YouVersion Logo
Search Icon

1 இராஜாக்கள் 8

8
ஆலயத்தில் உடன்படிக்கைப்பெட்டி
1சாலொமோன் அரசன் தாவீதின் பட்டணமான சீயோனிலிருந்து யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவருவதற்காக, இஸ்ரயேலின் முதியவர்களையும், எல்லா கோத்திரத் தலைவர்களையும், இஸ்ரயேல் குடும்பத் தலைவர்களையும் எருசலேமில் ஒன்றுகூடும்படி தன்னிடம் வரவழைத்தான். 2ஏழாம் மாதமாகிய ஏத்தானீம் மாதம் பண்டிகைக் காலத்தில் இஸ்ரயேல் மனிதர் யாவரும் சாலொமோன் அரசனிடம் ஒன்றுகூடி வந்தார்கள்.
3இஸ்ரயேலின் முதியவர்கள் எல்லோரும் வந்துசேர்ந்ததும் ஆசாரியர்கள் உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கினார்கள். 4அவர்கள் யெகோவாவின் பெட்டியையும், சபைக் கூடாரத்தையும், அதனுள்ளிருந்த பரிசுத்த பொருட்களையும் தூக்கிக்கொண்டு வந்தனர். ஆசாரியரும் லேவியரும் அதைத் தூக்கிக்கொண்டு சென்றார்கள். 5அரசன் சாலொமோனும் பெட்டிக்கு முன்னால் அவனோடே கூடிநின்ற இஸ்ரயேலின் முழுசபையும் உடன்படிக்கைப் பெட்டியின்முன் வந்து, அநேக செம்மறியாடுகளையும், ஆடுமாடுகளையும் பலியிட்டனர். அவற்றின் எண்ணிக்கையை கணக்கிடவோ குறித்துவைக்கவோ அவர்களால் முடியவில்லை.
6அதன்பின் ஆசாரியர்கள் யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியை எடுத்து, ஆலயத்தின் உட்புற பரிசுத்த இடமான மகா பரிசுத்த இடத்துக்குக் கொண்டுபோய், அங்கிருந்த கேருபீன்களின் செட்டைகளின்கீழ் வைத்தார்கள். 7விரிக்கப்பட்ட கேருபீன்களின் சிறகுகள் உடன்படிக்கைப் பெட்டிக்கும் அதைத் தூக்கும் கம்புகளுக்கும் மேலாக நிழலிட்டுக் கொண்டிருந்தன. 8இந்தக் கம்புகள் மிகவும் நீளமாயிருந்தன. அவற்றின் நுனிகள் பரிசுத்த இடத்திற்கு முன்பாக மகா பரிசுத்த இடத்திலிருந்து பார்க்கக்கூடியதாயிருந்து. ஆனால் பரிசுத்த இடத்திற்கு வெளியிலிருந்து பார்க்கும்போது அவை தெரியப்படவில்லை. இன்றுவரை அவ்வாறே இருக்கின்றன. 9அந்தப் பெட்டிக்குள் ஓரேப் மலையில் மோசே வைத்த இரண்டு கற்பலகைகளைத்தவிர வேறெதுவும் இருக்கவில்லை. அங்குதான் இஸ்ரயேலர் எகிப்தைவிட்டு வந்தபின்பு யெகோவா அவர்களுடன் ஒரு உடன்படிக்கை செய்திருந்தார்.
10ஆசாரியர்கள் பரிசுத்த இடத்தைவிட்டு வெளியே வந்தபோது, யெகோவாவின் ஆலயத்தை மேகம் நிரப்பியது. 11அந்த மேகத்தின் நிமித்தம் ஆசாரியர்கள் தாங்கள் செய்யவேண்டிய பணிகளைச் செய்யமுடியாமல் இருந்தார்கள். ஏனெனில் யெகோவாவின் மகிமை அவருடைய ஆலயத்தை நிரப்பியது.
12அப்பொழுது சாலொமோன், “நான் கார்மேகத்தில் தங்கியிருப்பேன் என யெகோவா சொன்னார்; 13நானோ உமக்காக நீர் என்றென்றும் குடியிருக்க ஒரு மேன்மையான ஆலயத்தைக் கட்டியிருக்கிறேன் என்றும்” சொன்னான்.
14இஸ்ரயேல் மக்கள் நின்றுகொண்டிருக்கையில், அரசன் அவர்கள் பக்கம் திரும்பிப்பார்த்து அவர்களை ஆசீர்வதித்தான். 15அவன் சொன்னதாவது:
“இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும். அவர் எனது தகப்பன் தாவீதுக்கு தமது சொந்த வாயினால் வாக்குப்பண்ணியதை, தமது சொந்த கரங்களினால் நிறைவேற்றியிருக்கிறார். 16அவர், ‘எகிப்திலிருந்து என் மக்களாகிய இஸ்ரயேலரை நான் கொண்டுவந்த நாளிலிருந்து, என் பெயர் விளங்கும்படி ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்கு, இஸ்ரயேலின் எந்தக் கோத்திரத்திலாகிலும் ஒரு பட்டணத்தை நான் தெரிந்துகொள்ளவில்லை. ஆனால் எனது மக்களாகிய இஸ்ரயேலை ஆள்வதற்கு தாவீதைத் தெரிந்துகொண்டேன்’ என்றார்.
17“இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவின் பெயருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்ற விருப்பம் எனது தகப்பன் தாவீதின் இருதயத்தில் இருந்தது. 18ஆனால் யெகோவா என் தகப்பனாகிய தாவீதைப் பார்த்து, ‘என் பெயருக்காக ஒரு ஆலயத்தை நீ கட்ட விரும்பினாய். இவ்வாறு நீ நினைத்தது நல்லதுதான். 19அப்படியிருந்தும் ஆலயத்தைக் கட்டவேண்டியது நீயல்ல. உனக்குப் பிறக்கும் உன் மகனே என்னுடைய பெயருக்கென்று ஆலயத்தைக் கட்டுவான்’ என்று கூறினார்.
20“இப்பொழுது யெகோவா தாம் கூறிய வாக்கை நிறைவேற்றினார். யெகோவா வாக்குப்பண்ணியபடியே என் தகப்பன் தாவீதுக்குப் பின் நான் இஸ்ரயேலின் அரியணையில் அமர்ந்திருக்கிறேன். நான் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவின் பெயருக்கு இந்த ஆலயத்தையும் கட்டியிருக்கிறேன். 21எகிப்திலிருந்து எங்கள் முற்பிதாக்களை யெகோவா கொண்டுவந்த காலத்தில், அவர்களுடன் அவர் செய்த யெகோவாவினுடைய உடன்படிக்கையை வைத்திருக்கும் பெட்டியை வைப்பதற்காக, ஆலயத்தில் ஒரு இடத்தையும் கொடுத்திருக்கிறேன்.”
சாலொமோனின் மன்றாட்டு
22அதன்பின் சாலொமோன், இஸ்ரயேலின் சபையார் எல்லோருக்கும் முன்பாக, யெகோவாவின் பலிபீடத்தின் முன்நின்று வானத்தை நோக்கித் தன் கைகளை விரித்தான். 23அவன் சொன்னதாவது:
“இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவே, மேலே வானத்திலும், கீழே பூமியிலும் உம்மைப்போல் இறைவன் இல்லை. உமது வழியில் முழுமனதோடு தொடர்ந்து நடக்கிற உமது அடியவர்களுடன் உமது அன்பின் உடன்படிக்கையின்படி செயலாற்றுகிறவர் நீரே. 24உமது அடியானாகிய என் தகப்பன் தாவீதுக்கு நீர் கொடுத்த வாக்கை நிறைவேற்றினீர். உமது வாயினால் நீர் வாக்குப்பண்ணியதை உமது கையினால் இன்று இருப்பதுபோல் நிறைவேற்றினீர்.
