YouVersion Logo
Search Icon

2 நாளாகமம் 8

8
சாலொமோனின் மற்ற நிகழ்வுகள்
1சாலொமோன் யெகோவாவின் ஆலயத்தையும், தனது சொந்த அரண்மனையையும் கட்டிமுடிக்க இருபது வருடம் ஆனபின்பு, 2ஈராம் தனக்குக் கொடுத்திருந்த கிராமங்களை சாலொமோன் திரும்பவும் கட்டினான். அங்கே இஸ்ரயேலரைக் குடியமர்த்தினான். 3பின்பு சாலொமோன் ஆமாத் சோபாவுக்கு போய் அதைக் கைப்பற்றினான். 4அத்துடன் அவன் பாலைவனத்திலுள்ள தத்மோரையும், ஆமாத்தில் தான் கட்டியிருந்த எல்லா களஞ்சியப் பட்டணங்களையும் திரும்பவும் கட்டினான். 5அவன்மேல் பெத் ஓரோனையும், கீழ் பெத் ஓரோனையும் மதில்களும், வாசல்களும், தாழ்ப்பாள்களுமுடைய அரணுள்ள பட்டணங்களாகத் திரும்பவும் கட்டினான். 6அத்துடன் பாலாத்தையும், சாலொமோனுடைய களஞ்சியப் பட்டணங்களையும், தனது தேர்களுக்கும் குதிரைகளுக்குமான எல்லாப் பட்டணங்களையும் கட்டினான். அவன் எருசலேமிலும், லெபனோனிலும், தான் அரசாண்ட பிரதேசம் முழுவதிலும் தான் கட்ட ஆசைப்பட்டவற்றைக் கட்டினான்.
7நாட்டில் இஸ்ரயேலர் அல்லாத ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியோர் இன்னும் மீதியாயிருந்தார்கள். 8இவர்கள் இஸ்ரயேலர்களால் அழிக்கப்படாமல் அந்நாட்டில் விடப்பட்டிருந்தவர்களின் சந்ததிகள். இன்றுவரை உள்ளபடி அவர்களை சாலொமோன் தனது அடிமைவேலை செய்வதற்குக் கட்டாயமாய்ச் சேர்த்துக்கொண்டான். 9ஆனால் சாலொமோன் தனது வேலைகளுக்கு இஸ்ரயேலரை அடிமைகளாக வைத்திருக்கவில்லை; அவர்கள் அவனுடைய இராணுவவீரர்களாயும் அவனுடைய தலைவர்களுக்கு தளபதிகளாகவும், அவனுடைய தேர்களுக்கும், தேரோட்டிகளுக்கும், தளபதிகளாகவும் இருந்தார்கள். 10அத்துடன் அவர்கள் அரசன் சாலொமோனின் தலைமை அதிகாரிகளாகவும் இருந்தனர். இருநூற்றைம்பது அதிகாரிகள் மனிதரை மேற்பார்வை செய்தனர்.
11சாலொமோன், “எனது மனைவி, இஸ்ரயேல் அரசனான தாவீதின் அரண்மனையில் வாழக்கூடாது. ஏனெனில் யெகோவாவின் பெட்டி சென்ற இடங்கள் பரிசுத்தமானவை” என்று சொல்லி, பார்வோனின் மகளைத் தாவீதின் நகரத்திலிருந்து தான் அவளுக்காகக் கட்டியிருந்த அரண்மனைக்குக் கூட்டிக்கொண்டு வந்தான்.
12சாலொமோன் மண்டபத்தின் முன்னால் தான் கட்டியிருந்த யெகோவாவின் பலிபீடத்திலே யெகோவாவுக்குத் தகன காணிக்கைகளைச் செலுத்தினான். 13மோசேயினால் கட்டளையிடப்பட்டபடி காணிக்கைகளை ஒவ்வொரு நாளும் தேவைக்கேற்ப, ஓய்வுநாளிலும், அமாவாசையிலும், புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையான மூன்று வருடாந்திர பண்டிகைகளிலும் செலுத்தினான். 14சாலொமோன் தன் தகப்பன் தாவீதின் நியமத்தின்படி, ஆசாரியர்களை அவர்களின் கடமைக்கேற்ப பிரிவுகளின்படி நியமித்தான். அதோடு துதியில் வழிநடத்துவதற்கும், ஆசாரியருக்கு உதவிசெய்யவும் லேவியர்களை ஒவ்வொரு நாளின் தேவைக்கேற்ப நியமித்தான். அத்துடன் அவன் வெவ்வேறு வாசல்களிலும், வாசல் காவலாளர்களையும் பிரிவு பிரிவாக நியமித்தான். ஏனெனில் இறைவனின் மனிதனான தாவீது இவ்விதமாய் கட்டளையிட்டிருந்தான். 15திரவியக் களஞ்சியங்கள் உள்ளடங்க எந்த விஷயத்திலும் ஆசாரியருக்கோ, லேவியருக்கோ அரசனால் கொடுக்கப்பட்ட அரசனின் கட்டளைகளிலிருந்து அவர்கள் விலகவில்லை.
16இவ்வாறு சாலொமோனின் எல்லா வேலைகளும் யெகோவாவின் ஆலயத்தின் அஸ்திபாரமிடப்பட்ட நாளிலிருந்து அது முடியும்வரை செய்யப்பட்டன. அப்படியே யெகோவாவின் ஆலயம் முடிவுற்றது.
17பின்பு சாலொமோன் ஏதோமின் கடலோரத்தில் இருக்கும் எசியோன் கேபேருக்கும், ஏலாத்துக்கும் போனான். 18ஈராம் கடல் பயணத்தில் பழக்கப்பட்ட தனது வேலையாட்களின் பொறுப்பிலுள்ள கப்பல்களை சாலொமோனுக்கு அனுப்பினான். அவர்கள் சாலொமோனின் மனிதருடன் ஓப்பீருக்குக் கப்பலில் போய், நானூற்று ஐம்பது தாலந்து நிறையுள்ள தங்கத்தை அரசன் சாலொமோனுக்குக் கொண்டுவந்து கொடுத்தார்கள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy