YouVersion Logo
Search Icon

2 இராஜாக்கள் 9

9
யெகூவின் வரலாறு
1இறைவாக்கினனான எலிசா இறைவாக்கினர் கூட்டத்தில் ஒருவனைக் கூப்பிட்டு, “உனது மேலங்கியை இடைப்பட்டிக்குள் சொருகிக்கொண்டு, இந்த எண்ணெய் குப்பியையும் எடுத்துக்கொண்டு ராமோத் கீலேயாத்துக்குப் போ. 2நீ அங்கே போய்ச்சேர்ந்ததும், நிம்சியின் மகனான யோசபாத்தின் மகன் யெகூவை தேடு. அவனைக் கண்டதும் அவனுடைய தோழர்களிடமிருந்து அவனை எழுந்து வரும்படி கூறி, வீட்டின் உள்ளறைக்குள் கூட்டிக்கொண்டுபோ. 3அதன்பின் எண்ணெய் இருக்கும் குடுவையை எடுத்து அதை அவன் தலையின்மேல் ஊற்றி, ‘யெகோவா சொல்வது இதுவே: நான் உன்னை இஸ்ரயேலின்மேல் அரசனாக அபிஷேகம் பண்ணுகிறேன்’ என்று அறிவித்து, பின்பு கதவைத் திறந்து தப்பியோடு, தாமதியாதே” என்று கூறினான்.
4அப்படியே அந்த வாலிபனான இறைவாக்கினன் ராமோத் கீலேயாத்துக்குப் போனான். 5அவன் போய்ச் சேர்ந்தபோது இராணுவ உயர் அதிகாரிகள் ஒருமித்து இருந்ததைக் கண்டு, “தளபதியே உமக்கு ஒரு செய்தி உண்டு” என்றான்.
அப்போது யெகூ, “எங்களில் யாருக்கு?” என்று கேட்டான்.
அதற்கு அவன், “தளபதியே உமக்குத்தான்” என்றான்.
6யெகூ எழுந்து வீட்டுக்குள் போனதும் இறைவாக்கினன், யெகூவுடைய தலையில் எண்ணெயை ஊற்றிச் சொன்னதாவது, “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: ‘நான் உன்னை யெகோவாவின் மக்களாகிய இஸ்ரயேலருக்கு அரசனாக அபிஷேகம் பண்ணுகிறேன். 7நீ உன் தலைவனான ஆகாப் அரசனின் முழுக் குடும்பத்தையும் அழித்துவிடவேண்டும். யேசபேலினால் சிந்தப்பட்ட யெகோவாவின் எல்லா ஊழியக்காரரின் இரத்தத்துக்காகவும், என்னுடைய அடியவரான எல்லா இறைவாக்கினரின் இரத்தத்துக்காகவும் பழிவாங்குவேன். 8அடிமையாயிருந்தாலென்ன, சுதந்திரவாளியாயிருந்தாலென்ன இஸ்ரயேலில் ஆகாபின் குடும்பத்தில் ஒருவரும் மீந்திராதபடி எல்லா ஆண்களையும் அழித்துப்போடுவேன். 9ஆகாபின் குடும்பத்தை நேபாத்தின் மகன் யெரொபெயாமின் குடும்பத்தைப்போலவும், அகியாவின் மகனான பாஷாவின் குடும்பத்தைப்போலவும் ஆக்குவேன். 10யேசபேலுக்கோ என்றால், யெஸ்ரயேலின் வெளிநிலத்தில் நாய்கள் அவளைத் தின்னும். ஒருவரும் அவளை அடக்கம்பண்ணமாட்டார்கள்.’ ” இதைச் சொன்னபின்பு அவன் கதவைத் திறந்துகொண்டு ஓடித் தப்பினான்.