25“இப்பொழுது இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவே! உமது அடியானாகிய என் தகப்பன் தாவீதுக்கு நீர் கொடுத்த வாக்குத்தத்தங்களைக் காத்துக்கொள்ளும். நீர் அவரிடம், ‘நீ செய்ததுபோலவே உன் மகன்களும் எனக்கு முன்பாக உண்மையாக நடக்கும்படி தாங்கள் செய்வதெல்லாவற்றிலும் கவனமாயிருந்தால், இஸ்ரயேலின் அரியணையில் எனக்கு முன்பாக இருப்பதற்கு உனக்கு ஒரு மகன் இல்லாமல் போவதில்லை’ என்று சொன்னீரே. 26இப்பொழுதும் இஸ்ரயேலின் இறைவனே, உமது அடியானாகிய எனது தகப்பன் தாவீதுக்கு நீர் வாக்குப்பண்ணிய வார்த்தைகளை நிறைவேற்றும்.
27“ஆனாலும் உண்மையாகவே இறைவன் பூமியில் வாழ்வாரோ? வானங்களும் வானாதி வானங்களும் உம்மை உள்ளடக்க முடியாதே. அப்படியிருக்க நான் கட்டிய இந்த ஆலயம் எம்மாத்திரம்! 28ஆயினும் என் இறைவனாகிய யெகோவாவே, உமது அடியவனாகிய என் மன்றாட்டையும், இரக்கத்திற்கான வேண்டுதலையும் கவனித்துக் கேளும். இன்று உமது அடியவன் உமது சமுகத்தில் மன்றாடும் கதறுதலையும் விண்ணப்பத்தையும் கேட்பீராக. 29‘என் பெயர் விளங்குமென்று,’ நீர் சொன்ன இடமான இந்த ஆலயத்தை, உமது கண்கள் இரவும் பகலும் நோக்குவதாக. அப்பொழுது உமது அடியவன் இந்த இடத்தை நோக்கி வேண்டிக்கொள்ளும் மன்றாட்டை நீர் கேட்பீர். 30இந்த இடத்தை நோக்கி உமது அடியவனும், உம்முடைய மக்களாகிய இஸ்ரயேலரும் மன்றாடும்போது, எங்களுடைய விண்ணப்பத்தைக் கேளும். உம்முடைய உறைவிடமாகிய பரலோகத்திலிருந்து கேளும்; நீர் கேட்கும்போது மன்னியும்.
31“ஒரு மனிதன் தன் அயலானுக்கு தவறு செய்திருக்கையில், அவன் ஆணையிடும்படி கேட்கப்பட்டால், அவன் வந்து இந்த ஆலயத்தில் உமது பலிபீடத்தின்முன் ஆணையிட்டால், 32அப்பொழுது நீர் வானத்திலிருந்து கேட்டு நியாயம் செய்யும். குற்றம் செய்தவனுக்கு அவன் செய்ததற்கேற்ற தண்டனையை அவன் தலைமேல் வரப்பண்ணி, உமது அடியவருக்கு இடையில் நியாயம் செய்யும். குற்றமற்றவனை குற்றமற்றவன் என்று அவனுடைய குற்றமின்மையை நிலைநாட்டும்.
33“உமது மக்களாகிய இஸ்ரயேலர், உமக்கு எதிராக பாவம் செய்ததினால், பகைவர்களால் தோற்கடிக்கப்படலாம். அப்பொழுது அவர்கள் மனந்திரும்பி உமது பெயரை அறிக்கையிட்டு, இந்த ஆலயத்தில் உம்மிடம் மன்றாடி, விண்ணப்பம் செய்யும்போது, 34பரலோகத்திலிருந்து கேட்டு உமது மக்களாகிய இஸ்ரயேலின் பாவத்தை மன்னியும். நீர் அவர்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த நாட்டிற்குத் திரும்பவும் அவர்களைக் கொண்டுவாரும்.
