YouVersion Logo
Search Icon

2 சாமுயேல் 11

11
பத்சேபாளும் தாவீதும்
1அரசர்கள் யுத்தத்துக்குச் செல்லும் வசந்தகாலத்தில், அரசனாகிய தாவீது யோவாபை, தன் ஆட்களோடும் இஸ்ரயேலின் படைவீரர் அனைவரோடும் யுத்தத்தை நடத்துவதற்கு அனுப்பினான். அவர்கள் அம்மோனியரை அழித்து ரப்பாவை முற்றுகையிட்டார்கள். தாவீதோ எருசலேமிலேயே தங்கியிருந்தான்.
2ஒரு மாலைவேளையில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து அரண்மனை மாடத்தில் உலாவிக்கொண்டிருந்தான். மாடத்திலிருந்து ஒரு பெண் குளித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். அந்தப் பெண் மிக அழகானவளாக இருந்தாள். 3எனவே தாவீது அவளைப்பற்றி அறிந்துவரும்படி ஒருவனை அனுப்பினான். அந்த மனிதன் தாவீதிடம், “அவள் எலியாமின் மகளும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமான பத்சேபாள் அல்லவா” என்றான். 4அப்பொழுது தாவீது அவளை அழைத்துவரும்படி தூதுவர்களை அனுப்பினான். அவள் வந்ததும் தாவீது அவளுடன் உடலுறவு கொண்டான். அவள் தன்னுடைய மாத விலக்கிலிருந்து தன்னைச் சுத்திகரித்துக்கொண்டு வந்திருந்தாள். அவள் தன் வீட்டுக்குப் போனாள். 5அதன்பின் அந்தப் பெண் கருவுற்று, “நான் கர்ப்பவதியாயிருக்கிறேன்” என தாவீதுக்குச் சொல்லியனுப்பினாள்.
6தாவீது யோவாபுக்கு ஆளனுப்பி, “ஏத்தியனான உரியாவை என்னிடம் அனுப்பு” எனச் சொல்லும்படி சொன்னான். அதன்படியே யோவாப் அவனைத் தாவீதிடம் அனுப்பினான். 7உரியா தாவீதிடம் வந்தபோது தாவீது அவனிடம், யோவாப் எப்படியிருக்கிறான் என்றும், யுத்த வீரர் எப்படியிருக்கிறார்கள் என்றும், யுத்தம் எப்படி நடக்கிறது என்றும் விசாரித்தான். 8பின் தாவீது உரியாவிடம், “உன் வீட்டிற்குப்போய் ஓய்வெடுத்து உன் மனைவியுடன் மகிழ்ந்திரு” என்று சொன்னான். எனவே உரியா அரண்மனையை விட்டு புறப்பட்டான். அவனுக்குப்பின்னே அரசனால் அவன் வீட்டுக்கு ஒரு அன்பளிப்பு அனுப்பப்பட்டது. 9ஆனால் உரியாவோ தன் வீட்டிற்குப் போகாமல் அரண்மனை வாசலில் தன் எஜமானின் பணியாட்களுடன் படுத்திருந்தான்.
10“உரியா வீட்டிற்குப் போகவில்லை” என்று தாவீதிற்கு அறிவித்தார்கள்; அப்பொழுது தாவீது உரியாவிடம், “நீ வெகுதூரத்திலிருந்து வந்தவனல்லவா? ஏன் உன் வீட்டிற்குப் போகவில்லை?” எனக் கேட்டான்.
11அப்பொழுது உரியா தாவீதிடம், “இஸ்ரயேல் மக்களும், யூதா மக்களும் உடன்படிக்கைப் பெட்டியுடன் கூடாரங்களில் தங்கியிருக்கிறார்கள். என் தலைவனாகிய யோவாபும் என் அரசரின் வீரரும் வயல்வெளிகளிலே முகாமிட்டிருக்கிறார்கள். அப்படியிருக்க நான் சாப்பிடவும், குடிக்கவும், என் மனைவியுடனிருக்கவும் எப்படி என் வீட்டிற்குப் போவேன். நீர் வாழ்வது நிச்சயம்போலவே அப்படியான செயலை ஒருபோதும் நான் செய்யமாட்டேன் என்பதும் நிச்சயம்” என்றான்.
12அதற்குத் தாவீது அவனிடம், “இன்னும் ஒரு நாள் இங்கே தங்கியிரு; நாளைக்கு நான் உன்னை திருப்பி அனுப்புவேன்” என்றான். எனவே உரியா அன்றும், மறுநாளும் எருசலேமில் தங்கியிருந்தான். 13தாவீதின் அழைப்பிற்கிணங்கி உரியா அவனுடன் சாப்பிட்டு, குடித்தான். தாவீது அவனை வெறியடையச் செய்தான். ஆனாலும் அன்று மாலையும் அவன் தன் வீட்டிற்குப் போகாமல் தன் தலைவனுடைய பணியாட்களுடனே தனது படுக்கையில் படுத்துக்கொண்டான்.