11யெகூ வெளியே வந்து தன் அதிகாரிகளிடம் போனபோது, அவர்களில் ஒருவன் அவனைப் பார்த்து, “என்ன நல்ல செய்தியா? இந்தப் பைத்தியக்காரன் உன்னிடம் ஏன் வந்தான்?” என்று கேட்டான்.
அதற்கு யெகூ, “அந்த மனுஷன் யார் என்றும், எப்படிப்பட்ட விஷயங்களைப் பேசுபவன் என்றும் உங்களுக்குத் தெரியும்தானே!” என்றான்.
12அதற்கு அவர்கள், “அப்படியல்ல. அதை எங்களுக்குச் சொல்” என்றார்கள்.
அதற்கு யெகூ, “அவன் எனக்குச் சொன்னது இதுவே, ‘யெகோவா சொல்வது இதுவே: நான் எல்லா இஸ்ரயேலருக்கும் உன்னை அரசனாக அபிஷேகம் பண்ணினேன்’ என்பதாகும்” என்றான்.
13அவர்கள் விரைவாக தங்கள் மேலாடைகளைக் கழற்றி அவனுக்குக் கீழே அந்தப் படிகளில் விரித்தார்கள். அதன்பின் எக்காளம் ஊதி, “யெகூவே அரசன்” என்று ஆரவாரித்தார்கள்.
யெகூ யோராமையும் அகசியாவையும் கொலைசெய்தல்
14நிம்சியின் மகனான யோசபாத்தின் மகன் யெகூ யோராமுக்கு எதிராகச் சதித்திட்டம் போட்டான். அந்நாட்களில் யோராம் எல்லா இஸ்ரயேலரோடும் சேர்ந்து ராமோத் கீலேயாத்தை சீரிய அரசனான ஆசகேலின்வசம் போய்விடாதபடி பாதுகாத்துக் கொண்டிருந்தான். 15ஆனால் யோராம் சீரிய அரசனான ஆசகேலுடன் செய்த யுத்தத்தில் சீரியரால் காயப்படுத்தப்பட்டு, அக்காயங்களை ஆற்றுவதற்கு யெஸ்ரயேலுக்குப் போயிருந்தான். அப்பொழுது யெகூ, “நீங்கள் எனக்கு ஆதரவாயிருந்தால் நகரத்தைவிட்டு யாரும் வெளியேறி யெஸ்ரயேலுக்குப்போய் இச்செய்தியை கூறிவிடாதபடி பாருங்கள்” என்று கூறினான். 16அப்பொழுது யெகூ இரதத்தின்மேல் ஏறி, யெஸ்ரயேலுக்கு நேராகப் போனான். யோராம் அங்கே வியாதியாகக் கிடந்தான்; யோராமைப் பார்க்க, யூதாவின் அரசனான அகசியாவும் அங்கே வந்திருந்தான்.
17யெஸ்ரயேலின் கோபுரத்திலிருந்து நகரத்தைக் காவல் செய்தவன் யெகூவின் படைகள் முன்னேறி வருவதைக் கண்டு, “சில படைகள் வருவதாகத் தெரிகிறது” என்று பலமாகச் சத்தமிட்டான்.
அப்பொழுது யோராம், “ஒரு குதிரைவீரனை அழைத்து, வருபவர்களைப் போய்ச் சந்தித்து, ‘சமாதானமாக வருகிறீர்களா’ என்று கேட்டுவரும்படி அனுப்புங்கள்” என்றான்.
18எனவே குதிரைவீரன் போய் யெகூவிடம், “சமாதானமாகவா வருகிறீர்கள் என்று அரசன் கேட்கிறான்” என்று கூறினான்.
அதற்கு யெகூ பதிலாக, “சமாதானத்தைப் பற்றி உனக்கென்ன? எனக்குப் பின்னால் தொடர்ந்து வா” என்றான்.
அப்பொழுது காவல் காப்பவன் அரசனிடம், “தூதுவன் அவர்களிடம்போய்ச் சேர்ந்துவிட்டான். ஆனால் அவன் திரும்பி வரவில்லை” என்று கூறினான்.
19அப்பொழுது அரசன் இரண்டாம் குதிரைவீரனையும் அனுப்பினான். அவன் அவர்களிடம் போய், “சமாதானமாகவா வருகிறீர்கள் என்று அரசன் கேட்கிறான்” என்று சொன்னான்.
யெகூ அவனையும் பார்த்து, “சமாதானத்தைப் பற்றி உனக்கென்ன? எனக்குப் பின்னால் தொடர்ந்து வா” என்றான்.
20காவலாளி அரசனிடம், “அவனும் அவர்களிடம்போய்ச் சேர்ந்துவிட்டான். ஆனால் திரும்பிவருவதாக இல்லை. தேரைச் செலுத்தும் விதத்தைப் பார்த்தால் நிம்சியின் மகன் யெகூவைப்போல் தெரிகிறது. அவன் ஒரு பைத்தியக்காரனைப் போலவே தேரை ஓட்டுகிறான்” என்றான்.
21உடனே யோராம், “என்னுடைய தேரை ஆயத்தப்படுத்துங்கள்” என்றான். அவர்கள் அவனுடைய தேரை ஆயத்தப்படுத்தியதும் இஸ்ரயேலின் அரசனான யோராமும் யூதாவின் அரசனான அகசியாவும் தங்கள் சொந்தத் தேர்களில் ஏறிக்கொண்டு யெகூவைச் சந்திக்கப் புறப்பட்டார்கள். யெஸ்ரயேலனாகிய நாபோத்துக்குச் சொந்தமான நிலத்தில் அவர்கள் யெகூவைச் சந்தித்தார்கள். 22யோராம் யெகூவை கண்டவுடன், “யெகூவே, சமாதானமாகவா வந்திருக்கிறாய்?” என்று கேட்டான்.
அதற்கு அவன், “உன் தாயாகிய யேசபேலின் விக்கிரக வணக்கங்களும், பில்லிசூனியங்களும் அளவுக்கு மிஞ்சியிருக்கும்வரை சமாதானம் எப்படியிருக்கும்” என்றான்.
23அதைக் கேட்டதும் யோராம், “அகசியாவே, இது துரோகம்” என்று சத்தமிட்டபடி தன் தேரைத் திருப்பிக்கொண்டு தப்பியோட பார்த்தான்.
24ஆனால் யெகூ தன் வில்லை வளைத்து யோராமின் தோள்களுக்கிடையில் எய்தான். அம்பு அவனுடைய இருதயத்தை ஊடுருவிச் சென்றதும் அவன் தன் தேரிலேயே விழுந்தான். 25அப்பொழுது யெகூ தனது அதிகாரியாகிய பித்காரிடம், “அவனை எடுத்து யெஸ்ரயேலனாகிய நாபோத்துக்குச் சொந்தமான தோட்டத்தில் எறிந்துவிடு. முன்பு ஒரு நாள் நானும் நீயும் இவனுடைய தகப்பனான ஆகாபுக்குப் பின்னால் தேரில் போகும்பொழுது, யெகோவா இவனைக் குறித்துச் சொன்ன இறைவாக்கை ஞாபகப்படுத்திக்கொள். 26அன்று யெகோவா, ‘நேற்று நான் நாபோத்தின் இரத்தத்தையும், அவன் மகன்களின் இரத்தத்தையும் கண்டேன் என்று அறிவிக்கிறார். இதே நிலத்தில் உன்னையும் நான் பழிவாங்குவேன் என்று யெகோவா அறிவிக்கிறார்’ என்று ஆகாபுக்குக் கூறியிருந்தார். ஆகவே இப்போது இவனைத் தூக்கி யெகோவாவின் வாக்குப்படி அந்தத் தோட்டத்தில் எறிந்துவிடு” என்று சொன்னான்.