35“உமக்கெதிராக உமது மக்கள் பாவம் செய்ததினால், வானங்கள் அடைக்கப்பட்டு, மழை இல்லாமல் போகும்போது, நீர் அவர்களைத் துன்புறுத்தியதால், இந்த இடத்தை நோக்கி அவர்கள் மன்றாடுவார்கள். அவ்வாறு அவர்கள் உமது பெயரை அறிக்கையிட்டு, தங்கள் பாவத்தைவிட்டு மனந்திரும்பி வேண்டும்போது, 36நீர் பரலோகத்திலிருந்து கேட்டு, உமது அடியவர்களும், உமது மக்களுமான இஸ்ரயேலரின் பாவத்தை மன்னியும். அவர்கள் வாழ்வதற்கு சரியான வழியைக் கற்பியும். நீர் உமது மக்களுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுத்த நாட்டில் மழையை அனுப்பும்.
37“நாட்டில் பஞ்சம் அல்லது கொள்ளைநோய் வருகிறபோதும், தாவர நோய், பூஞ்சணம், வெட்டுக்கிளி, தத்துவெட்டி வருகின்றபோதும், அல்லது பகைவர் அவர்களுடைய பட்டணங்களில் ஏதாவது ஒன்றை முற்றுகையிடும்போதோ, எந்தவித பேராபத்துகளோ, வியாதியோ வரும்போதும், 38அப்பொழுது உமது மக்களாகிய இஸ்ரயேலர் எவராவது தன்தன் மனதின் துன்பங்களை உணர்ந்தவர்களாய் இந்த ஆலயத்தை நோக்கித் தங்கள் கைகளை விரித்து மன்றாட்டையோ, விண்ணப்பத்தையோ செய்தால், 39உமது உறைவிடமாகிய பரலோகத்திலிருந்து கேட்டு மன்னியும். நீர் ஒவ்வொருவருடைய இருதயத்தை அறிந்திருக்கிறபடியால், அவனவன் செய்த செயல்களுக்குமேற்ப அவனவனுக்குச் செய்யும். எல்லா மனிதரின் இருதயங்களை அறிந்திருக்கிறவர் நீர் மட்டுமே. 40அதனால் நீர் எங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த நாட்டில், அவர்கள் வாழும் காலமெல்லாம் உமக்குப் பயந்து நடப்பார்கள்.
41“உம்முடைய மக்களான இஸ்ரயேலரைச் சேராதவனும், தூரதேசத்திலிருந்து வந்த அந்நியனும் உம்முடைய பெயரின் நிமித்தம் வரலாம். 42ஏனெனில் மனிதர் உமது பெரிதான பெயரையும், உமது வலிமைமிக்க கரத்தையும், நீட்டிய புயத்தையும் பற்றிக் கேள்விப்படுவார்கள். இவ்விதமாய் அந்நியர் வந்து இந்த ஆலயத்தை நோக்கி மன்றாடும்போது, 43நீர் உமது உறைவிடமாகிய பரலோகத்திலிருந்து அதைக்கேட்டு அந்த அந்நியன் உம்மிடம் கேட்பது எதுவானாலும் அதைச் செய்யும். அப்பொழுது பூமியில் எல்லா மக்களும் உமது பெயரை அறிந்து, உமது சொந்த மக்களாகிய இஸ்ரயேலர் நடப்பதுபோல் உமக்குப் பயந்து நடப்பார்கள். அத்துடன் நான் கட்டிய இந்த ஆலயத்தில் உமது பெயர் விளங்குகிறது என்றும் அறிவார்கள்.
44“உம்முடைய மக்களை நீர் எங்கேயாகிலும் அவர்களுடைய பகைவர்களை எதிர்த்துப் போரிட அனுப்பினால், அவர்கள் யுத்தத்திற்குப் போவார்கள்; அவ்வேளையில் நீர் தெரிந்துகொண்ட பட்டணத்தையும், உமது பெயருக்காக நான் கட்டிய ஆலயத்தையும் நோக்கி யெகோவாவிடம் அவர்கள் மன்றாடும்போது, 45பரலோகத்திலிருந்து அவர்களுடைய மன்றாட்டையும், வேண்டுதலையும் கேட்டு அவர்களுடைய சார்பாய் செயலாற்றும்.
