YouVersion Logo
Search Icon

1 இராஜாக்கள் 13

13
யூதாவிலிருந்து இறைவனின் மனிதன்
1யெரொபெயாம் காணிக்கை செலுத்துவதற்காக பலிபீடத்தின் அண்டையில் நிற்கையில், யெகோவாவின் வார்த்தையின்படி யூதாவிலிருந்து பெத்தேலுக்கு ஒரு இறைவனின் மனிதன் வந்தான். 2அவன் யெகோவாவின் வார்த்தைப்படி, “பலிபீடமே, பலிபீடமே, யெகோவா சொல்வது இதுவே: தாவீதின் சந்ததியில் யோசியா என்ற பெயருள்ள ஒரு மகன் பிறப்பான். இந்த மேடையில் பலிசெலுத்தும் பூசாரிகளை அவன் உன்மேல் பலியிடுவான். உன்மேல் மனித எலும்புகள் எரிக்கப்படும் என்று யெகோவா கூறுகிறார்” என்று பலிபீடத்துக்கு எதிராகச் சத்தமிட்டுச் சொன்னான். 3அதே நாளில் இறைவனுடைய மனிதன் ஒரு அடையாளத்தைக் கொடுத்தான். “யெகோவா அறிவிக்கும் அடையாளம் இதுவே: இந்தப் பலிபீடம் இரண்டாகப் பிளக்கப்பட்டு அதன் சாம்பல் நிலத்தில் கொட்டுண்டுபோகும்” என்றான்.
4இறைவனுடைய மனிதன் பெத்தேலிலிருந்த பலிபீடத்தைச் சபித்ததை அரசன் யெரொபெயாம் கேட்டபோது பலிபீடத்திலிருந்து தன் கையை நீட்டி, “அவனைப் பிடியுங்கள்” என்றான். ஆனால் அந்த மனிதனுக்கு எதிராக நீட்டப்பட்ட அவனுடைய கை திரும்ப எடுக்க முடியாதபடி மரத்துப்போயிற்று. 5அதேவேளையில் யெகோவாவின் வார்த்தையால் இறைவனின் மனிதன்மூலம் கொடுத்த அடையாளத்தின்படி பலிபீடமும் பிளந்து சாம்பல் கொட்டப்பட்டது.
6அப்பொழுது அரசன் இறைவனுடைய மனிதனிடம், “உம்முடைய இறைவனாகிய யெகோவாவிடம் எனக்காகப் பரிந்துபேசி, என் கை திரும்பவும் முன்போல வரவேண்டும் என்று வேண்டுதல் செய்யும்” என்றான். எனவே இறைவனின் மனிதன் யெகோவாவிடம் பரிந்து மன்றாடியதால் அரசனுடைய கை முன் இருந்ததுபோல் திரும்பி வந்தது.
7அரசன் இறைவனுடைய மனிதனைப் பார்த்து, “நீர் என்னுடைய அரண்மனைக்கு வந்து சாப்பிடும். நான் உமக்கு ஒரு அன்பளிப்பைக் கொடுப்பேன்” என்றான்.
8ஆனால் இறைவனுடைய மனிதன் அரசனிடம், “நீர் உமது உடைமைகளில் பாதியைத் தருவதாக இருந்தாலும் உம்மோடு நான் வரமாட்டேன். சாப்பிடவோ, தண்ணீர் குடிக்கவோ மாட்டேன். 9ஏனெனில் நீ சாப்பிடவோ, தண்ணீர் குடிக்கவோ வேண்டாம். ‘அத்துடன் நீ வந்த வழியாய் திரும்பிப் போகவும் வேண்டாம்’ என யெகோவா எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்” என்று கூறினான். 10அவ்வாறே பெத்தேலுக்குத் தான் வந்த வழியால் திரும்பாமல், வேறு வழியால் அவன் போனான்.