27யூதாவின் அரசனான அகசியா நடந்தவற்றைக் கண்டபோது, பெத்ஹாகானுக்குப் போகும் பாதையில் தப்பி ஓடினான். யெகூ அவனையும் கொல்லுங்கள் என்று பலமாகக் கத்திக்கொண்டு அவனைத் துரத்திப் போனான். இப்லேயாமுக்கு அருகே உள்ள கூருக்கு ஏறிப்போகும் சரிவான பாதையில் அகசியாவை அவனுடைய தேரிலேயே வைத்து யெகூவின் படையினர் காயப்படுத்தினார்கள். ஆயினும் அவன் மெகிதோவுக்குத் தப்பி ஓடிப்போய் அங்கே இறந்தான். 28அவனுடைய வேலையாட்கள் அவனின் உடலை தேரில் வைத்து எருசலேமுக்குக் கொண்டுபோய் தாவீதின் நகரத்திலிருந்த அவனுடைய முற்பிதாக்களின் கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள். 29ஆகாபின் மகன் யோராமின் ஆட்சியின் பதினோராம் வருடத்தில் அகசியா யூதாவின் அரசனாகியிருந்தான்.
யேசபேல் கொல்லப்படுதல்
30யெகூ யெஸ்ரயேலுக்குப் போனான். யேசபேல் அதைக் கேள்விப்பட்டபோது, அவள் தன் கண்களுக்கு மை பூசி தன் தலையை அலங்கரித்துக்கொண்டு, ஜன்னலருகே பார்த்துக்கொண்டு நின்றாள். 31யெகூ வாசலுக்கு வந்தபோது யேசபேல் அவனைப் பார்த்து, “கொலைகாரனே! தன் எஜமானைக் கொலைசெய்த சிம்ரியைப் போன்றவனே! சமாதானத்துடன் வருகிறாயா” என்று கேட்டாள்.
32யெகூ மேலே நிமிர்ந்து ஜன்னலைப் பார்த்து, “எனக்குச் சார்பாக இருப்பவர்கள் யார்?” என்றான். இரண்டு மூன்று அதிகாரிகள் வெளியே அவனை எட்டிப் பார்த்தார்கள். 33அப்பொழுது யெகூ அவர்களிடம், “அவளைத் தூக்கி கீழே எறிந்துவிடுங்கள்” என்றான். அவர்கள் அவளைக் கீழே எறிந்தார்கள். அவளுடைய இரத்தம் சுவரிலும், குதிரைகளிலும் தெறித்தது. யெகூ அவளுக்கு மேலாக தேரைச் செலுத்தினான்.
34அவன் உள்ளே போய் சாப்பிட்டுக் குடித்து, “இந்தச் சபிக்கப்பட்ட பெண்ணை எடுத்துக்கொண்டுபோய் அடக்கம்பண்ணுங்கள். அவள் ஒரு அரசனின் மகள்” என்று கூறினான். 35ஆனால் அவளை அடக்கம்பண்ணுவதற்குப் போனபோது அவளுடைய மண்டையோட்டையும், கால்களையும், கைகளையும் தவிர வேறெதையும் காணவில்லை. 36அவர்கள் திரும்பிப்போய் அதை யெகூவுக்கு அறிவித்தபோது அவன் பதிலாக, “திஸ்பிய ஊரைச்சேர்ந்த யெகோவாவின் பணியாளன் எலியாவின் மூலம் யெகோவா கூறிய வார்த்தை இதுவே: யெஸ்ரயேலின் வெளிநிலத்தில் யேசபேலின் சதையை நாய்கள் தின்னும். 37யேசபேலின் உடல் யெஸ்ரயேல் நிலத்தின் வயல்வெளியின் எருவைப்போல கிடக்கும். அதைப் பார்க்கும் யாரும், ‘அது யேசபேல்’ என்று கூற முடியாமலிருக்கும் என்று சொல்லியிருந்தாரே” என்றான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in