YouVersion Logo
Search Icon

1 பேதுரு 4

4
இறைவனுக்காக வாழ்வது
1எனவே, கிறிஸ்து தமது மாம்சத்தில் துன்பத்தை அனுபவித்ததினால், நீங்களும் அதேவிதமான மனநிலை உடையவர்களாய் இருங்கள். ஏனெனில், மாம்சத்தில் துன்பப்படுகிறவர்கள் பாவத்துடனான தொடர்பைத் துண்டித்துக் கொள்கிறார்கள். 2அதன் பிரதிபலனாகவே, அவர்கள் பூமியில் தொடர்ந்து தாங்கள் வாழும் வாழ்க்கையை, மாம்சத்தில் எழும் தீய ஆசைகளுக்காக வாழ்வதில்லை. இறைவனுடைய சித்தத்தைச் செய்வதற்காகவே, அவர்கள் வாழ்வார்கள். 3கடந்த காலத்தில் போதிய அளவு நேரத்தை இறைவனை அறியாத மக்கள் செய்யும் செயல்களில் ஈடுபட்டுக் கழித்தீர்களே! காமவேறிகளிலும், பேராசைகளிலும், மதுவெறியிலும், கேளிக்கைகளிலும், மதுபான விருந்துகளிலும், அருவருப்பான விக்கிரக வழிபாட்டிலும் வாழ்ந்தீர்கள். 4ஆனால் உங்கள் பழைய நண்பர்களோ, நீங்கள் இப்பொழுது தொடர்ந்து அதேவிதமான ஊதாரித்தனம் நிறைந்த வாழ்க்கையில், அவர்களுடன் சேர்ந்து அமிழ்ந்து போகாதிருப்பதைக் கண்டு வியப்படைகிறார்கள். அதனால் அவர்கள் உங்களைக்குறித்து அவதூறாய் பேசுகிறார்கள். 5ஆனால் அவர்கள் உயிர் வாழ்கிறவர்களையும் இறந்து போனவர்களையும் நியாயந்தீர்க்க ஆயத்தமாய் இருப்பவருக்கு கணக்குக் கொடுக்கவேண்டும். 6இதன் காரணமாகவே, இப்பொழுது இறந்துபோனவர்களுக்குங்கூட, அவர்கள் உயிரோடிருக்கையில் நற்செய்தி பிரசங்கிக்கப்பட்டது. அதனால் அவர்களின் உடலைப் பொறுத்தவரையில், எல்லா மனிதருக்கும் ஏற்படுகிற நியாயத்தீர்ப்பின்படி அவர்கள் மரணம் அடைந்திருந்தாலும், ஆவியைப் பொறுத்தவரையில் அவர்கள் இறைவனுடைய சித்தப்படி இன்னும் வாழமுடியும்.
7எல்லாக் காரியங்களுக்கும் முடிவு நெருங்கிவிட்டது. ஆகையால் நீங்கள் மன்றாடுவதற்கு ஏற்றவாறு மனத்தெளிவுடையவர்களாயும், தன்னடக்கமுடையவர்களாயும் இருங்கள். 8எல்லாவற்றுக்கும் மேலாக, ஒருவரில் ஒருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள். ஏனெனில் அன்பு, அநேக பாவங்களை மூடுகிறது. 9முறுமுறுக்காமல் ஒருவரையொருவர் உபசரித்து நடவுங்கள். 10நீங்கள் ஒவ்வொருவரும் இறைவனிடமிருந்து பெற்றுக்கொண்ட வரத்தை உபயோகித்து, ஒருவருக்கொருவர் பணிசெய்யுங்கள். இவ்வாறு, வெவ்வேறு விதங்களில் வரும் இறைவனுடைய கிருபையை, உண்மையுடன் நிர்வகிக்கிறவர்களாக இருங்கள். 11பேசுகின்ற வரத்தையுடையவன், இறைவனுடைய சொந்த வார்த்தையைப் பேசுகிறேன் என்றே பேசவேண்டும். ஊழியம் செய்கிறவன் இறைவன் கொடுக்கும் பெலத்தின்படியே அதைச் செய்யவேண்டும். அப்பொழுது எல்லாக் காரியங்களிலும், இயேசுகிறிஸ்துவின் மூலமாக இறைவன் துதிக்கப்படுவார். அவருக்கே மகிமையும் வல்லமையும் என்றென்றும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
கிறிஸ்துவுக்காக துன்பம்
12பிரியமானவர்களே, நீங்கள் அனுபவிக்கும் துன்பங்களைக்குறித்து, ஏதோ விசித்திரமான ஒரு காரியம் உங்களுக்கு ஏற்பட்டுவிட்டதென எண்ணி வியப்படைய வேண்டாம். 13கிறிஸ்துவினுடைய துன்பங்களில் நீங்களும் பங்குகொள்கிறீர்கள் என்று சந்தோஷப்படுங்கள். அப்பொழுது அவருடைய மகிமை வெளிப்படுகையில், நீங்கள் இன்னும் அதிக மகிழ்ச்சியடைவீர்கள். 14கிறிஸ்துவின் பெயருக்காக நீங்கள் அவமதிக்கப்பட்டால், நீங்கள் ஆசீர்வதிகப்பட்டவர்கள்; ஏனெனில் இறைவனின் ஆவியானவர் மகிமையுடன் உங்களில் தங்கி வாழ்கிறாரே. 15ஆதலால் நீங்கள் ஒரு கொலைகாரனாகவோ, திருடனாகவோ, வேறுவிதமான குற்றம் செய்தவனாகவோ அல்லது தேவையின்றி பிறர் விஷயத்தில் தலையிட்டவனாகவோ துன்பம் அனுபவிக்கக்கூடாது. 16ஆனால் கிறிஸ்துவைப் பின்பற்றும் காரணத்திற்காக நீங்கள் வேதனையை அனுபவித்தால், அதைக்குறித்து வெட்கமடைய வேண்டாம். அந்தப் பெயருடையவர்களாய் நீங்கள் இருப்பதைக்குறித்து இறைவனைத் துதியுங்கள். 17ஏனெனில், நியாயத்தீர்ப்பு தொடங்கும் காலம் வந்துவிட்டது. அது இறைவனுடைய குடும்பத்தினரிடமே முதலில் தொடங்கும்; நியாயத்தீர்ப்பு நம்மிடத்தில் தொடங்குமானால், இறைவனுடைய நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னவாயிருக்கும்! 18வேதவசனத்தின்படி,
“நீதியுள்ளவர்கள் இரட்சிக்கப்படுவது கஷ்டம் என்றால்,
இறை பக்தியற்றவர்களுக்கும், பாவிகளுக்குமான நிலை என்னவாகும்?”#4:18 நீதி. 11:31 (எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதியைப் பார்க்கவும்)
19ஆகவே இறைவனுடைய திட்டத்தின்படி துன்பம் அனுபவிக்கிறவர்கள், உண்மையுள்ளவரான தங்களைப் படைத்த இறைவனிடம் தங்களை ஒப்புக்கொடுத்து, தொடர்ந்து நன்மை செய்யவேண்டும்.

Currently Selected:

1 பேதுரு 4: TCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy