YouVersion Logo
Search Icon

1 சாமுயேல் 18

18
தாவீதுமேல் சவுலின் பொறாமை
1சவுல் தாவீதுடன் பேசி முடித்தபின், யோனத்தான் தாவீதுடன் ஆவியில் ஒன்றிணைந்தான். யோனத்தான் தாவீதைத் தன்னைப்போல் நேசித்தான். 2அன்றிலிருந்து சவுல் தாவீதை அவன் தகப்பன் வீட்டுக்குத் திரும்பிப் போகவிடாமல் தன்னுடனேயே வைத்துக்கொண்டான். 3யோனத்தான் தன்னைப்போல் தாவீதில் அன்பு செலுத்தியபடியால், அவன் தாவீதுடன் ஒரு உடன்படிக்கை செய்துகொண்டான். 4யோனத்தான் தான் உடுத்தியிருந்த மேலங்கியைக் கழற்றி, அதனுடன் தனது உடைகளையும் தாவீதுக்குக் கொடுத்தான். அத்துடன் தனது வாள், வில், இடைக்கச்சை முதலியவற்றையும் அவனுக்குக் கொடுத்தான்.
5சவுல் செய்யச் சொல்லி அனுப்பிய எந்த வேலையையும் தாவீது திறமையாகச் செய்தான். இதனால் சவுல் அவனுக்கு படையில் ஒரு உயர்பதவி கொடுத்தான். இது மக்களுக்கும், சவுலின் அதிகாரிகளுக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.
6தாவீது பெலிஸ்தியனைக் கொலைசெய்தபின், இஸ்ரயேலின் மனிதர் தங்கள் வீடுகளுக்குத் திரும்பி வந்தார்கள். அப்பொழுது இஸ்ரயேலின் எல்லா பட்டணங்களிலுமிருந்தும் பெண்கள் பாடிக்கொண்டும், நடனமாடிக்கொண்டும், மகிழ்ச்சிப் பாடல்களோடும், தம்புராக்களோடும், வீணைகளோடும் அரசன் சவுலைச் சந்திக்கும்படி வந்தார்கள். 7அவர்கள் ஆடிப்பாடுகையில் சொன்னதாவது:
“சவுல் ஆயிரக் கணக்கில் கொன்றான்.
தாவீது பத்தாயிரக் கணக்கில் கொன்றான்.”
8அதைக்கேட்ட சவுல் அதிக கோபமடைந்தான். அந்தப் பாட்டு அவனுக்கு கசப்பாயிருந்தது. “தாவீதுக்கு பத்தாயிரமும், எனக்கு ஆயிரமும் என்று சொல்லியல்லவா மதிப்புக் கொடுக்கிறார்கள். மேலும் அவனுக்கு அரசாட்சியைவிட வேறு எதை அதிகமாய் கொடுப்பார்கள்” என்று நினைத்தான். 9அந்த நேரம் முதல் சவுல் பொறாமைக் கண் கொண்டே தாவீதைப் பார்த்தான்.
10மறுநாள் இறைவனிடமிருந்து வந்த பொல்லாத ஆவி சவுலின்மேல் வல்லமையாய் இறங்கியது. அவன் வீட்டுக்குள்ளே பிதற்றிக்கொண்டிருந்தான்; தாவீது தினந்தோறும் வாசிக்கிறதுபோல் யாழ் வாசித்துக்கொண்டிருந்தான். அப்பொழுது சவுலின் கையில் ஒரு ஈட்டி இருந்தது. 11சவுல், “தாவீதைச் சுவரோடு சேர்த்துக் குத்துவேன்” என்று தனக்குள் சொல்லிக்கொண்டு ஈட்டியை அவன்மேல் எறிந்தான். ஆனால் தாவீது இருமுறை விலகித் தப்பினான்.
12யெகோவா தன்னைவிட்டு விலகித் தாவீதுடன் இருப்பதினால் சவுல் தாவீதுக்குப் பயப்பட்டான். 13எனவே தாவீதைத் தன்னிடமிருந்து அனுப்பிவிட்டு, ஆயிரம் படைவீரருக்கு அவனைத் தலைவனாக்கினான். தாவீது தன் போர் வீரர்களைத் தலைமைதாங்கி நடத்தினான். 14தாவீது தான் செய்தவைகள் எல்லாவற்றிலும் வெற்றிபெற்றான்; ஏனெனில் யெகோவா அவனோடுகூட இருந்தார். 15தாவீது இவ்வாறு பெரும் வெற்றியீட்டியதைக் கண்ட சவுல் அவனுக்குப் பயந்தான். 16எல்லா இஸ்ரயேலர்களும் யூதாவின் மக்களும் தாவீதிடம் அன்பு செலுத்தினார்கள். ஏனெனில் அவன் எல்லா யுத்தங்களையும் தலைமை வகுத்து நடத்தினான்.