46“பாவம் செய்யாதவன் எவனும் இல்லை. அதனால் அவர்கள் உமக்கெதிராகப் பாவம் செய்வார்கள்; அப்பொழுது நீர் அவர்கள்மேல் கோபங்கொண்டு, அவர்களை அவர்களின் பகைவர்களிடம் ஒப்புக்கொடுத்தால், பகைவர்கள் அவர்களைத் தங்கள் சொந்த நாட்டிற்குத் தூரமாகவோ அருகிலோ சிறைபிடித்துக்கொண்டு போவார்கள். 47அவர்கள் தாங்கள் கைதிகளாய் இருக்கும் நாட்டில் உணர்ந்து மனந்திரும்பி, ‘நாங்கள் பாவஞ்செய்து, தீமையான செயல்களைச் செய்து, கொடுமையாய் நடந்தோம்’ என்று அவர்களை சிறைப்பிடித்தவரின் நாட்டிலே உம்மிடம் கெஞ்சி, 48அவர்கள் தங்களைச் சிறைப்பிடித்துக் கொண்டுபோன தங்கள் பகைவரின் நாட்டில், தங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் உம்மிடத்தில் திரும்பி, நீர் அவர்களுடைய முற்பிதாக்களுக்குக் கொடுத்த நாட்டையும், நீர் தெரிந்துகொண்ட பட்டணத்தையும், நான் உமது பெயருக்கென கட்டிய ஆலயத்தையும் நோக்கி உம்மை நோக்கி அவர்கள் மன்றாடினால், 49நீர் குடியிருக்கும் இடமான பரலோகத்திலிருந்து அவர்கள் மன்றாட்டையும் கெஞ்சுதலையும் கேட்டு, அவர்கள் சார்பாய் செயலாற்றும். 50உமக்கெதிராகப் பாவஞ்செய்த உமது மக்களை மன்னியும்; உமக்கு எதிராகச் செய்த எல்லாக் குற்றங்களையும் அவர்களுக்கு மன்னித்து, அவர்களை வெற்றிகொண்டவர்கள் அவர்களுக்கு இரக்கம் காட்டும்படி செய்யும். 51ஏனெனில் அவர்கள், உம்முடைய மக்களும், உம்முடைய உரிமைச்சொத்துமாய் இருக்கிறார்கள். இரும்பு உருக்கும் சூளையாகிய அந்த எகிப்திலிருந்து நீரே அவர்களை வெளியே கொண்டுவந்தீர்.
52“உமது அடியானுடைய விண்ணப்பத்திற்கும், உமது மக்களாகிய இஸ்ரயேலின் விண்ணப்பத்திற்கும் உமது கண்கள் திறந்திருப்பதாக. அவர்கள் உம்மை நோக்கிக் கதறும் போதெல்லாம் அவர்களுக்குச் செவிகொடுப்பீராக. 53ஆண்டவராகிய யெகோவாவே, நீர் எங்கள் முற்பிதாக்களை எகிப்திலிருந்து கொண்டுவந்தபோது, உமது அடியவன் மோசே மூலம் அறிவித்தபடியே நீர் உலகிலுள்ள எல்லா மக்களிலும் இஸ்ரயேலரை உமது உரிமைச்சொத்தாகத் தெரிந்துகொண்டீர்” என்றான்.
