YouVersion Logo
Search Icon

1 சாமுயேல் 3

3
யெகோவா சாமுயேலை அழைத்தல்
1சிறுவனாகிய சாமுயேல் ஏலியின் மேற்பார்வையின்கீழ் யெகோவாவுக்குப் பணிசெய்தான். அந்நாட்களில் யெகோவாவின் வார்த்தை அரிதாயிருந்தது; தரிசனங்களும் அரிதாகவேயிருந்தன.
2பார்க்க முடியாதபடி கண்கள் மங்கிய நிலையிலிருந்த ஏலி, ஒரு இரவில் தான் வழக்கமாகப் படுக்கும் இடத்தில் படுத்திருந்தான். 3இறைவனுடைய விளக்கு இன்னும் அணையாதிருக்கும்போதே, சாமுயேல் யெகோவாவினுடைய பெட்டி இருந்த இடமான இறைவனின் ஆலயத்தில் படுத்திருந்தான். 4அவ்வேளையில் யெகோவா சாமுயேலைக் கூப்பிட்டார்.
அதற்கு சாமுயேல், “இதோ, நான் இங்கே இருக்கிறேன்” என்று சொல்லி, 5ஏலியிடம் ஓடிப்போய், “என்னைக் கூப்பிட்டீரே. இதோ இருக்கிறேன்” என்றான்.
அதற்கு ஏலி, “நான் உன்னைக் கூப்பிடவில்லை. நீ திரும்பிப்போய் படுத்துக்கொள்” என்றான். எனவே அவன் போய் படுத்துக்கொண்டான்.
6யெகோவா மறுபடியும், “சாமுயேல்” எனக் கூப்பிட்டார். சாமுயேல் எழுந்து ஏலியிடம் போய், “என்னைக் கூப்பிட்டீரே? இதோ இருக்கிறேன்” என்றான்.
அதற்கு ஏலி, “என் மகனே, நான் உன்னைக் கூப்பிடவில்லை. திரும்பிப் போய்ப் படுத்துக்கொள்” என்றான்.
7சாமுயேல் இன்னும் யெகோவாவை அறியவில்லை. இதுவரை யெகோவாவின் வார்த்தை அவனுக்கு இன்னும் வெளிப்படவில்லை.
8யெகோவா மூன்றாம் முறையும் சாமுயேலைக் கூப்பிட்டார்; அவன் எழுந்து மறுபடியும் ஏலியிடம் வந்து அவனிடம், “என்னைக் கூப்பிட்டீரே; இதோ இருக்கிறேன்” என்றான்.
அப்பொழுது யெகோவாவே சிறுவனைக் கூப்பிடுகிறார் என ஏலி அறிந்துகொண்டான். 9எனவே ஏலி சாமுயேலிடம், “நீ போய் படுத்துக்கொள். அவர் உன்னைக் கூப்பிட்டால், ‘யெகோவாவே பேசும், உமது அடியேன் கேட்டுக்கொண்டிருக்கிறேன்’ என்று சொல்” என்றான். அப்படியே சாமுயேல் போய் தன் இடத்தில் படுத்துக்கொண்டான்.
10அப்பொழுது யெகோவா வந்து அங்கு நின்று, முன் கூப்பிட்டதுபோல், “சாமுயேல், சாமுயேல்” என்று கூப்பிட்டார்.
அதற்கு சாமுயேல், “பேசும்; அடியேன் கேட்கிறேன்” என்றான்.
11யெகோவா சாமுயேலிடம்: “நான் இஸ்ரயேலில் ஒரு செயலைச் செய்யப்போகிறேன். அதைக் கேட்கும் ஒவ்வொருவருடைய செவிகளிலும் அது ஒலித்துக்கொண்டேயிருக்கும். 12அக்காலத்தில் ஏலியின் குடும்பத்திற்கு எதிராக நான் சொன்னவைகள் எல்லாவற்றையும் தொடக்கமுதல் இறுதிவரை அவனுக்கு எதிராகச் செய்து முடிப்பேன். 13அவனறிந்த அவன் மகன்களின் பாவத்தின் காரணமாகவே, அவனுடைய குடும்பத்தை எப்பொழுதும் நான் நியாயந்தீர்பேன் என்று நான் அவனுக்குச் சொல்லியிருந்தும், அவனுடைய மகன்கள் தங்களை இறைவன் வெறுக்கத்தக்கவர்களாக்கிக் கொண்டபோதும், அவன் அவர்களை தடுக்கத் தவறிவிட்டான். 14ஆகையால் ஏலி குடும்பத்தாரின் குற்றம், ‘பலியினாலோ அல்லது காணிக்கையினாலோ ஒருபோதும் நிவிர்த்தியாக்கப்பட முடியாது’ என்று ஏலியின் குடும்பத்துக்கு ஆணையிட்டிருக்கிறேன்” என்றார்.
15அதன்பின் சாமுயேல் காலைவரை படுத்திருந்து விடிந்தபின் யெகோவாவின் ஆலயத்தின் கதவுகளைத் திறந்தான். ஆனாலும் சாமுயேல் தான் கண்ட தரிசனத்தை ஏலிக்குச் சொல்லப் பயந்தான். 16ஆனால் ஏலி அவனைக் கூப்பிட்டு, “சாமுயேலே, என் மகனே” என்றான்.
அதற்கு சாமுயேல், “இங்கே இருக்கிறேன்” என்றான்.
17அப்பொழுது ஏலி சாமுயேலிடம், “யெகோவா உனக்குச் சொன்னது என்ன? எனக்கு அதை நீ மறைக்கவேண்டாம். அவர் உனக்குச் சொன்னவற்றில் எதையாகிலும் எனக்கு மறைத்தாயானால் இறைவனே உன்னைக் கடுமையாகத் தண்டிப்பாராக” என்றான். 18எனவே சாமுயேல் எதையும் அவனுக்கு மறைக்காமல் எல்லாவற்றையும் ஏலிக்குச் சொன்னான். அதற்கு ஏலி, “அவரே யெகோவா; அவர் தனக்கு நல்லதெனத் தோன்றுவதைச் செய்யட்டும்” என்றான்.
19சாமுயேல் வளரும்போது யெகோவா அவனோடுகூட இருந்தார். யெகோவா சாமுயேல் சொன்ன வார்த்தைகளில் ஒன்றையாகிலும் நிறைவேற்றாமல் விடவில்லை. 20சாமுயேல் யெகோவாவினுடைய இறைவாக்கினன் என உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறான் என்பதை, தாணிலிருந்து பெயெர்செபா வரையுள்ள எல்லா இஸ்ரயேலரும் அறிந்துகொண்டார்கள். 21தொடர்ந்து யெகோவா சீலோவிலே தோன்றி அவர் தமது வார்த்தைகளின் மூலம் சாமுயேலுக்குத் தன்னை வெளிப்படுத்தினார்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in