17சவுல் தாவீதிடம், “என் மூத்த மகள் மேராப் இருக்கிறாள். அவளை நான் உனக்குத் திருமணம் செய்துகொடுப்பேன். நீ எனக்குத் தைரியமாய் பணிசெய்து யெகோவாவின் யுத்தத்தை நடத்து” என்றான். “நான் அவனுக்கு எதிராகக் கையை உயர்த்தமாட்டேன். பெலிஸ்தியரே அதைச் செய்யட்டும்” எனச் சவுல் தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.
18ஆனால் தாவீது சவுலிடம், “அரசனின் மருமகனாவதற்கு நான் யார்? என் குடும்பமும், இஸ்ரயேலரில் என் தந்தையின் வம்சம் என்ன!” என்றான். 19எனவே சவுலின் மகள் மேராபை தாவீதுக்குக் கொடுக்கவேண்டிய காலம் வந்தபோது, சவுல் அவளை மேகோலாத்தியனான ஆதரியேலுக்குத் திருமணம் செய்துகொடுத்தான்.
20ஆனால் சவுலின் மற்ற மகள் மீகாள் தாவீதைக் காதலித்தாள். சவுலுக்கு இச்செய்தி அறிவிக்கப்பட்டபோது அவன் மகிழ்ச்சியடைந்தான். 21ஏனெனில், “அவளை அவனுக்குக் கொடுப்பேன். இதனால் பெலிஸ்தியரின் கரம் அவனுக்கு எதிராக வருவதற்கு அவள் அவனுக்குக் கண்ணியாயிருப்பாள்” என நினைத்தான். எனவே சவுல் தாவீதிடம், “இப்பொழுது உனக்கு எனது மருமகனாவதற்கு இரண்டாவது தருணம் கிடைத்திருக்கிறது” என்றான்.
22பின்பு சவுல் தன் ஏவலாளர்களிடம் உத்தரவிட்டுச் சொன்னதாவது: “நீங்கள் தாவீதிடம், அரசனும் உன்னில் பிரியமாய் இருக்கிறார். அவருடைய ஏவலாட்களும் உன்னிடம் அன்பாயிருக்கிறார்கள். எனவே நீ அரசனின் மருமகனாவது நல்லது என்று இரகசியமாய்ச் சொல்லுங்கள்” என்றான்.
23அவ்வாறே இந்த வார்த்தைகளை அவர்கள் தாவீதிடம் சொன்னார்கள். அதைக்கேட்ட தாவீது, “அரசனின் மருமகனாவது உங்களுக்குச் சிறிய காரியமாகத் தோன்றுகிறதா? நானோ ஒரு ஏழையும், மதிக்கப்படாதவனுமாய் மட்டுமே இருக்கிறேன்” என்றான்.
24எனவே தாவீது சொன்னவற்றைப் பணியாட்கள் சவுலிடம் சொன்னார்கள். 25அதற்கு சவுல், “நீங்கள் தாவீதிடம், ‘அரசனுடைய பகைவரைப் பழிவாங்கும் பொருட்டு, நூறு பெலிஸ்தியருடைய நுனித்தோல்களைவிட, அரசன் மணப்பெண்ணுக்குரிய வேறு எந்த வெகுமதியையும் கேட்க விரும்பவில்லை’ என்று சொல்லுங்கள்” என்றான். இவ்விதமாக பெலிஸ்தியரின் கையினால் தாவீதை வீழ்த்துவதே சவுலின் திட்டமாயிருந்தது.
26சவுலின் ஏவலாட்கள் அவன் சொன்னவற்றைத் தாவீதுக்குச் சொன்னபோது, அரசனுக்கு மருமகனாவதில் மகிழ்ச்சியடைந்தான். எனவே குறித்த காலம் முடியுமுன், 27தாவீது தன் போர்வீரருடன் சென்று இருநூறு பெலிஸ்தியரைக் கொன்றான். அவர்களின் நுனித்தோலைக் கொண்டுவந்து அரசனின் மருமகனாகும்படி முழு எண்ணிக்கையையும் அரசனிடம் செலுத்தினான். அப்பொழுது சவுல் தன் மகள் மீகாளை அவனுக்குத் திருமணம் செய்துகொடுத்தான்.
28யெகோவா தாவீதுடன் இருக்கிறார் என்பதையும், தன் மகள் மீகாள் தாவீதில் அன்பாயிருக்கிறாள் என்பதையும் சவுல் உணர்ந்து கொண்டான். 29இதனால் சவுல் தாவீதுக்கு இன்னும் அதிகமாய்ப் பயந்தான். அதுமுதல் சவுல் தன் கடைசிநாள் வரையும் தாவீதின் பகைவனாயிருந்தான்.
30பெலிஸ்தியரின் படைத்தலைவர்கள் தொடர்ந்து யுத்தத்திற்கு வந்தார்கள். அவர்கள் வரும்போதெல்லாம் சவுலின் மற்ற படைத் தலைவர்களையும்விட, தாவீது அதிக வெற்றியடைந்தான். இதனால் அவனுடைய பெயர் மிகவும் புகழ்பெற்றது.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in