54யெகோவாவை நோக்கி சாலொமோன் இந்த மன்றாட்டுகளையும், விண்ணப்பங்களையும் செய்துமுடித்தான். அப்போது, யெகோவாவின் பலிபீடத்திற்கு முன்பாகத் தன் கைகளை வானத்துக்கு நேராக விரித்து முழங்காலில் நின்றுகொண்டிருந்தவன், அவ்விடத்தைவிட்டு எழுந்தான். 55அவன் எழுந்து நின்று முழு இஸ்ரயேல் மக்கள் கூட்டத்தையும் பலத்த சத்தமாய் ஆசீர்வதித்துச் சொன்னதாவது:
56“தாம் வாக்குப்பண்ணியபடியே நிறைவேற்றி, தம் மக்களான இஸ்ரயேலருக்கு ஆறுதலைக் கொடுத்த யெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும். தம்முடைய அடியவனாகிய மோசே மூலம் கொடுத்த எல்லா நல்வாக்குகளிலும் ஒரு வார்த்தையாவது நிறைவேறாமல் போகவில்லை. 57எங்கள் இறைவனாகிய யெகோவா எங்கள் தந்தையருடன் இருந்ததுபோல, எங்களுடனும் இருப்பாராக. அவர் எங்களைக் கைவிடாமலும், எங்களைவிட்டு ஒருபோதும் விலகாமலும் இருப்பாராக. 58அவருடைய எல்லா வழிகளிலும் நடக்கவும், அவர் எங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த கட்டளைகளையும், விதிமுறைகளையும், சட்டங்களையும் கைக்கொள்ளவும் எங்கள் இருதயங்களை அவர் பக்கமாகத் திருப்புவாராக. 59யெகோவாவுக்கு முன்பாக நான் மன்றாடிய இந்த வார்த்தைகள் இரவும் பகலும் எங்கள் இறைவனாகிய யெகோவாவின் அருகே இருப்பதாக. அவர் தமது அடியானுக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் அன்றாட தேவைகளுக்கேற்றபடி சார்பாய் இருப்பாராக. 60இதனால் உலகிலுள்ள எல்லா மக்களும் யெகோவாவே இறைவன் என்றும், வேறே ஒரு தெய்வமும் இல்லையென்றும் அறிந்துகொள்வார்கள். 61ஆனால் இக்காலத்தில் இருப்பதுபோலவே அவருடைய விதிமுறைகளின்படி வாழவும், அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படியவும் எங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு உங்கள் இருதயங்கள் முற்றிலும் ஒப்புக்கொடுக்கப்பட வேண்டும்” என்றான்.
ஆலய அர்ப்பணம்
62பின்பு அரசனும், அவனுடனிருந்த எல்லா இஸ்ரயேலரும், யெகோவாவுக்கு முன்பாக பலிகளைச் செலுத்தினார்கள். 63சாலொமோன் இருபத்திரண்டாயிரம் மாடுகளையும், இலட்சத்திருபதாயிரம் செம்மறியாடுகளையும், வெள்ளாடுகளையும் சமாதான காணிக்கையாகச் செலுத்தினான். இவ்விதமாக அரசனும், எல்லா இஸ்ரயேலரும் யெகோவாவின் ஆலயத்தை அர்ப்பணம் பண்ணினார்கள்.
64அதே நாளிலேயே அரசன் யெகோவாவின் ஆலயத்தின் முன்பக்கத்திலுள்ள முற்றத்தின் நடுப்பகுதியை அர்ப்பணித்தான். அங்கே அவன் தகன காணிக்கைகளையும், தானிய காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளின் கொழுப்பையும் செலுத்தினான். ஏனெனில் யெகோவாவின் முன்பாக அமைந்திருந்த வெண்கலப் பலிபீடம் தகன காணிக்கைகளையும், தானிய காணிக்கைகளையும், சமாதான காணிக்கையின் கொழுப்பையும் கொள்ளமுடியாதபடி சிறியதாயிருந்தது.
65எனவே சாலொமோனும், மிகப்பெரிய கூட்டமாய் லேபோ ஆமாத் எல்லைமுதல் எகிப்து நதிவரை அவனோடிருந்த எல்லா இஸ்ரயேல் மக்களும் சேர்ந்து இந்தக் காலத்தில் பண்டிகையைக் கொண்டாடினர்; எங்கள் இறைவனாகிய யெகோவாவின் முன்பாக முதல் ஏழு நாளும், பின்பு இன்னும் ஏழுநாளுமாக மொத்தம் பதினான்கு நாட்களாகக் கொண்டாடினார்கள். 66அடுத்தநாள் அரசன் மக்களை அனுப்பிவிட்டான். அவர்கள் அரசனை வாழ்த்தி, யெகோவா தமது அடியவனாகிய தாவீதுக்கும், தனது மக்களான இஸ்ரயேலருக்கும் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் மனதில் சந்தோஷமும், மகிழ்ச்சியும் கொண்டவர்களாய் தங்கள் வீடுகளுக்குப் போனார்கள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for 1 இராஜாக்கள் 8