய்து, இஸ்ரயேல் மக்களின் மனதைக் கவர்ந்தான்.
7நான்கு வருடங்களுக்குப் பின்பு அப்சலோம் அரசனிடம், “நான் யெகோவாவுக்குச் செய்துள்ள நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்கு எப்ரோனுக்குப் போவதற்கு என்னைப் போகவிடும். 8உமது அடியவன் சீரியாவிலுள்ள கேசூரில் இருக்கும்போது யெகோவா என்னை மறுபடியும் எருசலேமுக்குக் கொண்டுவந்தால், எப்ரோனிலே யெகோவாவை வழிபடுவேன் என்று இந்த நேர்த்திக்கடனைச் செய்தேன்” என்றான்.
9தாவீது அரசன் அப்சலோமிடம், “சமாதானத்தோடே போய்வா” என்றான். எனவே அவன் எப்ரோனுக்குப் போனான்.
10ஆனால் அப்சலோமோ இஸ்ரயேல் கோத்திரங்களுக்கெல்லாம் இரகசியமாய் தூதுவரை அனுப்பி, “எக்காள சத்தம் கேட்டவுடனே, நீங்கள், ‘அப்சலோமே எப்ரோனின் அரசன்’ என்று சத்தமிடுங்கள்” எனச் சொல்லியிருந்தான். 11எருசலேமிலிருந்து இருநூறுபேர் அப்சலோமோடு சென்றார்கள். அவர்கள் விருந்தாளிகளாய் அழைக்கப்பட்டிருந்தார்கள்; ஆனாலும் அப்சலோமின் சூழ்ச்சியைப்பற்றி ஒன்றுமே அறியாதவர்களாயிருந்தார்கள். 12அப்சலோம் பலிகளை செலுத்தும்போது, தாவீதின் ஆலோசகனான அகிதோப்பேல் என்னும் கீலொனியனை அவனுடைய சொந்தப் பட்டணமான கிலொவிலிருந்து வரும்படி ஆளனுப்பினான். அப்படியே சதித்திட்டமும் வலுவடைந்து, அப்சலோமின் ஆதரவாளர்களும் பெருகினார்கள்.
தாவீது தப்பியோடுதல்
13அப்பொழுது ஒரு தூதுவன் தாவீதிடம் வந்து, “இஸ்ரயேல் மக்களின் இருதயங்கள் அப்சலோமுடன் சேர்ந்திருக்கிறது” என்று சொன்னான்.
14இதைக் கேட்ட தாவீது தன்னுடன் எருசலேமில் இருந்த எல்லா அதிகாரிகளிடமும், “வாருங்கள் நாம் இங்கிருந்து தப்பியோடுவோம். இல்லையென்றால் நம்மில் ஒருவனும் அப்சலோமிடமிருந்து தப்பமாட்டோம். உடனே நாம் இவ்விடத்தை விட்டு புறப்படவேண்டும். இல்லாவிட்டால் அவன் நம்மைப் பிடிக்கும்படி விரைந்துவந்து நம்மேல் அழிவைக் கொண்டுவந்து பட்டணத்தையும் வாளுக்கு இரையாக்குவான்” என்றான்.
15அப்பொழுது அரச அதிகாரிகள் அரசனிடம், “எங்கள் தலைவனாகிய அரசன் சொன்னபடி செய்வதற்கு உமது அடியவராகிய நாங்கள் ஆயத்தமாயிருக்கிறோம்” என்றார்கள்.
16எனவே அரசன் தன் குடும்பத்தார் அனைவரும் பின்தொடர அவ்விடம்விட்டுப் புறப்பட்டான். ஆனாலும் தன் வைப்பாட்டிகள் பத்துப்பேரைத் தன் அரண்மனையைப் பார்த்துக்கொள்ளும்படி விட்டுப்போனான். 17இவ்வாறு அரசன் தன் மக்கள் அனைவரும் பின்தொடரப் புறப்பட்டான். அவர்கள் சிறிது தூரம் போனபின் தரித்து நின்றார்கள். 18அவனுடைய மனிதர்கள் கிரேத்தியர், பிலேத்தியர் என்பவர்களுடன் அணிவகுத்து அவனைக் கடந்து சென்றார்கள். காத்தூரிலிருந்து அவனுடன் வந்த அறுநூறு கித்தியரும் அரசனுக்கு முன்பாக அணிவகுத்துச் சென்றார்கள்.
19அப்பொழுது அரசன் கித்தியனான ஈத்தாயிடம், “நீ ஏன் எங்களுடன் வரவேண்டும்? நீ திரும்பிப்போய் அரசன் அப்சலோமுடன் தங்கியிரு. நீ உன் நாட்டிலிருந்து நாடுகடத்தப்பட்ட அந்நியன் அல்லவா? 20நீ நேற்றுதானே இங்கு வந்தாய்? நான் எங்கே போகிறேனென எனக்கே தெரியாமல் இருக்கும்போது, உன்னையும் எங்களுடன் அலைந்து திரியச் செய்வானேன்? நீ உன் உறவினரையும் கூட்டிக்கொண்டு திரும்பிப்போ; தயவும் உண்மையும் உங்களோடிருப்பதாக” என்றான்.
21அதற்கு ஈத்தாய் அரசனிடம், “யெகோவா இருப்பதும், என் தலைவராகிய அரசன் வாழ்வதும் நிச்சயம்போல, நீர் எங்கெல்லாம் இருப்பீரோ வாழ்விலும் சாவிலும் நானும் அங்கெல்லாம் இருப்பேன் என்பதும் நிச்சயம்” என்றான்.