14அதிகாலையில் தாவீது ஒரு கடிதத்தை யோவாபுக்கு எழுதி உரியாவிடம் கொடுத்து அனுப்பினான். 15அக்கடிதத்தில், “போர் கடுமையாக நடக்கும்போது முன்னணியில் உரியாவை நிறுத்து; அவன் வெட்டுண்டு சாகும்படி அங்கே அவனைவிட்டு நீங்கள் பின்வாங்குங்கள்” என்று எழுதினான்.
16அப்படியே பட்டணத்தை யோவாப் முற்றுகையிட்டுக் கொண்டிருந்தபோது, தனக்குத் தெரிந்தபடி அப்பட்டணத்தின் வலிமைமிக்க பாதுகாப்பு வீரர் நிற்கும் இடத்தில் உரியாவை நிறுத்தினான். 17பட்டணத்திற்குள் இருந்த வீரர் வெளியே வந்து யோவாபுக்கு எதிராகப் போரிட்டபோது, தாவீதின் வீரர்களில் சிலர் இறந்தார்கள்; அவர்களுடன் ஏத்தியனான உரியாவும் செத்தான்.
18அப்பொழுது யோவாப் போரின் முழு விபரத்தையும் தாவீதுக்கு அறிவித்தான். 19யோவாப் தான் அனுப்பிய தூதுவனிடம் அறிவுறுத்திச் சொன்னதாவது: “நீ அரசனிடம் இந்தப் போரின் விபரத்தைச் சொல்லி முடிந்தவுடன், 20அரசன் ஒருவேளை கோபமடைந்து உன்னிடம், ‘நீங்கள் போரிடுவதற்கு பட்டணத்தை அவ்வளவு நெருங்கிப்போனது ஏன்? மதிலிலிருந்து அம்பு எறிவார்களென்று உங்களுக்குத் தெரியாதா? 21எருப்பேசேத்தின் மகன் அபிமெலேக்கைக் கொன்றது யார்? ஒரு பெண் நகர மதிலிலிருந்து திரிகைக்கல்லை எறிந்ததினால் அல்லவா அவன் தேபேசிலே இறந்தான். அப்படியிருக்க ஏன் மதிலுக்கு இவ்வளவு அருகில் போனீர்கள்?’ என்று கேட்டால், ‘ஏத்தியனான உரியா என்னும் உம்முடைய பணியாளனும் இறந்தான்’ என்று சொல்” என்றான்.
22அத்தூதுவன் புறப்பட்டு அங்கு போய்ச் சேர்ந்தவுடன் யோவாப் சொல்லி அனுப்பிய எல்லாவற்றையும் தாவீதுக்குச் சொன்னான். 23அவன் தாவீதிடம், “எதிரிகள் அதிக வல்லமையுடன் எங்களை மேற்கொண்டு வெளியில் எங்களுக்கு எதிராய் வந்தார்கள். ஆனால் நாங்களோ அவர்களைப் பட்டணவாசலுக்குள் திரும்பவும் துரத்தினோம். 24ஆனாலும் வில்வீரர் மதில் மேலிருந்து உம்முடைய வீரர்மேல் எய்ததினால் அரசனுடைய வீரர்கள் சிலர் இறந்தார்கள். அவர்களோடு உம்முடைய பணியாளனான உரியா என்னும் ஏத்தியனும் இறந்தான்” என்றான்.
25அப்பொழுது தாவீது அந்தத் தூதுவனிடம், “நீ யோவாபிடம் போய் இதனால் நீ கலக்கமடைய வேண்டாம்; வாள் ஒருவனை இரையாக்குவதுபோல் இன்னொருவனையும் இரையாக்கும். எனவே தாக்குதலைப் பலப்படுத்தி பட்டணத்தை அழிக்கும்படி யோவாபுக்குச் சொல்லி அவனைத் திடப்படுத்து” என்றான்.
26தன் கணவன் இறந்ததை உரியாவின் மனைவி கேட்டபோது அவனுக்காகத் துக்கங்கொண்டாடினாள். 27துக்ககாலம் முடிந்தபின் தாவீது அவளைத் தன் வீட்டிற்குக் கொண்டுவரச் செய்தான். அவள் அவனுக்கு மனைவியாகி ஒரு மகனைப் பெற்றாள். தாவீது செய்த இச்செயல் யெகோவாவுக்கு வெறுப்பாயிருந்தது.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in