YouVersion Logo
Search Icon

1 சாமுயேல் 10

10
1அப்பொழுது சாமுயேல், ஒரு தைலக்குப்பியை எடுத்து சவுலின் தலையின்மேல் ஊற்றி அவனை முத்தமிட்டு அவனிடம், “யெகோவா உன்னை தமது உரிமைச்சொத்தான மக்கள்மேல்#10:1 உரிமைச்சொத்தான மக்கள்மேல் என்றால் இஸ்ரயேல் மக்கள்மேல் என்று எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதிகளில் உள்ளது. தலைவனாக அபிஷேகம் பண்ணவில்லையோ? 2நீ இங்கிருந்து போகும்போது பென்யமீன் நாட்டு எல்லையாகிய செல்சாகிலுள்ள ராகேலின் கல்லைறையருகே இரண்டு மனிதரைச் சந்திப்பாய். அவர்கள் உன்னிடம், ‘நீ தேடிப்போன கழுதைகள் கண்டுபிடிக்கப்பட்டது. இப்பொழுது உன் தகப்பன் அவற்றைப்பற்றி யோசிக்காமல் உன்னைப்பற்றியே கவலைப்பட்டு, என் மகனைக் குறித்து நான் என்ன செய்யவேண்டும்? என கேட்டுக்கொண்டிருக்கிறார்’ என்பார்கள்.
3“அதன்பின் நீ தாபோரிலுள்ள அந்த பெரிய மரத்தடிக்குப் போவாய். அப்பொழுது அங்கே பெத்தேலிலுள்ள இறைவனை வழிபடப்போகும் மூன்று மனிதர் உன்னைச் சந்திப்பார்கள். அவர்களில் ஒருவன் மூன்று வெள்ளாட்டுக் குட்டிகளையும், மற்றவன் மூன்று அப்பங்களையும், இன்னொருவன் ஒரு தோற்குடுவையில் திராட்சை இரசத்தையும் சுமந்து கொண்டுவருவார்கள். 4அவர்கள் உன்னை வாழ்த்தி இரண்டு அப்பங்களை உனக்குக் கொடுப்பார்கள். நீ அவற்றை அவர்களிடமிருந்து ஏற்றுக்கொள்வாய்.
5“அதன்பின் பெலிஸ்தியரின் இராணுவ தடைமுகாம் அமைந்துள்ள இறைவனின் மலையான கிபியாவுக்குப் போவாய். இவ்வாறு நீ அந்த பட்டணத்துக்கு அருகே வந்தவுடன் இறைவாக்கினரின் ஊர்வலம் ஒன்றை மேடையிலிருந்து இறங்கிவரும்போது சந்திப்பாய். அவர்களின் முன்பாக வீணை, தம்புரா, புல்லாங்குழல், யாழ் ஆகிய வாத்தியங்கள் இசைக்கப்படும். அவர்கள் இறைவாக்கு சொல்லிக்கொண்டு வருவார்கள். 6அப்பொழுது யெகோவாவின் ஆவியானவர் வல்லமையுடன் உன்மேல் இறங்குவார். அப்பொழுது நீயும் அவர்களுடன் இறைவாக்கு உரைப்பாய். நீ ஒரு வித்தியாசமான மனிதனாய் மாறிவிடுவாய். 7இந்த அடையாளங்களெல்லாம் நிறைவேறும்போது, நீ உன் கைக்குக் கிடைத்தது எதையும் செய். ஏனெனில் இறைவன் உன்னோடிருக்கிறார்.
8“நீ எனக்கு முன்னே கில்காலுக்குப்போ. தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் பலியிடுவதற்கு நான் நிச்சயமாக அங்கு வருவேன். நான் வந்து நீ செய்யவேண்டியவற்றை உனக்குச் சொல்லும்வரை ஏழு நாட்கள் எனக்காகக் காத்திரு” என்றான்.
சவுல் அரசனாக்கப்படுதல்
9சவுல் சாமுயேலிடமிருந்து புறப்படும் நேரத்தில் இறைவன் அவன் இருதயத்தை மாற்றினார். அன்றே இந்த அடையாளங்களெல்லாம் நிறைவேற்றப்பட்டன. 10அவர்கள் கிபியாவுக்கு வந்தபோது இறைவாக்கினரின் ஊர்வலம் ஒன்று அவனைச் சந்தித்தது. இறைவனின் ஆவியானவர் அவன்மேல் வல்லமையுடன் இறங்கினார். அவனும் அவர்களுடன் சேர்ந்து இறைவாக்கு உரைத்தான். 11சவுலை முன்பே அறிந்தவர்கள் அவன் இறைவாக்கினருடன் இறைவாக்கு சொல்வதைக் கண்டபோது அவர்கள், “கீஷின் மகனுக்கு நேர்ந்தது என்ன? சவுலும் இறைவாக்கினரில் ஒருவனா?” என்று ஒருவரையொருவர் கேட்டுக்கொண்டார்கள்.
12அப்பொழுது அவ்விடத்தில் வாழ்ந்த ஒருவன், “இவர்களது தகப்பன் யார்?” என்று கேட்டான். எனவே, “சவுலும் இறைவாக்கினரின் கூட்டத்தில் ஒருவனா?” என்று கேட்கும் பழமொழி உருவாயிற்று. 13சவுல் இறைவாக்கு சொல்லி முடித்தபின் மேடைக்குப் போனான்.
14அப்பொழுது சவுலுடைய சிறிய தகப்பன் சவுலிடமும் அவனின் வேலைக்காரனிடமும், “நீங்கள் எங்கே போயிருந்தீர்கள்?” என்று கேட்டான்.
அதற்குச் சவுல், “கழுதைகளைத் தேடிப்போனோம். எங்கேயும் காணாததால் சாமுயேலிடம் போனோம்” என்றான்.
15அதற்கு சவுலின் சிறிய தகப்பனார், “சாமுயேல் உனக்குச் சொன்னவற்றை எனக்குச் சொல்” என்று கேட்டான்.
16அதற்கு சவுல் அவனிடம், “கழுதைகள் கண்டுபிடிக்கப்பட்டது என்று அவர் எங்களுக்குச் சொன்னார்” என்றான். ஆனால் சாமுயேல் தன்னை அரசனாக்குவதைப்பற்றிச் சொன்னதை அவன் தனது சிறிய தகப்பனுக்குச் சொல்லவில்லை.
17மிஸ்பாவிலே யெகோவாவிடத்தில் இஸ்ரயேல் மக்களை வரும்படி சாமுயேல் அழைத்தான். 18அப்பொழுது சாமுயேல் அவர்களிடம், “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது என்னவென்றால், நான் இஸ்ரயேல் மக்களை எகிப்து தேசத்திலிருந்து வெளியே கொண்டுவந்தேன். நான் உங்களை எகிப்தின் அதிகாரத்திலிருந்தும், உங்களை ஒடுக்கிய எல்லா அரசுகளிலிருந்தும் விடுவித்தேன். 19நீங்களோ உங்களைப் பல பேரழிவுகளிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் தப்புவிக்கும் உங்கள் இறைவனை இப்பொழுது புறக்கணித்துவிட்டீர்கள். ‘எங்களுக்கு ஒரு அரசனை ஏற்படுத்தும்’ என்று சொன்னீர்கள். எனவே இப்பொழுது உங்கள் கோத்திரங்களின்படியேயும், வம்சங்களின்படியேயும் யெகோவாவுக்கு முன்பாக வந்து நில்லுங்கள்” என்றான்.
20இவ்வாறு சாமுயேல் இஸ்ரயேல் கோத்திரங்களையெல்லாம் கூட்டிச்சேர்த்தபின் பென்யமீன் கோத்திரன்மேல் சீட்டு விழுந்தது. 21அப்பொழுது சாமுயேல் பென்யமீன் கோத்திரத்தாரை குடும்பங்களின்படியே முன்னே வரும்படி அழைத்தான். அவர்களில் மாத்திரி வம்சத்தின்மேலும், கடைசியாக கீஷின் மகன் சவுலின்மேலும் சீட்டு விழுந்தது. ஆனால் அவர்கள் அவனைத் தேடியபோது, அவன் அங்கு காணப்படவில்லை. 22எனவே அவர்கள் யெகோவாவிடம், “அந்த மனிதன் இங்கே வந்திருக்கிறானா?” என்று கேட்டார்கள்.
அதற்கு யெகோவா, “ஆம்; அவன் பொருள் வைக்கிற இடத்தில் ஒளிந்திருக்கிறான்” என்றார்.
23அவர்கள் ஓடிப்போய் அவனை வெளியே கொண்டுவந்தார்கள். அவன் மக்கள் மத்தியில் நின்றபோது அதிக உயரமுடையவனாயிருந்தான். மற்றவர்கள் எல்லாம் அவனுடைய தோளுக்குக் கீழேயே இருந்தனர். 24அப்பொழுது சாமுயேல் மக்களனைவரிடமும், “யெகோவா தெரிந்துகொண்டவனைக் காண்கிறீர்களா? எல்லா மக்களுக்குள்ளும் இவனைப்போல் ஒருவனுமில்லை” என்றான்.
இதைக் கேட்ட மக்கள், “அரசன் நீடூழி வாழ்க!” என்று சொல்லிச் சத்தமிட்டு ஆர்ப்பரித்தார்கள்.
25சாமுயேல் அரச முறைமை ஒழுங்குவிதிகளை மக்களுக்கு விளங்கப்படுத்தினான். அவற்றை ஒரு புத்தகச்சுருளில் எழுதி, யெகோவா முன்னிலையில் பத்திரமாய் வைத்தான். அதன்பின் சாமுயேல் மக்கள் அனைவரையும் அவரவர் வீடுகளுக்கு அனுப்பிவிட்டான்.
26சவுலும் கிபியாவிலுள்ள தன் வீட்டுக்குப் போனான். அவனுடன் இறைவனால் தங்கள் இருதயத்தில் தொடப்பட்ட வீரமுள்ள மனிதரும் சேர்ந்துகொண்டார்கள். 27அப்பொழுது சில கலகக்காரர்#10:27 கலகக்காரர் என்றால் எபிரெயத்தில் பேலியாளின் பிள்ளைகள் தீயவர் என்று அர்த்தம் 2 கொரி. 6:15., “இவன் நம்மை எப்படிக் காப்பாற்றுவான்” என்று சவுலை அசட்டை செய்து, அவனுக்கு அன்பளிப்புகளைக் கொண்டுவரவில்லை. ஆனால் சவுலோ மவுனமாயிருந்தான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in