22தாவீது ஈத்தாயிடம், “நீ முன்னால் அணிவகுத்துச் செல்” என்றான். எனவே கித்தியனான ஈத்தாய் அவனுடைய எல்லா மனிதருடனும், குடும்பங்களுடனும் அணிவகுத்துச் சென்றான்.
23மக்கள் எல்லோரும் கடந்துசெல்கையில் நாட்டுப்புற மக்கள் எல்லோரும் சத்தமிட்டு அழுதார்கள். அரசனும் கீதரோன் பள்ளத்தாக்கைக் கடந்து சென்றான். மக்கள் பாலைவனத்தை நோக்கிச் சென்றார்கள்.
24அவர்களுடன் சாதோக்கும் அங்கேயிருந்தான். அவனுடன் இருந்த லேவியர் இறைவனுடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்துகொண்டு சென்றனர். அவர்கள் இறைவனின் உடன்படிக்கைப் பெட்டியை இறக்கி வைத்தார்கள். மக்களனைவரும் பட்டணத்தைவிட்டு வெளியேறி முடியும்வரைக்கும் அபியத்தார் பலிகளைச் செலுத்தினான்.
25பின்பு அரசன் சாதோக்கிடம், “இறைவனுடைய பெட்டியை பட்டணத்திற்குத் திரும்பவும் கொண்டுபோங்கள். யெகோவாவின் கண்களில் எனக்குத் தயவு கிடைத்தால், அவர் என்னைத் திரும்பிவரச் செய்து உடன்படிக்கைப் பெட்டியையும் இறைவனின் உறைவிடத்தையும் மறுபடியும் காணச்செய்வார். 26ஆனால், ‘உன்மேல் எனக்குப் பிரியமில்லை’ என்று சொல்வாரானால் அவர் தனக்கு எது நல்லது எனத் தோன்றுகிறதோ அதை எனக்குச் செய்வாராக; நான் அதற்கு ஆயத்தமாயிருக்கிறேன்” என்றான்.
27மேலும் அரசன் சாதோக் என்னும் ஆசாரியனிடம், “நீ ஒரு தரிசனக்காரனல்லவா? நீ உன் மகன் அகிமாஸுடனும், அபியத்தாரின் மகன் யோனத்தானுடனும் சமாதானத்தோடே பட்டணத்திற்குத் திரும்பிப்போ. நீயும் அபியத்தாரும் உங்கள் இரண்டு மகன்களையும் உங்களுடன் கூட்டிக்கொண்டு போங்கள். 28உங்களிடமிருந்து எனக்கு செய்தி வருமட்டும் நான் காடுகளிலுள்ள துறைமுகங்களில் காத்திருப்பேன்” என்றான். 29எனவே சாதோக்கும், அபியத்தாரும் மறுபடியும் இறைவனுடைய பெட்டியை எருசலேமுக்கு கொண்டுபோய் அங்கே தங்கியிருந்தார்கள்.
30ஆனால் தாவீதோ துக்கத்துடன் அழுது, தன் தலையை மூடிக்கொண்டு, வெறுங்காலால் நடந்து ஒலிவமலையின்மேல் ஏறிச் சென்றான். அவனோடிருந்த மக்களனைவருங்கூட தங்கள் தலைகளை மூடிக்கொண்டு அழுதுகொண்டே போனார்கள். 31அப்பொழுது அப்சலோமோடு சேர்ந்து சூழ்ச்சி செய்தவர்களில் அகிதோப்பேலும் ஒருவன் என்று தாவீதுக்கு அறிவித்தார்கள். எனவே தாவீது, “யெகோவாவே! அகிதோப்பேலின் ஆலோசனைகளை மூடத்தனமாக்கிவிடும்” என்று மன்றாடினான்.
32மக்கள் இறைவனை வழிபடும் மலை உச்சிக்குத் தாவீது வந்து சேர்ந்தபோது, அர்கியனான ஊசாய் கிழிந்த மேலுடையுடனும், புழுதிபடிந்த தலையுடனும் தாவீதைச் சந்திக்கும்படி அங்கே ஓடிவந்தான். 33அப்பொழுது தாவீது அவனிடம், “நீ என்னுடன் வந்தாயானால் எனக்குப் பாரமாயிருப்பாய்; 34ஆகையால் நீ பட்டணத்திற்கு திரும்பிப்போய் அப்சலோமிடம், ‘அரசே, முன்பு உமது தகப்பனுக்கு பணியாளாய் இருந்ததுபோல் இப்போது உமக்குப் பணியாளனாயிருப்பேன்’ என்று சொல்; அப்பொழுது அகிதோப்பேலின் ஆலோசனையை பலனற்றதாகச்செய்ய எனக்கு நீ உதவுவாய். 35உன்னோடு அங்கே சாதோக், அபியத்தார் என்னும் ஆசாரியர்கள் இருப்பார்கள். நீ அரச அரண்மனையில் கேள்விப்படும் எதையும் அவர்களுக்குச் சொல். 36அங்கே அவர்களோடு சாதோக்கின் மகன் அகிமாஸும், அபியத்தாரின் மகன் யோனத்தானுமாக இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். கேள்விப்படும் எல்லா செய்தியுடனும் அவர்களை என்னிடம் அனுப்பு” என்று சொன்னான்.
37அப்படியே அப்சலோம் எருசலேம் பட்டணத்திற்குள் வரும்போது, தாவீதின் சிநேகிதனான ஊசாயும் அங்கு வந்துசேர்ந்தான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for 2 சாமுயேல் 15