YouVersion Logo
Search Icon

2 இராஜாக்கள் 5

5
நாகமான் சுகமடைதல்
1நாகமான் சீரிய அரசனின் படைத்தளபதியாய் இருந்தான். இவனைக் கொண்டு யெகோவா சீரியருக்கு வெற்றியைக் கொடுத்திருந்தபடியால், அவனுடைய எஜமானின் பார்வையில் இவன் மிகவும் மதிக்கப்பட்டவனாயும் முக்கியமானவனாயும் இருந்தான். இவன் பலம் வாய்ந்த ஒரு போர் வீரனாயிருந்தபோதும் குஷ்டரோகியாக இருந்தான்.
2இந்த வேளையில் சீரியரின் படைப் பிரிவினர் இஸ்ரயேலிலிருந்து சிறைப்பிடித்து வந்த கைதிகளுக்குள் இருந்த ஒரு சிறு பெண், நாகமானின் மனைவிக்கு வேலைக்காரியாக இருந்தாள். 3ஒரு நாள் அவள் தன் எஜமானியைப் பார்த்து, “எனது எஜமான் சமாரியாவிலிருக்கிற இறைவாக்கினனிடம் போவாராகில் அவர் இந்தக் குஷ்டரோகத்தைச் சுகப்படுத்திவிடுவார்” என்றாள்.
4இஸ்ரயேல் நாட்டிலிருந்து வந்த பெண் கூறியதை நாகமான் தன் அரசனிடம் கூறினான். 5சீரிய அரசன் அதற்குப் பதிலாக, “நீ போவது நல்லது. நான் இஸ்ரயேல் அரசனுக்கு ஒரு கடிதமும் தருவேன்” என்று கூறினான். எனவே நாகமான் பத்து தாலந்து வெள்ளியையும், ஆறாயிரம் சேக்கல் தங்கத்தையும் பத்து ஜோடி அலங்கார உடைகளையும் எடுத்துக்கொண்டு போனான். 6அவன் இஸ்ரயேல் அரசனிடம் கொண்டுசென்ற கடிதத்திலே, “எனது அடியவனாகிய நாகமானுடைய குஷ்டரோகத்தை நீர் சுகப்படுத்தும்படியாக இந்தக் கடிதத்துடன் அவனை உம்மிடம் அனுப்புகிறேன்” என்று எழுதப்பட்டிருந்தது.
7இஸ்ரயேல் அரசன் அக்கடிதத்தை வாசித்தபோது, தன் உடைகளைக் கிழித்து, “கொல்லவும், உயிர்பிக்கவும் நான் என்ன இறைவனா? இவன் ஏன் ஒருவனை என்னிடம் அனுப்பி, அவனுடைய குஷ்டரோகத்தைச் சுகப்படுத்தும்படி கேட்கிறான். என்னுடன் ஒரு சண்டையைத் தொடங்குவதற்கு எப்படி முயற்சி செய்கிறான் என்பதைக் கவனித்துப் பாருங்கள்” என்றான்.
8இஸ்ரயேல் அரசன் தன் உடைகளைக் கிழித்துக்கொண்டான் என்று எலிசா கேள்விப்பட்டான். அப்போது அவன், “நீர் ஏன் உம்முடைய உடைகளைக் கிழித்தீர்? அவன் என்னிடம் வரட்டும். அப்பொழுது இஸ்ரயேலில் ஒரு இறைவாக்கினன் இருக்கிறான் என்பதை அவன் அறிந்துகொள்வான்” என்று ஒரு செய்தியை இஸ்ரயேல் அரசனுக்கு அனுப்பினான். 9அப்படியே நாகமான் தன்னுடன் வந்த மனிதருடனும், குதிரைகள், தேர்களுடனும் எலிசாவின் வீட்டு வாசலுக்குப் போனான். 10எலிசா ஒரு தூதுவனை அனுப்பி அவனிடம், “நீர் போய் யோர்தானில் ஏழுமுறை குளியும். அப்போது உமது சரீரம் திரும்பவும் முன்போல் சுத்தமாகும்” என்று சொல்லச் சொன்னான்.
11ஆனால் நாகமானோ கடும் கோபம் கொண்டு, “அவர் என்னிடத்தில் வந்து, அவருடைய இறைவனாகிய யெகோவாவின் பெயரைச்சொல்லிக் கூப்பிட்டு தன் கையை வைத்து என் குஷ்டத்தைச் சுகப்படுத்துவார் என்றல்லவா நான் நினைத்திருந்தேன். 12இஸ்ரயேலிலுள்ள எல்லா ஆறுகளைக்காட்டிலும், தமஸ்குவிலுள்ள ஆப்னா, பர்பார் ஆகிய ஆறுகள் சிறந்தவையல்லவா? அவைகளில் நான் கழுவி சுத்தமாக மாட்டேனா” என்று கூறி கோபத்துடன் திரும்பிப்போனான்.
13ஆனால் அவனுடைய வேலையாட்கள் அவனிடம் போய், “என் தகப்பனே, அந்த இறைவாக்கினன் ஒரு பெரிய செயலைச் செய்யும்படி உம்மிடம் கூறியிருந்தால் அதைச் செய்திருக்க மாட்டீரோ? அப்படியானால் இப்போது, ‘கழுவிச் சுத்தமாகும்’ என்று சொல்லும்போது இன்னும் கூடுதலாக நீர் கீழ்ப்படிய வேண்டுமே” என்றார்கள். 14அப்பொழுது நாகமான் இறைவனுடைய மனிதன் தனக்குக் கூறியபடியே போய் யோர்தானில் ஏழுமுறை முழுகினான். அவனுடைய சதை புதுப்பிக்கப்பட்டு சுத்தமாகி ஒரு சிறுபிள்ளையின் சதையைப் போலாயிற்று.
15அதன்பின் நாகமானும் அவனுடைய எல்லா ஏவலாட்களும் இறைவனின் மனிதனிடம் திரும்பிப் போனார்கள். நாகமான் அவனுக்கு முன்னால் நின்று, “இஸ்ரயேலைத் தவிர உலகில் வேறெங்கேயாகிலும் இறைவன் இல்லை என்று இப்போது நான் அறிந்தேன். தயவுசெய்து உமது அடியவனிடமிருந்து சிறிய அன்பளிப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்றான்.
16ஆனால் எலிசாவோ, “நான் பணிசெய்கிற யெகோவா இருப்பது நிச்சயமெனில், நான் ஒன்றையும் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்பதும் நிச்சயம்” என்றான். நாகமான் அவற்றை ஏற்றுக்கொள்ளும்படி எவ்வளவோ அவனை வற்புறுத்தியும் அவன் மறுத்துவிட்டான்.
17அப்பொழுது நாகமான் எலிசாவைப் பார்த்து, “இவற்றை நீர் ஏற்றுக்கொள்ளாவிட்டால் தயவுசெய்து இரண்டு கோவேறு கழுதைகள் சுமக்கக்கூடிய அளவு மண்ணை அடியேனுக்குத் தாரும். உமது அடியவனாகிய நான் இனிமேல் யெகோவாவைத்தவிர வேறு எந்தத் தெய்வங்களுக்கும் தகன காணிக்கைகளையோ, வேறு பலிகளையோ ஒருபோதும் செலுத்தமாட்டேன். 18ஆனாலும் இந்த ஒன்றைமட்டும் யெகோவா உமது அடியவனுக்கு மன்னிப்பாராக. என்னவென்றால், எனது எஜமானாகிய அரசன் ரிம்மோன் கோவிலில் வணங்கச் செல்லும்போது என் கையிலேயே சாய்ந்துகொண்டு செல்வார். அந்த வேளையில் நானும் அவருடன் தலைகுனிவேன். அதை யெகோவா எனக்கு மன்னிப்பாராக” என்றான்.
