YouVersion Logo
Search Icon

1 சாமுயேல் 24

24
தாவீது சவுலின் உயிரைக் காத்தல்
1பெலிஸ்தியரைத் துரத்திவிட்டுச் சவுல் திரும்பியபோது, “தாவீது என்கேதி பாலைவனத்திலே தங்கியிருக்கிறான்” என்று அவனுக்குத் தெரிவிக்கப்பட்டது. 2அப்பொழுது சவுல் இஸ்ரயேல் மக்கள் அனைவரிடமிருந்தும் தெரிந்தெடுக்கப்பட்ட மூவாயிரம் பேரைக் கூட்டிக்கொண்டு, “காட்டாடுகளின் குன்றுகள்” என்ற இடத்திற்கு அருகே தாவீதையும், அவன் ஆட்களையும் தேடிப்பார்க்கப் போனான்.
3போகும் வழியில் ஆட்டுத்தொழுவங்கள் இருந்த இடத்திற்கு வந்தான். அங்கே ஒரு குகை இருந்தது. சவுல் மலசலம் கழிப்பதற்காக அதற்குள் போனான். தாவீதும் அவன் மனிதரும் குகையினுள்ளே இருந்தார்கள். 4அப்பொழுது தாவீதின் மனிதர், “நீ விரும்பியபடி உன் பகைவனுக்கு செய்வதற்கு அவனை உன் கையில் ஒப்படைப்பேன் என்று யெகோவா உனக்குச் சொல்லிய நாள் இன்றுதான்” என்றார்கள். உடனே தாவீது சவுல் அறியாதபடி தவழ்ந்துபோய், அவன் அங்கியின் ஒரு மூலையை வெட்டினான்.
5பின் சவுலின் அங்கியின் மூலையை வெட்டியதற்காக தாவீதின் மனசாட்சி அவனை உறுத்தியது. 6அப்பொழுது அவன் தன் மனிதரிடம், “யெகோவாவினால் அபிஷேகம் செய்யப்பட்ட ஒரு எஜமானுக்கு இப்படியான செயலை நான் செய்யவும், அவருக்கு விரோதமாக எனது கையை உயர்த்தவும் யெகோவா அனுமதிக்கமாட்டார். ஏனெனில் அவர் யெகோவாவினால் அபிஷேகம் செய்யப்பட்டவர்” என்றான். 7தாவீது இந்த வார்த்தைகளால் தன் மனிதரைக் கடிந்துகொண்டு சவுலைத் தாக்குவதற்கு அவர்களை அவன் அனுமதிக்கவில்லை. அப்பொழுது சவுல் குகையை விட்டு புறப்பட்டுத் தன் வழியே போனான்.
8உடனே தாவீதும் எழுந்து குகையிலிருந்து வெளியே வந்து, “என் தலைவனான அரசே!” என்று சத்தமாய் கூப்பிட்டான். சவுல் திரும்பிப் பார்த்தபோது தாவீது தரைமட்டும் குனிந்து அவனை வணங்கினான். 9பின்பு தாவீது சவுலிடம், “தாவீது உனக்குத் தீங்குசெய்ய எண்ணம் கொண்டிருக்கிறான் என்று மனிதர் உமக்குச் சொல்லும்போது நீர் ஏன் நம்புகிறீர்? 10இன்று இந்தக் குகையில் யெகோவா உம்மை என்னிடம் ஒப்படைத்தார் என்பதை உம்முடைய கண்கள் கண்டன. உம்மைக் கொலை செய்யும்படி சிலர் என்னைத் தூண்டினார்கள். நானோ உம்மைத் தப்பவிட்டேன். ‘யெகோவாவினால் அபிஷேகம் செய்யப்பட்டவராகையால் என் தலைவனாகிய உமக்கு எதிராக என் கையை உயர்த்தமாட்டேன்’ என்று நான் அவர்களுக்குச் சொன்னேன். 11என் தகப்பனே! என் கையிலுள்ள உம்முடைய அங்கியின் துண்டைப் பாரும். நான் உமது அங்கியின் துண்டை வெட்டி எடுத்தேன். ஆனால் உம்மைக் கொலைசெய்யவில்லை. என்னைப் புரிந்துகொண்டு, நான் அநியாயம் செய்தோ, கலகம் செய்தோ ஒரு குற்றவாளியாகவில்லை என்று ஏற்றுக்கொள்ளும். நான் உமக்கு ஒரு பிழையையும் செய்யவில்லை. ஆனால் நீரோ என் உயிரை வாங்குவதற்கு வேட்டையாடுகிறீர். 12ஆனாலும் யெகோவா உமக்கும் எனக்கும் நடுவில் நின்று நியாயந்தீர்பாராக. நீர் எனக்குச் செய்த பிழைகளுக்காக யெகோவா உம்மைப் பழிவாங்குவாராக. ஆனால் என் கையோ உம்மைத் தொடாது. 13‘தீயோர்களிடத்திலிருந்து தீய செயல்கள் பிறக்கும்’ என்று ஒரு முதுமொழி உண்டு. ஆதலால் எனது கை உம்மைத் தொடாது.
14“இஸ்ரயேலின் இறைவன் யாருக்கு விரோதமாக வந்திருக்கிறார்? யாரை நீர் துரத்துகிறீர்? ஒரு செத்த நாயையா? ஒரு தெள்ளுப்பூச்சியையா? 15யெகோவாவே நீதிபதியாய் இருந்து நமக்கிடையில் நியாயந்தீர்பாராக. அவர் எனக்காக வழக்காடி என்னை உம் கையிலிருந்து விடுவித்து நிரபராதி எனத் தீர்ப்பாராக” என்றான்.
16இவ்வாறு தாவீது சவுலுக்குச் சொல்லி முடிந்தபின், சவுல் அவனிடம், “தாவீதே, என் மகனே, இது உன்னுடைய குரல்தானா?” என்று கேட்டு சத்தமிட்டு அழுதான். 17பின்னும் தாவீதிடம், “நீ என்னைவிட அதிக நேர்மையானவன்; நீ என்னை நன்றாக நடத்தியிருக்கிறாய். நானோ உன்னை கேவலமாய் நடத்தினேன். 18நீ எனக்குச் செய்த நன்மையைக் குறித்து இப்பொழுது சொன்னாயே. யெகோவா என்னை உன்னிடம் ஒப்படைத்திருந்தும் நீ என்னைக் கொலைசெய்யவில்லை. 19ஒருவன் தன் பகைவனைக் காணும்போது அவனுக்குத் தீங்கு செய்யாமல் தப்பிப் போகவிடுவானோ? அதனால் இன்று நீ என்னை நடத்திய விதத்திற்காக யெகோவா உனக்கு நல்ல பலன் அளிப்பாராக. 20இப்பொழுது நீ அரசனாவாய் என்பதும் இஸ்ரயேலரின் அரசாட்சி உன்னால் நிலைநாட்டப்படும் என்பதும் எனக்கு நிச்சயமாய்த் தெரியும். 21இப்பொழுது என் சந்ததியை அழிப்பதில்லையென்றும் என் தகப்பனின் குடும்பத்திலிருந்து என் பெயரை அழிக்கமாட்டாய் என்றும் யெகோவாவின் பெயரில் நீ ஆணையிட்டுக் கொடு” என்றான்.
22அவ்வாறே தாவீது சவுலுக்கு ஆணையிட்டான். பின்பு சவுல் தன் இருப்பிடத்திற்குப் போனான். தாவீதும் அவன் ஆட்களும் தங்கள் அரணான இடத்திற்குப் போனார்கள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in