YouVersion Logo
Search Icon

1 இராஜாக்கள் 21

21
நாபோத்தின் திராட்சைத் தோட்டம்
1சில நாட்களுக்குபின் யெஸ்ரயேல் ஊரைச்சேர்ந்த நாபோத்துக்கு உரிமையான திராட்சைத் தோட்டத்திற்கு தொடர்பாக ஒரு சம்பவம் நடந்தது. அந்த திராட்சைத் தோட்டம் யெஸ்ரயேலில் சமாரிய அரசனாகிய ஆகாபின் அரண்மனைக்கு அருகே இருந்தது. 2ஆகாப் நாபோத்தைப் பார்த்து, “உனது திராட்சைத் தோட்டம் என் அரண்மனைக்குப் பக்கத்தில் இருப்பதால் அதை எனக்கு கீரைத்தோட்டம் போடுவதற்காகத் கொடு. அதற்குப் பதிலாக அதைக்காட்டிலும் திறமையான ஒரு திராட்சைத் தோட்டத்தை உனக்குத் தருகிறேன் அல்லது நீ விரும்பினால் அதற்கான பணத்தை உனக்குத் தருகிறேன்” என்றான்.
3ஆனால் நாபோத்தோ, “என் முற்பிதாக்களுடைய உரிமைச்சொத்தை நான் உமக்கு விற்றுப்போடாதபடி யெகோவா என்னைத் தடைசெய்வாராக” என்றான்.
4யெஸ்ரயேலனாகிய நாபோத், “முற்பிதாக்களின் உரிமைச் சொத்தைத் தரமாட்டேன்” என்று சொன்னதினால், ஆகாப் ஆத்திரம் கொண்டவனாய்த் தன் வீட்டுக்குப் போனான். அவன் யாருடனும் பேசாமல் படுக்கையில் படுத்துக்கொண்டு சாப்பிடுவதற்கும் மறுத்துவிட்டான்.
5அப்பொழுது அவனுடைய மனைவி யேசபேல் உள்ளே வந்து, “ஏன் யாருடனும் பேசாமல் இருக்கிறீர்? ஏன் சாப்பிடாமல் ஆழ்ந்த துயரத்துடன் இருக்கிறீர்?” என்று கேட்டாள்.
6ஆகாப் அவளைப் பார்த்து, “நான் யெஸ்ரயேல் ஊரானாகிய நாபோத்திடம், ‘உன்னுடைய திராட்சைத் தோட்டத்தை பணத்திற்கு எனக்கு விற்று விடு. அல்லது அதற்குப் பதிலாக நீ விரும்பினால் இன்னொரு திராட்சைத் தோட்டத்தைத் தருவேன்’ என்று கேட்டுப் பார்த்தேன். அவன் அதற்கு, ‘நான் என்னுடைய திராட்சைத் தோட்டத்தைத் தரமாட்டேன்’ என்று கூறி விட்டான்” என்றான்.
7அதற்கு அவன் மனைவி யேசபேல், “நீர் இஸ்ரயேலின் அரசனல்லவா? இப்படித்தான் நடந்துகொள்வதா? எழுந்து சாப்பிடும், சந்தோஷமாயிரும். யெஸ்ரயேல் ஊரானாகிய நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை நான் உமக்கு எடுத்துத்தருவேன்” என்றாள்.
8அப்பொழுது அவள் ஆகாபின் பெயரில் கடிதங்கள் எழுதி அவனுடைய முத்திரையைப் போட்டு, நாபோத்தின் பட்டணத்தில் அவனுடன் வாழ்ந்தவர்களான உயர்குடி மக்களுக்கு அவற்றை அனுப்பினாள். 9அவள் எழுதிய கடிதத்தில்,
“உபவாசத்துக்கென்று ஒருநாளை அறிவித்து மக்களின் நடுவில் முக்கியமான ஒரு இடத்தில் நாபோத்தை அமர்த்துங்கள். 10அவனுக்கு எதிரில் இரண்டு அயோக்கியர்களை அமரவையுங்கள். நாபோத் இறைவனையும், அரசனையும் சபித்தான் என்று அவ்விருவரையும் சாட்சி சொல்லவையுங்கள். பின்பு, நகரத்துக்கு வெளியே கொண்டுபோய் அவனைக் கல்லெறிந்து கொல்லுங்கள்” என்று எழுதியிருந்தாள்.
11நாபோத் வாழ்ந்த பட்டணத்தில் இருந்த மூப்பர்களும், பெரியோர்களும், யேசபேல் அவர்களுக்கு எழுதிய கடிதங்களில் கொடுக்கப்பட்ட அறிவுறுத்தலின்படியே செய்தார்கள். 12அவர்கள் உபவாசத்துக்கென்று மக்களை ஒன்றுகூட்டி, மக்களின் நடுவில் ஒரு முக்கிய இடத்தில் நாபோத்தை நிறுத்தினார்கள். 13அப்பொழுது இரண்டு அயோக்கியர்கள் வந்து நாபோத்துக்கு முன்பாக உட்கார்ந்தார்கள். அவர்கள், “நாபோத் இறைவனையும் அரசனையும் சபித்தான்” என்று சொல்லி மக்களுக்கு முன்பாக அவனுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கொண்டுவந்தார்கள். அதன்படி அவனை நகரத்துக்கு வெளியே கொண்டுபோய், கல்லெறிந்து கொன்றார்கள். 14பின்பு அவர்கள் யேசபேலுக்கு, “நாபோத் கல்லெறியப்பட்டு இறந்துபோனான்” என்று செய்தி அனுப்பினார்கள்.
15நாபோத் கல்லெறியப்பட்டு இறந்தான் என யேசபேல் கேள்விப்பட்ட உடனே அவள் ஆகாபிடம், “நீர் எழுந்துபோய், யெஸ்ரயேல் ஊரானாகிய நாபோத் உமக்கு விற்க மறுத்த திராட்சைத் தோட்டத்தை உமக்குச் சொந்தமாக எடுத்துக்கொள்ளும். அவன் உயிரோடில்லை. அவன் இறந்துபோனான்” என்றாள். 16நாபோத் இறந்துவிட்டான் என்று ஆகாப் கேள்விப்பட்டபோது, அவன் எழுந்து யெஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை தன் உரிமையாக்கிக் கொள்வதற்காகப் போனான்.
17அப்பொழுது திஸ்பியனாகிய எலியாவுக்கு யெகோவாவினுடைய வார்த்தை வந்தது. 18“சமாரியாவில் அரசாளுகிற இஸ்ரயேலின் அரசன் ஆகாபைச் சந்திக்கப் போ. அவன் இப்போது நாபோத்தினுடைய திராட்சைத் தோட்டத்தைத் தன் உரிமையாக்கிக்கொள்ளும்படி அங்கு போயிருக்கிறான். 19அவனிடம் நீ சொல்லவேண்டியதாவது, ‘யெகோவா கூறுவது இதுவே: நீ ஒரு மனிதனைக் கொலைசெய்து, அவனுடைய சொத்தை அபகரிக்கவில்லையா?’ என்று அவனிடம் கேள். மேலும் நீ அவனிடம், ‘யெகோவா கூறுவது இதுவே: நாபோத்தின் இரத்தத்தை நாய்கள் நக்கின அதே இடத்திலே உன் இரத்தத்தையும் நாய்கள் நக்கும்; ஆம் உன் இரத்தத்தையும் நாய்கள் நக்கும்’ ” என்றான்.
20அப்பொழுது ஆகாப் எலியாவிடம், “என் பகைவனே என்னைக் கண்டுபிடித்துவிட்டாயா?” என்றான்.
எலியா அதற்குப் பதிலாக, “யெகோவாவின் பார்வையில் தீமைசெய்யும்படி நீ உன்னை விற்றுப்போட்டபடியினால், நான் உன்னைக் கண்டுபிடித்து விட்டேன். 21நான் உன்மீது பெரும் அழிவைக் கொண்டுவரப் போகிறேன். உன் சந்ததிகளை நான் அழித்துவிடுவேன். அடிமையோ, விடுதலையானவனோ இஸ்ரயேலில் ஆகாபுக்குச் சொந்தமான ஒரு ஆணும் உயிருடன் மீதியாக இருக்காதபடி அழித்துவிடுவேன். 22நீ எனக்குக் கோபமூட்டி முழு இஸ்ரயேல் மக்களையும் பாவம் செய்யப்பண்ணியபடியால், நான் உன் குடும்பத்தை நேபாத்தின் மகன் யெரொபெயாமின் குடும்பத்தைப்போலவும், அகியாவின் மகன் பாஷாவின் குடும்பத்தைப்போலவும் மாற்றுவேன்” என்று யெகோவா கூறுகிறார்.
23“மேலும் யேசபேலைக் குறித்து யெகோவா, ‘யெஸ்ரயேலின் பட்டண மதிலின் அருகே அவளை நாய்கள் தின்னும்’ என்று சொல்கிறார்.
24“பட்டணத்திற்குள் இறக்கிற ஆகாபின் குடும்பத்தினரை நாய்கள் தின்னும் என்றும் பட்டணத்திற்கு வெளியே இறக்கிறவர்களை ஆகாயத்துப் பறவைகள் தின்னும் என்றும் கூறுகிறார்” என்றான்.
25தன் மனைவியாகிய யேசபேலினால் தூண்டப்பட்டு, யெகோவாவுக்குமுன் தீமைசெய்ய தன்னை விற்றுப்போட்ட ஆகாபைப் போல் வேறு யாரும் இருந்ததில்லை. 26இஸ்ரயேலருக்கு முன்பாக யெகோவா துரத்திய எமோரியரைப்போலவே, அவனும் விக்கிரகங்களைப் பின்பற்றி, மிகவும் கீழ்த்தரமாக நடந்தான்.
27ஆகாப் இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தன் ஆடைகளைக் கிழித்து, துக்கவுடையை உடுத்திக்கொண்டு உபவாசித்தான். அத்துடன் அவன் மனமுடைந்தவனாய் துக்கவுடையில் படுத்தும் நடந்தும் திரிந்தான்.
28அப்போது திஸ்பியனாகிய எலியாவுக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது. 29“எனக்கு முன்பாக ஆகாப் எவ்வளவாகத் தன்னைத் தாழ்த்தியிருக்கிறான் என்று கண்டாயா? அவன் தன்னைத் தாழ்த்தினபடியால், நான் இந்தப் பேரழிவை அவனுடைய வாழ்நாட்களில் கொண்டுவரமாட்டேன். ஆயினும், அவனுடைய மகனின் நாட்களில், அவன் குடும்பத்தின்மேல் அந்த பேரழிவைக் கொண்டுவருவேன்” என்றார்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in