YouVersion Logo
Search Icon

2 கொரிந்தியர் 1

1
1இறைவனுடைய சித்தத்தினால், கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனான பவுலாகிய நானும்,
நம்முடைய சகோதரனாகிய தீமோத்தேயுவும், கொரிந்து பட்டணத்திலுள்ள இறைவனுடைய திருச்சபைக்கும், அகாயா நாடு முழுவதிலும் உள்ள பரிசுத்தவான்களுக்கும் எழுதுகிறதாவது:
2நம்முடைய பிதாவாகிய இறைவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
ஆறுதலின் இறைவன்
3நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவும், இறைவனுமானவருக்குத் துதி உண்டாவதாக; அவர் இரக்கத்தின் பிதாவும் எல்லா விதமான ஆறுதலின் இறைவனுமாயிருக்கிறார். 4அவரே நம்மை நம்முடைய எல்லாக் கஷ்டங்களிலும் ஆறுதல்படுத்துகிறார். எனவே நாம் இறைவனிடத்திலிருந்து பெற்றுக்கொண்ட ஆறுதலினாலே, பல்வேறு கஷ்டங்களில் உள்ளவர்களை, எங்களால் ஆறுதல்படுத்தக் கூடியதாயிருக்கிறது. 5ஏனெனில், நம்முடைய வாழ்க்கையில் கிறிஸ்துவின் வேதனைகள் பெருகிவருகிறதுபோல, கிறிஸ்துவின்மூலம் நமக்கு அனுதினம் ஆறுதலும் பெருகுகிறது. 6நாங்கள் துன்பப்படுத்தப்பட்டால், அது உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்குமே; நாங்கள் ஆறுதலடைந்தால், அதுவும் உங்கள் ஆறுதலுக்காகவே. அந்த ஆறுதல், நீங்களும் எங்களைப் போலத் துன்பங்களை அனுபவிக்கும்போது, அது உங்களிலும் பொறுமையான சகிப்புத் தன்மையை வளர்க்கிறது. 7மேலும் உங்களைப்பற்றிய எங்கள் எதிர்பார்ப்பு உறுதியாய் இருக்கிறது. ஏனெனில், எங்களுடைய துன்பங்களில் நீங்கள் பங்கெடுப்பதுபோலவே, எங்களுடைய ஆறுதலிலும் பங்குபெறுகிறீர்கள் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்.
8பிரியமானவர்களே, ஆசியாவில் நாங்கள் அனுபவித்த பாடுகளைப்பற்றி நீங்கள் அறியாதிருப்பதை நாங்கள் விரும்பவில்லை. எங்களால் தாங்கமுடியாத அளவுக்கு, அதிகமான சுமைகளால் நெருக்குண்டோம். இதனால் நாங்கள் உயிர் பிழைப்போம் என்ற நம்பிக்கையையும் இழந்தோம். 9உண்மையிலேயே எங்களுக்கு மரணத்தின் தீர்ப்பு வந்துவிட்டது போன்று எங்கள் இருதயங்களில் உணர்ந்தோம். ஆனாலும் நாங்கள் எங்களிலே அல்ல, இறந்தோரை எழுப்புகிற இறைவனில் நம்பிக்கை கொள்ளும்படியே இது நிகழ்ந்தது. 10அத்தகைய மரண ஆபத்திலிருந்து அவர் எங்களை விடுவித்தார். அவரே இன்னும் எங்களை விடுவிப்பார். அப்படியே அவர் எங்களைத் தொடர்ந்தும் விடுவிப்பார் என்று, அவரிலேயே எங்கள் எதிர்பார்ப்பை நாங்கள் வைத்திருக்கிறோம். 11ஆதலால் நீங்களும், உங்களுடைய மன்றாட்டுகளினால் எங்களுக்கு உதவுங்கள். அப்பொழுது பலருடைய மன்றாட்டுக்குப் பதிலாக, இறைவன் எங்களுக்குக் கொடுத்த கிருபையுள்ள தயவுக்காக, பலர் எங்களின் சார்பாக இறைவனுக்கு நன்றி செலுத்துவார்கள்.
