YouVersion Logo
Search Icon

1 இராஜாக்கள் 17

17
இறைவாக்கினன் எலியா
1கீலேயாத்தின் ஊரைச்சேர்ந்த திஸ்பியனாகிய எலியா என்பவன் ஆகாப் அரசனிடம் வந்து, “நான் பணிசெய்யும் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா இருப்பதுபோல் அடுத்துவரும் சில வருடங்களுக்கு நான் சொன்னாலன்றி, நாட்டில் மழையோ, பனியோ பொழிவதில்லை” என்றான்.
எலியாவுக்கு காகங்கள் மூலம் உணவு
2அதன்பின்பு யெகோவாவினுடைய வார்த்தை எலியாவுக்கு வந்தது. 3அவர் அவனிடம், “நீ இந்த இடத்தைவிட்டு கிழக்குப் பக்கம் திரும்பி, யோர்தானுக்குக் கிழக்கேயுள்ள கேரீத் பள்ளத்தாக்கில் ஒளிந்துகொள். 4நீ அந்த நீரோடையில் தண்ணீரைக் குடிப்பாய்; அங்கே உனக்கு உணவு கொடுக்கும்படி நான் காகங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறேன்” என்றார்.
5யெகோவா கூறியபடியே அவன் செய்தான். அவன் யோர்தானுக்குக் கிழக்குப் பக்கமாக இருந்த கேரீத் பள்ளத்தாக்கிற்குப் போய் அங்கே தங்கியிருந்தான். 6காகங்கள் அவனுக்குக் காலையில் அப்பமும், இறைச்சியும் மாலையில் அப்பமும், இறைச்சியும் கொண்டுபோய்க் கொடுத்தன. அவன் நீரோடையிலிருந்து தண்ணீரைக் குடித்தான்.
சாறிபாத் ஊர் விதவை
7நாட்டில் மழை இல்லாதிருந்தபடியால் சில நாட்களுக்குப்பின்பு நீரோடையிலிருந்த தண்ணீர் வற்றிவிட்டது. 8அப்பொழுது யெகோவாவின் வார்த்தை எலியாவுக்கு வந்தது. 9அவர் அவனிடம், “நீ எழுந்து உடனே சீதோனிலுள்ள சாரெபாத் ஊருக்குப் போய், அங்கே தங்கியிரு. உனக்கு உணவு கொடுக்கும்படி அங்கேயிருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டிருக்கிறேன்” என்றார். 10அப்படியே அவன் சாரெபாத் என்ற ஊருக்குப் போனான். அவன் அந்த நகர வாசலுக்குப் போனபோது அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக் கொண்டிருந்தாள். அவன் அவளைக் கூப்பிட்டு, “எனக்குக் குடிப்பதற்கு ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வருவாயா?” என்று கேட்டான். 11அவள் அவனுக்குத் தண்ணீர் கொண்டுவரப் போகும்போது அவன் அவளைக் கூப்பிட்டு, “தயவுசெய்து எனக்கு ஒரு துண்டு அப்பமும் கொண்டுவா” என்றான்.
12அதற்கு அவள், “உம்முடைய இறைவனாகிய யெகோவா இருப்பது நிச்சயமெனில், என்னிடம் அப்பம் ஒன்றுமில்லை என்பதும் நிச்சயம். ஒரு பானையில் ஒரு பிடியளவு மாவும், ஒரு ஜாடியில் சிறிது எண்ணெயும் மாத்திரமே என்னிடம் உண்டு. எனக்கும் என் மகனுக்கும் உணவு தயாரிப்பதற்கு ஓரிரு விறகுகளைப் பொறுக்குகிறேன். இதை வீட்டிற்குக் கொண்டுபோய் எங்கள் கடைசி உணவைத் தயாரித்து சாப்பிட்டுவிட்டு, பிறகு உணவில்லாமல் சாகப்போகிறோம்” என்றாள்.
13அதற்கு எலியா அவளிடம், “பயப்படாதே. நீ வீட்டுக்குப்போய் சொன்னபடியே செய். ஆனால் முதலில் உன்னிடம் இருப்பதில் ஒரு சிறிய அப்பத்தைச் சுட்டு எனக்கு கொண்டுவா. அதன்பின்பு உனக்கும் உன் மகனுக்கும் எதையாவது செய். 14ஏனெனில் யெகோவா நாட்டிற்கு மழையை அனுப்பும் நாள்வரைக்கும், உன் பானையிலுள்ள மாவு தீர்ந்துபோவதுமில்லை. உன் ஜாடியிலுள்ள எண்ணெய் குறைவதுமில்லை என்று இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா கூறுகிறார்” என்றான்.
15அவள் போய் எலியா சொன்னபடி செய்தாள். அப்படியே ஒவ்வொரு நாளும் எலியாவுக்கும் அந்தப் பெண்ணுக்கும் அவள் குடும்பத்திற்கும் உணவு இருந்தது. 16எலியாவின் மூலம் யெகோவா கூறியபடி பானையில் இருந்த மாவு தீர்ந்துபோகவுமில்லை, ஜாடியில் இருந்த எண்ணெய் குறையவுமில்லை.
17சில நாட்களுக்குப்பின்பு அந்த வீட்டுச் சொந்தக்காரியான விதவையின் மகன் நோயுற்றான். வருத்தம் கடுமையாகி அவன் மூச்சு நின்றுவிட்டது. 18அப்பொழுது அந்தப் பெண் எலியாவைப் பார்த்து, “இறைவனுடைய மனிதனே, எனக்கு எதிராக உமக்கு என்ன இருக்கிறது? என் பாவத்தை ஞாபகப்படுத்தவும், என் மகனைக் கொல்வதற்குமா இங்கு வந்தீர்?” என்று கேட்டாள்.
19அப்பொழுது எலியா அவளைப் பார்த்து, “உன் மகனை என்னிடம் தா” என்று சொல்லி அவளிடமிருந்து மகனை எடுத்து, தான் தங்கியிருந்த மேல்வீட்டறைக்குக் கொண்டுபோய், தன் படுக்கையில் அவனைக் கிடத்தினான். 20பின்பு அவன் யெகோவாவை நோக்கி, “என் இறைவனாகிய யெகோவாவே! என்னைப் பராமரிக்கிற இந்த விதவையின் மகனைச் சாகப்பண்ணி, அவள்மேல் இந்த மனவேதனையைக் கொண்டுவந்தீரே!” என்று கதறினான். 21அதன்பின் அவன் மூன்றுமுறை அந்தப் பிள்ளையின்மேல் முகங்குப்புற கிடந்து யெகோவாவைப் பார்த்து, “என் இறைவனாகிய யெகோவாவே! இந்தச் சிறுவனின் உயிர் இவனுக்குள் திரும்பி வரட்டும்” என்று கதறி அழுதான்.
22யெகோவா எலியாவின் கூப்பிடுதலைக் கேட்டார். சிறுவனின் உயிர் திரும்பவும் அவனுக்கு வந்தது. அவன் உயிர் பெற்றான். 23எலியா பிள்ளையை தன்னுடைய அறையிலிருந்து தூக்கிக்கொண்டு வந்தான். அவனை அவன் தாயிடம் கொடுத்து, “பார் உன் மகன் உயிரோடிருக்கிறான்” என்றான்.
24அப்பொழுது அவள் எலியாவைப் பார்த்து, “நீர் ஒரு இறைவனுடைய மனிதன் என்றும், உம்முடைய வாயிலிருந்து வரும் யெகோவாவின் வார்த்தை உண்மை என்றும் இப்பொழுது நான் அறிகிறேன்” என்றாள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in