11அப்பொழுது பெத்தேலில் முதியவனான ஒரு இறைவாக்கினன் இருந்தான். அவனுடைய மகன்கள் அவனிடம் வந்து, இறைவனுடைய மனிதன் அன்று அங்கு செய்த யாவற்றையும் சொன்னார்கள். அத்துடன் அரசனுக்கு அவன் என்ன சொன்னான் என்பதையும் சொன்னார்கள். 12அவர்களுடைய தகப்பன் அவர்களிடம், “அவன் எந்த வழியாகப் போனான்” என்று கேட்டான். அதற்கு யூதாவிலிருந்து வந்தவனான இறைவாக்கினன் போன வழியை அவனுடைய மகன்கள் அவனுக்குக் காட்டினார்கள். 13அப்பொழுது அவன் தன் மகன்களிடம், “எனக்காகக் கழுதையின்மேல் சேணம் கட்டுங்கள்” என்றான். அவர்கள் சேணம் கட்டியபோது அவன் அதில் ஏறி, 14இறைவனுடைய மனிதனைப் பின்தொடர்ந்து போனான். இறைவனுடைய மனிதன் ஒரு கர்வாலி மரத்தின்கீழ் இருப்பதைக் கண்டு, “யூதாவிலிருந்து வந்த இறைவனுடைய மனிதன் நீர்தானா” என்று கேட்டான்.
அதற்கு அவன், “நான்தான்,” என்று பதில் சொன்னான்.
15அந்த இறைவாக்கினன் அவனிடம், “என்னுடன் வீட்டிற்கு வந்து சாப்பிடும்” என்றான்.
16அதற்கு இறைவனுடைய மனிதன் அவனிடம், “நான் திரும்பி உன்னுடன் போகவும், இவ்விடத்தில் உன்னுடன் அப்பம் சாப்பிடவும், தண்ணீர் குடிக்கவும் முடியாது. 17ஏனென்றால் நீ அங்கே அப்பம் சாப்பிடவோ, தண்ணீர் குடிக்கவோ வேண்டாம். ‘நீ போன வழியில் திரும்பி வரவுங்கூடாது’ என்று யெகோவாவினால் கட்டளைப் பெற்றிருக்கிறேன்” என்றான்.
18அப்பொழுது அந்த முதியவனான இறைவாக்கினன் அவனிடம், “நானும் உம்மைப் போல ஒரு இறைவாக்கினன்தான். யெகோவாவின் வார்த்தைப்படி ஒரு தேவதூதன் வந்து, ‘அவன் அப்பம் சாப்பிடவும், தண்ணீர் குடிக்கவும் உன்னுடைய வீட்டுக்கு அவனைத் திரும்ப கூட்டிக்கொண்டு வா’ என்று சொன்னார்” என்று கூறினான். இப்படி அவன் பொய்யையே கூறினான். 19எனவே இறைவனுடைய மனிதன் அவனுடன் திரும்பிப்போய் அவனுடைய வீட்டில் சாப்பிட்டு குடித்தான்.
20அவர்கள் சாப்பாட்டு பந்தியில் உட்கார்ந்தபோது, அவனைத் திரும்பக் கூட்டிக்கொண்டுவந்த அந்த வயதான இறைவாக்கினனுக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது. 21அவன் யூதாவிலிருந்து வந்த இறைவனின் மனிதனைப் பார்த்து, “நீ உன்னுடைய இறைவனாகிய யெகோவாவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிய மறுத்து, உன் இறைவனாகிய யெகோவா உனக்குத் தந்த கட்டளையையும் கைக்கொள்ளவில்லை. 22அவர் உன்னைச் சாப்பிடவோ, குடிக்கவோ வேண்டாம் என்று தடுத்த இடத்துக்கு நீ திரும்பிவந்து அப்பத்தைச் சாப்பிட்டுக் தண்ணீரைக் குடித்தாய். ஆகையினால் உன்னுடைய பிரேதம் உன் முற்பிதாக்களின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட மாட்டாது என்று யெகோவா கூறுகிறார்” என்றான்.
