YouVersion Logo
Search Icon

2 நாளாகமம் 27

27
யூதாவின் அரசன் யோதாம்
1யோதாம் அரசனானபோது இருபத்தைந்து வயதுடையவனாயிருந்தான், அவன் எருசலேமில் பதினாறு வருடங்கள் அரசாண்டான்; இவனுடைய தாய் சாதோக்கின் மகளான எருசாள் என்பவள். 2அவன் தன் தகப்பன் உசியா செய்ததுபோலவே யெகோவாவின் பார்வையில் சரியானதைச் செய்தான். ஆனால் அவனைப்போல இவன் யெகோவாவினுடைய ஆலயத்திற்குள் போகவில்லை. ஆயினும் மக்கள் அவர்களுடைய சீர்கேடான செயல்களைத் தொடர்ந்து செய்துவந்தார்கள். 3யோதாம் யெகோவாவின் ஆலயத்தின் மேல்வாசலைத் திரும்பக் கட்டினான். அத்துடன் ஓபேல் குன்றில் இருந்த மதிலின்மேல் இன்னும் அநேக கட்டிடங்களையும் கட்டினான். 4அவன் யூதாவின் மலைகளில் பட்டணங்களையும், மரங்கள் செறிந்த பகுதிகளில் கோட்டைகளையும், கோபுரங்களையும் கட்டினான்.
5யோதாம் அமோனிய அரசருடன் யுத்தம்செய்து அவர்களை வெற்றிகொண்டான்; அந்த வருடம் அம்மோனியர் அவனுக்கு நூறு தாலந்து வெள்ளியைக் கொடுத்தார்கள். பத்தாயிரம் கலம் கோதுமையையும், பத்தாயிரம் கலம் வாற்கோதுமையையும் கொடுத்தார்கள். அம்மோனியர்கள் இரண்டாம், மூன்றாம் வருடங்களிலும் அதே அளவு பொருட்களைக் கொண்டுவந்தார்கள்.
6யோதாம் தன் இறைவனாகிய யெகோவாவுக்கு முன்பாக, உறுதியுடன் நடந்தபடியால் அவன் வலிமையடைந்தான்.
7யோதாமின் ஆட்சிக் காலத்தின் மற்ற நிகழ்வுகள், அவனுடைய யுத்தங்கள் உட்பட, மற்றும் அவன் செய்த செயல்கள் எல்லாம் இஸ்ரயேல், யூதா அரசர்களின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. 8அவன் அரசனானபோது இருபத்தைந்து வயதுடையவனாயிருந்தான். அவன் எருசலேமில் பதினாறு வருடங்கள் அரசாண்டான். 9யோதாம் தன் முற்பிதாக்களைப்போல இறந்து, தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். இவனுடைய மகன் ஆகாஸ் இவனுக்குபின் அவனுடைய இடத்தில் அரசனானான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for 2 நாளாகமம் 27