19அதற்கு எலிசா, “சரி சமாதானத்தோடே போ” என்றான்.
நாகமான் சிறிது தூரம் போனதும் 20இறைவனுடைய மனிதனான எலிசாவின் வேலையாள் கேயாசி, “எனது எஜமான் இந்த சீரியனான நாகமான் கொண்டுவந்தவற்றை ஏற்றுக்கொள்ளாமல் அவனிடத்தில் அதிக தயவாக இருந்துவிட்டார். யெகோவா இருப்பது நிச்சயமெனில், நான் அவனுக்குப் பின்னாலே ஓடி அவனிடமிருந்து ஏதாவது ஒரு பொருளைக் கேட்டுவாங்குவேன்” என்று தனக்குள்ளே யோசித்தான்.
21அவ்வாறே நாகமானை அவசரமாய்ப் பின்தொடர்ந்தான். இவன் தன்னை நோக்கி ஓடிவருவதை நாகமான் கண்டு அவனைச் சந்திப்பதற்கு தேரிலிருந்து இறங்கி, கேயாசியிடம் “எல்லாம் சரியாக இருக்கிறதா?” என்று கேட்டான்.
22அதற்குக் கேயாசி, “எல்லாம் சரியாக இருக்கிறது. எப்பிராயீம் மலைநாட்டிலிருக்கும் இறைவாக்கினர் கூட்டத்திலிருந்து இரண்டு வாலிபர் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு தாலந்து#5:22 அதாவது, சுமார் 34 கிலோகிராம் வெள்ளி வெள்ளியையும், இரண்டு அங்கிகளையும் தயவுசெய்து தாரும் என்று எனது எஜமான் உம்மிடம் கேட்டுவரும்படி அனுப்பினார்” என்றான்.
23அப்பொழுது நாகமான் நீர் இரண்டு தாலந்து வெள்ளியை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் என்று கேயாசியை வற்புறுத்தி அவற்றை இரண்டு பைகளில் கட்டி, அத்துடன் இரண்டு அங்கிகளையும் சேர்த்து இரண்டு வேலையாட்களிடம் கொடுத்து அனுப்பினான். அவர்கள் கேயாசிக்கு முன்னாகத் தூக்கிக்கொண்டு சென்றார்கள். 24கேயாசி மலையருகே வந்தபோது வேலையாட்களிடமிருந்து அந்தப் பொருட்களை வாங்கி வீட்டின் ஒரு ஓரமாக வைத்தான். அதன்பின்பு நாகமானின் வேலையாட்களை அனுப்பிவிட்டான்.
25பின் அவன் உள்ளே போய் தன் எஜமானாகிய எலிசாவின் முன் நின்றான். எலிசா அவனிடம், “கேயாசியே இவ்வளவு நேரமும் எங்கேயிருந்தாய்?” என்று கேட்டான்.
அதற்கு கேயாசி, “உமது அடியவனாகிய நான் எங்குமே போகவில்லை” என்று பதிலளித்தான்.
26ஆனால் எலிசா அவனிடம், “அந்த மனிதர் உன்னைச் சந்திக்கத் தேரைவிட்டு இறங்கியபோது என்னுடைய ஆவியில் நான் உன்னோடுகூட இருக்கவில்லையா? பணம், அங்கிகள், ஒலிவத்தோப்புகள், திராட்சைத் தோட்டங்கள், செம்மறியாட்டு மந்தைகள், மாட்டு மந்தைகள், வேலைக்காரர், வேலைக்காரிகள் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ள இதுதானா சமயம்? 27ஆகையால் நாகமானின் குஷ்டரோகம் உன்னையும், உன் சந்ததிகளையும் எக்காலமும் பற்றிப் பிடித்துக்கொள்ளும்” என்றான். அப்பொழுது கேயாசி உறைபனியின் வெண்மையைப்போல் குஷ்டரோகி ஆனான். அவன் எலிசாவின் முன்னிலையிலிருந்து விலகிச்சென்றான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in