23இறைவனுடைய மனிதன் சாப்பிட்டுக் குடித்த பின்பு, அவனைத் திரும்ப அழைத்துவந்த இறைவாக்கினன் அவனுக்காக அவன் கழுதையின்மேல் சேணம் கட்டிக்கொடுத்தான். 24அவன் தன் வழியே போனபோது ஒரு சிங்கம் அவனை வழியில் கொன்றுபோட்டது. அவனுடைய உடல் வழியருகே எறியப்பட்டுக் கிடந்தது. கழுதையும், சிங்கமும் அதன் அருகே நின்றன. 25அந்த வழியால் போன சிலர் அங்கே உடல் எறியப்பட்டுக் கிடப்பதையும், அதனருகே சிங்கம் நின்றதையும் கண்டு, வயது முதிர்ந்த இறைவாக்கினன் வசித்த பட்டணத்திற்குப் போய் அதை அறிவித்தார்கள்.
26அவனுடைய பயணத்திலிருந்து அவனைத் திரும்பக் கூட்டிக்கொண்டுவந்த இறைவாக்கினன் அதைக் கேள்விப்பட்டபோது, அவன், “இவனே யெகோவாவினுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிய மறுத்த யெகோவாவினுடைய மனிதன். யெகோவா தமது வார்த்தையால் அவனை எச்சரித்தபடியே, அவனைச் சிங்கத்திடம் ஒப்புக்கொடுத்தார். அது அவனைக் கிழித்துக் கொன்றது” என்றான்.
27அந்த இறைவாக்கினன் தன் மகன்களிடம், “கழுதையின்மேல் சேணம் கட்டுங்கள்” என்றான். அவர்கள் அப்படியே செய்தார்கள். 28அவன் போய் தெருவில் உடல் எறியப்பட்டுக் கிடப்பதையும், சிங்கமும், கழுதையும் அதனருகே நிற்பதையும் கண்டான். சிங்கம் உடலை தின்னவுமில்லை. கழுதையை தாக்கவுமில்லை. 29அந்த இறைவாக்கினன் இறைவனின் மனிதனுடைய உடலை எடுத்து, தன் கழுதையின்மேல் வைத்து, அவனுக்காகத் துக்கிக்கவும், அவனை அடக்கம்பண்ணவும், தன்னுடைய சொந்தப் பட்டணத்துக்குக் கொண்டுவந்தான். 30அந்த உடலைத் தன் சொந்தக் கல்லறையில் வைத்தான். அவர்கள், “ஐயோ! என் சகோதரனே” என்று கூறி அவனுக்காகத் துக்கப்பட்டார்கள்.
31அவனை அடக்கம் செய்தபின்பு, அவன் தன் மகன்களைப் பார்த்து, “நான் இறக்கும்போது, இறைவனுடைய மனிதனாகிய இவன் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையில் என்னையும் அடக்கம்பண்ணுங்கள். அவன் எலும்புகளின் பக்கத்திலேயே என் எலும்புகளையும் வையுங்கள். 32ஏனெனில் பெத்தேலிலுள்ள பலிபீடத்திற்கு விரோதமாகவும், சமாரிய பட்டணங்களில் உயர்ந்த இடங்களிலுள்ள வழிபாட்டிடங்கள் எல்லாவற்றுக்கும் விரோதமாகவும் அவன் யெகோவாவின் வார்த்தையை அறிவித்த செய்தி நிச்சயமாக நிறைவேறும்” என்றான்.
33அதன்பின்பும் யெரொபெயாம் தன் தீயவழிகளை மாற்றிக்கொள்ளவில்லை. இன்னும் ஒருமுறை எல்லாவித மனிதர்களிலுமிருந்து வழிபாட்டு மேடைகளுக்குப் பூசாரிகளை நியமித்தான். பூசாரியாக வரவிரும்பும் எவனையும், வழிபாட்டு மேடைகளில் வேலைசெய்வதற்காக அர்ப்பணித்தான். 34இவையே யெரொபெயாமின் குடும்பத்தின் பாவம். அது அவர்களுடைய வீழ்ச்சிக்கும், அவர்கள் பூமியிலிருந்து முற்றிலும் அழிந்துபோகவும் காரணமாக அமைந்தது.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in