பவுல் திட்டங்களை மாற்றுதல்
12இப்பொழுது, நாங்கள் உலகத்திலும், விசேஷமாக உங்களுடனான உறவிலும், இறைவன் கொடுத்த பரிசுத்தத்துடனும், உண்மையுடனும் நடந்தோம் என்பதே எங்கள் பெருமை. இதற்கு எங்கள் மனசாட்சியும் சான்று கொடுக்கின்றது. நாங்கள் உலக ஞானத்தோடு அதைச் செய்யவில்லை. இறைவனுடைய கிருபையினாலேயே செய்தோம். 13எங்கள் கடிதங்களில், உங்களால் வாசிக்கவோ விளங்கிக்கொள்ளவோ முடியாத எதையும் நாங்கள் உங்களுக்கு எழுதவில்லை என்று நம்புகிறேன். 14நீங்கள் எங்களை ஓரளவு புரிந்துகொண்டிருப்பதுபோல, ஒரு நாளில் முழுமையாய் எங்களை புரிந்துகொள்வீர்கள் என்பதேயாகும். அப்பொழுது கர்த்தராகிய இயேசுவின் நாளில், நாங்கள் உங்களைக்குறித்துப் பெருமிதம்கொள்வதுபோல, நீங்களும் எங்களைக் குறித்தும் பெருமிதம் கொள்வீர்கள்.
15நான் இதைக்குறித்து உறுதியுடையவனாய் இருந்தபடியால், நீங்கள் இரண்டு மடங்கு நன்மை பெறும்படி, முதலாவது உங்களிடம் வரவும் திட்டமிட்டேன். 16நான் மக்கெதோனியாவுக்குப் போகும் வழியில் உங்களைச் சந்திக்கவும், பின்பு மக்கெதோனியாவிலிருந்து திரும்பி வரும்போதும் உங்களிடம் வரவும் பின்பு, உங்களால் யூதேயாவுக்கு வழியனுப்பி வைக்கப்படவும் விரும்பினேன். 17இப்படி நான் திட்டமிட்டபோது, ஒரு பொறுப்பற்ற முறையில் செய்தேனா? அல்லது, ஒரே மூச்சில் “ஆம்” என்றும், “இல்லை” என்றும் சொல்லும் விதத்தில், நான் உலகரீதியாக என் திட்டங்களை வகுக்கிறேனா?
18ஆனால் இறைவன் வாக்குமாறாதவராய் இருப்பது நிச்சயம்போலவே, உங்களுக்கு என் செய்தியும் “ஆம்” என்று சொல்லி, பின் “இல்லை” என்று சொல்கிற பேச்சு அல்ல என்பதும் நிச்சயம். 19நானும், சில்வானும், தீமோத்தேயுவும் உங்கள் மத்தியில் பிரசங்கித்த, இறைவனின் மகனான இயேசுகிறிஸ்து, “ஆம்” அப்படித்தான் என்று சொல்லி, பின் “இல்லை” அது அப்படியல்ல என்று சொல்லுகிறவர் அல்ல. மாறாக, “ஆம்” என்று அவர் சொன்னது, எப்பொழுதும் அவரில் “ஆம்” என்றே இருக்கிறது. 20இறைவன் எத்தனை வாக்குத்தத்தங்களைக் கொடுத்தாலும், அவை எல்லாம் கிறிஸ்துவில் “ஆம்” என்றே இருக்கின்றன. இதனாலேயே இறைவனுக்கு மகிமையுண்டாக, அவர்மூலம் நாங்கள் “ஆமென்” என்று சொல்கிறோம். 21இப்பொழுதும் எங்களையும், உங்களையும் இறைவனே கிறிஸ்துவில் உறுதியாய் நிற்கச்செய்கிறார். அவர் நம்மை அபிஷேகம் பண்ணியிருக்கிறார். 22அவர் தமது உரிமையின் அடையாளமான முத்திரையை நம்மீது பதித்திருக்கிறார். வரப்போகிறவற்றிற்கு உத்தரவாதமாக, அவர் தமது ஆவியானவரை நமது இருதயங்களில் ஒரு நிலையான வைப்பாக வைத்திருக்கிறார்.
23நான் உங்களைக் கண்டித்து துன்பம் கொடுக்காமல் இருப்பதற்காகவே, கொரிந்துவுக்குத் திரும்பிவராமல் இருந்தேன் என்பதற்கு, இறைவனே எனக்குச் சாட்சி. 24நாங்கள் உங்கள் விசுவாசத்தின்மேல் அதிகாரம் செலுத்த விரும்பவில்லை. உங்கள் மகிழ்ச்சிக்காகவே உங்களுடன் ஒத்துழைக்கிறோம். ஏனெனில், நீங்கள் விசுவாசத்திலேயே உறுதியாய் நிற்கிறீர்கள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy