1 இராஜாக்கள் 10
10
சாலொமோனிடம் சீபாவின் அரசியின் வருகை
1சாலொமோனின் புகழைப்பற்றியும் யெகோவாவின் பெயருடன் அவனுக்கிருந்த தொடர்பைப்பற்றியும் சேபாவின் அரசி கேள்விப்பட்டபோது, அவள் கடினமான கேள்விகளால் சாலொமோனை சோதித்துப் பார்ப்பதற்காக அங்கு வந்தாள். 2அவள் தனது ஒட்டகங்களில் வாசனைப் பொருட்களையும், பெருந்தொகையான தங்கத்தையும், மாணிக்கக் கற்களையும் ஏற்றிக்கொண்டு, தனது பரிவாரங்களுடன் எருசலேமுக்கு வந்தாள். அவள் சாலொமோனிடம் வந்து, தனது மனதில் இருந்த எல்லா விஷயங்களைப் பற்றியும் அவனுடன் பேசினாள். 3சாலொமோன் அவளுடைய எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொன்னான். அரசன் அவளுக்கு விளக்கிச் சொல்ல முடியாத பதில் ஒன்றும் இருக்கவில்லை. 4சேபாவின் அரசி சாலொமோனுடைய எல்லா ஞானத்தையும், அவன் கட்டியிருந்த அரண்மனையையும், 5அவனுடைய மேஜையிலிருந்த உணவையும், அவன் அலுவலர்களையும், தங்கள் உடைகளில் காணப்பட்ட பணியாளர்களையும், அவனுக்குத் திராட்சை இரசம் பரிமாறுகிறவர்களையும், அவன் யெகோவாவின் ஆலயத்தில் செலுத்திய தகன காணிக்கைகளையும் கண்டபோது, அவள் ஆச்சரியத்தில் மூழ்கினாள்.
6அப்பொழுது சேபாவின் அரசி அரசனிடம், “உமது சாதனைகளையும், உமது ஞானத்தையும் பற்றி நான் எனது நாட்டில் கேள்விப்பட்ட செய்தி உண்மையானது. 7ஆனால் நான் வந்து என் சொந்தக் கண்களால் பார்க்கும்வரை இவற்றை நம்பவேயில்லை. உண்மையில் இவற்றில் பாதியேனும் எனக்குச் சொல்லப்படவில்லை. நான் கேள்விப்பட்டதைப் பார்க்கிலும், ஞானமும் செல்வமும் பலமடங்கு உம்மிடம் அதிகமாயிருக்கிறது. 8உமது மக்கள் எவ்வளவு சந்தோஷமுடையவர்களாய் இருக்கவேண்டும். எப்பொழுதும் உமது முன்நின்று உமது ஞானத்தைக் கேட்கும் உமது அதிகாரிகள் எவ்வளவு மகிழ்ச்சியுடையவர்களாய் இருக்கவேண்டும். 9உம்மில் பிரியங்கொண்டு, உம்மை இஸ்ரயேலின் அரியணையில் அமர்த்தி, தமக்காக உம்மை அரசனாக்கிய உம்முடைய இறைவனாகிய யெகோவா துதிக்கப்படுவாராக. இஸ்ரயேல் மக்களை நிலைநிறுத்த உமது இறைவன் அவர்கள்மேல் கொண்டுள்ள நித்திய அன்பினால், நீர் அவர்களுக்கு நீதியையும் நியாயத்தையும் காத்து நடத்தும்படி அவர்களின்மேல் உம்மை அரசனாக்கியிருக்கிறார்” என்று சொன்னாள்.
10அத்துடன் அவள் அரசனுக்கு நூற்றிருபது தாலந்து#10:10 அதாவது, சுமார் 4,080 கிலோகிராம் தங்கத்தையும், பெருந்தொகையான வாசனைப் பொருட்களையும் விலைமதிப்புள்ள மாணிக்கக் கற்களையும் கொடுத்தாள். சேபாவின் அரசி சாலொமோன் அரசனுக்குக் கொடுத்த அவ்வளவு வாசனைப் பொருட்கள் அதன்பின் மறுபடியும் ஒருபோதும் அங்கு கொண்டுவரப்படவில்லை.
11ஈராமின் கப்பல்கள் ஓப்பீரிலிருந்து தங்கத்தைக் கொண்டுவந்தன. அங்கிருந்து அவை அல்மக்#10:11 அல்மக் என்றால் இனிய மணம் அல்லது சந்தன மரம் மரங்களையும், விலைமதிப்புள்ள மாணிக்கக் கற்களையும், பெருமளவாகக் கொண்டுவந்தன. 12அரசன் இந்த அல்மக் மரங்களை யெகோவாவின் ஆலயத்துக்கும், அரச அரண்மனைக்கும் வேண்டிய ஆதாரங்களைச் செய்வதற்கும், இசைக் கலைஞர்களுக்கான யாழ்களையும், வீணைகளையும் செய்வதற்கும் பயன்படுத்தினான். இவ்வளவு தொகையான அல்மக் மரங்கள் அன்றிலிருந்து இன்றுவரை இறக்குமதி செய்யப்படவோ, காணப்படவோ இல்லை.
13சாலொமோன் அரசன் தன் அரச களஞ்சியத்தின் நிறைவிலிருந்து சேபாவின் அரசிக்குக் கொடுத்ததைவிட, ஆசைப்பட்டுக் கேட்ட எல்லாவற்றையும் கொடுத்தான். அதன்பின் அவள் புறப்பட்டு தன் பரிவாரங்களோடு தன் சொந்த நாட்டுக்குத் திரும்பிப் போனாள்.
சாலொமோனின் சிறப்பு
14ஒவ்வொரு வருடமும் சாலொமோன் பெற்ற தங்கத்தின் எடை அறுநூற்று அறுபத்தாறு தாலந்துகள்#10:14 அதாவது, சுமார் 23,000 கிலோகிராம் இருந்தன. 15இத்துடன் வியாபாரிகளும் வர்த்தகர்களும், எல்லா அரபு நாட்டு அரசர்களும், உள்நாட்டின் ஆளுநர்களும் தங்கம் கொண்டுவந்தார்கள்.
16சாலொமோன் அரசன் அடித்த தங்கத்தகட்டால் இருநூறு பெரிய கேடயங்களைச் செய்தான். ஒவ்வொரு கேடயத்திற்கும் அறுநூறு சேக்கல்#10:16 ஒவ்வொரு கேடயத்திற்கும் சுமார் 7 கிலோகிராம் தங்கம் எடையுள்ள அடிக்கப்பட்ட தங்கம் செலவு செய்யப்பட்டது. 17அத்துடன் அவன் அடித்த தங்கத்தால் முந்நூறு சிறிய கேடயங்களையும் செய்தான். ஒவ்வொரு கேடயத்திற்கும் மூன்று மினா#10:17 அதாவது, சுமார் 2 கிலோகிராம் தங்கம். தங்கம் பயன்படுத்தப்பட்டது. அரசன் அவைகளை லெபனோன் வனம் என்ற அரண்மனையில் வைத்தான்.
18அதன்பின் அரசன் ஒரு பெரிய அரியணையைச் செய்து யானைத் தந்தத்தினால் அலங்கரித்தான். பின்பு அதைத் தரமான தங்கத்தகட்டால் மூடினான். 19அந்த அரியணைக்கு ஆறு படிகள் இருந்தன. அதன்பின் பக்கத்தில் வட்ட வடிவமான உச்சி இருந்தது. அரியணையின் இரு பக்கங்களிலும் கைத்தாங்கிகள் இருந்தன. அவற்றின் இருபுறங்களிலும் ஒவ்வொரு சிங்கத்தின் உருவம் இருந்தது. 20ஒவ்வொரு படியின் முனையிலும் இரு சிங்கங்களாக ஆறுபடிகளிலும் பன்னிரண்டு சிங்க உருவங்கள் நின்றன. வேறு எந்த அரசாட்சியிலும் இப்படியான ஒரு அரியணை எக்காலத்திலும் செய்யப்பட்டிருக்கவில்லை. 21சாலொமோன் அரசனின் பானபாத்திரங்கள் யாவும் தங்கத்தினாலேயே செய்யப்பட்டிருந்தன. லெபனோன் வனமாளிகை மண்டபத்திலிருந்த வீட்டு உபயோகப் பொருட்கள் எல்லாம் சுத்தத் தங்கத்தினால் செய்யப்பட்டிருந்தன. வெள்ளியினால் ஒன்றும் செய்யப்படவில்லை. ஏனெனில் சாலொமோனின் நாட்களில் வெள்ளி குறைந்த மதிப்புடையதாகவே கருதப்பட்டது. 22அரசனுக்கு கடலில் ஈராமின் கப்பல்களுடன் தர்ஷீசின்#10:22 எபிரெயத்தில் வியாபாரக் கப்பல்கள் எனப்படும் கப்பல்களும் இருந்தது. மூன்று வருடங்களுக்கு ஒருமுறை கப்பல்கள் போய்த் திரும்பி வரும்போது தங்கம், வெள்ளி, யானைத்தந்தம், குரங்குகள், மயில்கள் போன்றவற்றை ஏற்றிக்கொண்டு வந்தன.
23பூமியிலுள்ள மற்ற அரசர்களைவிட அரசன் சாலொமோன் செல்வத்திலும் ஞானத்திலும் மேம்பட்டவனாய் இருந்தான். 24முழு உலகத்தாரும் சாலொமோனின் இருதயத்தில் இறைவன் கொடுத்த ஞானத்தைக் கேட்பதற்கு அவனை நாடி வந்தார்கள். 25வருடந்தோறும் அவனிடம் வந்த ஒவ்வொருவரும் அன்பளிப்பைக் கொண்டுவந்தார்கள். அவர்கள் வெள்ளிப் பாத்திரங்கள், தங்கப் பாத்திரங்கள், ஆடைகள், ஆயுதங்கள், வாசனைப் பொருட்கள், குதிரைகள், கோவேறு கழுதைகள் ஆகியவற்றைக் கொண்டுவந்தார்கள்.
26சாலொமோன் தேர்களையும், குதிரைகளையும் திரளாய் சேர்த்தான். அவனிடம் ஆயிரத்து நானூறு தேர்களும், பன்னிரண்டாயிரம் குதிரைகளும் இருந்தன. அவன் தேர்களை அவற்றிற்குரிய பட்டணங்களிலும், அரசனாகிய தன்னிடத்தில் எருசலேமிலும் வைத்திருந்தான். 27அரசன் எருசலேமில் வெள்ளியைக் கற்களைப்போல் சாதாரணமாகவும், கேதுரு மரங்களை மலையடிவாரத்திலுள்ள காட்டத்தி மரங்களைப்போல ஏராளமாகவும் கிடைக்கும்படி செய்தான். 28சாலொமோனுடைய குதிரைகள் எகிப்திலிருந்தும், சிலிசியாவிலிருந்தும் கொண்டுவரப்பட்டன. அரச வர்த்தகர்கள் அவற்றை அப்போதிருந்த விலைக்கு சிலிசியாவிலிருந்தே வாங்கினார்கள். 29எகிப்திலிருந்து ஒரு தேரை அறுநூறு சேக்கல் வெள்ளிக்கும், ஒரு குதிரையை நூற்றைம்பது சேக்கல் வெள்ளிக்கும் இறக்குமதி செய்தனர். அத்துடன் அவற்றை அவர்கள் ஏத்திய அரசர்களுக்கும், சீரிய அரசர்களுக்கும் ஏற்றுமதி செய்தனர்.
Currently Selected:
1 இராஜாக்கள் 10: TCV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.