YouVersion Logo
Search Icon

1 யோவான் 4

4
ஆவிகளைப் பகுத்தறிதல்
1அன்பான நண்பரே, நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் இறைவனிடம் இருந்துதான் வந்தனவா என்று அவர்களைச் சோதித்துப் பாருங்கள். ஏனெனில் பல பொய் தீர்க்கதரிசிகள் உலகமெங்கும் பரவியிருக்கிறார்கள். 2இறைவனுடைய ஆவியை நீங்கள் இவ்விதமாக அறிந்துகொள்ள முடியும்: இயேசுகிறிஸ்து மாம்சத்தில் வந்தார் என்று ஏற்றுக்கொள்கிற எந்த ஆவியும் இறைவனிடமிருந்தே வந்திருக்கிறது. 3மாம்சத்தில் வந்த இயேசுவை ஏற்றுக்கொள்ளாத எந்த ஆவியும் இறைவனிடமிருந்து வரவில்லை. இதுவே கிறிஸ்து விரோதியின் ஆவி; இந்த ஆவி வரும் என்று நீங்கள் கேள்விப்பட்டீர்கள். அது இப்பொழுதே உலகத்தில் வந்திருக்கிறது.
4அன்பான பிள்ளைகளே, இறைவனுக்குரிய நீங்கள் அந்த பொய் தீர்க்கதரிசிகளை ஜெயித்தீர்கள். ஏனெனில் உலகத்தில் இருக்கிறவனைவிட உங்களில் இருக்கிறவர் மிகப்பெரியவராய் இருக்கிறார். 5இந்தப் பொய் தீர்க்கதரிசிகள் உலகத்திற்குரியவர்கள். ஆகவே, அவர்கள் உலக நோக்கத்தின்படியே பேசுகிறார்கள். உலகமும் அவர்களுக்கு செவிகொடுக்கிறது. 6நாம் இறைவனுக்குரியவர்கள். இறைவனை அறிந்தவர்கள் யாரோ அவர்கள் நாம் சொல்வதைச் செவிகொடுத்துக் கேட்கிறார்கள்; இறைவனிடமிருந்து வராதவர்கள் நாம் சொல்வதைக் கேட்கமாட்டார்கள். இவ்விதமே, சத்திய ஆவியானவரைப் பெற்றிருக்கிறவர்கள் யார் என்றும் ஏமாற்றும் ஆவியைப் பெற்றிருக்கிறவர்கள் யார் என்றும், நாம் அறிந்துகொள்கிறோம்.
இறைவனின் அன்பு
7அன்பான நண்பரே, நாம் ஒருவரிலொருவர் அன்பாயிருப்போமாக. ஏனெனில், அன்பு இறைவனிடமிருந்து வருகிறது. அன்பாயிருக்கிற ஒவ்வொருவரும் இறைவனால் பிறந்திருக்கிறார்கள், அவர்கள் இறைவனை அறிந்திருக்கிறார்கள். 8அன்பாயிருக்காதவர்கள், இறைவனை அறியாதிருக்கிறார்கள். ஏனெனில், இறைவன் அன்பாகவே இருக்கிறார். 9இறைவன் நம்மில் வைத்திருக்கும் அன்பினால், நாம் அவர்மூலம் வாழ்வடையும்படி, அவர் தமது ஒரே பேறான மகனை இந்த உலகத்திற்கு அனுப்பினார். இவ்விதமாய், அவர் தனது அன்பைக் காட்டினார். 10இதுவே அன்பு: நாம் இறைவனிடம் அன்பாயிருக்கவில்லை. ஆனால் அவர் நம்மில் அன்புகாட்டி, நம்முடைய பாவங்களுக்கான நிவாரண பலியாகத் தமது மகனை அனுப்பினார். 11அன்பான நண்பரே, இறைவன் நம்மேல் இவ்வளவு அன்பாயிருந்தபடியால், நாமும் ஒருவரில் ஒருவர் அன்பாயிருக்கவேண்டும். 12ஒருவனும் இறைவனை ஒருபோதும் கண்டதில்லை: ஆனால் நாம், ஒருவரில் ஒருவர் அன்பாயிருந்தால், இறைவன் நம்மில் குடிகொண்டிருக்கிறார். அவருடைய அன்பும் நம்மில் முழுநிறைவாகிறது.
13இறைவன் தமது ஆவியானவரை நமக்குக் கொடுத்திருக்கிறதினால், நாம் இறைவனில் வாழுகிறோம் என்றும், அவர் நம்மில் வாழுகிறார் என்றும்: நாம் அறிகிறோம். 14பிதா, தமது மகனை உலகத்தின் இரட்சகராக அனுப்பினார் என்பதை நாம் கண்டிருக்கிறோம்; அதற்கு நாங்கள் சாட்சியாகவும் இருக்கிறோம். 15யாராவது இயேசுவை இறைவனுடைய மகன் என்று ஏற்றுக்கொண்டால், இறைவன் அவனில் வாழ்கிறார்; அவனும் இறைவனில் வாழ்கின்றான். 16இவ்வாறு இறைவன் நம்மேல் வைத்திருக்கும் அன்பை, நாம் அறிந்தும் இருக்கிறோம். அதை நாம் நம்பியும் இருக்கிறோம்.
இறைவன் அன்பாகவே இருக்கிறார். அன்பில் வாழ்கிறவன், இறைவனில் வாழ்கிறான், இறைவனும் அவனில் வாழ்கிறார். 17இவ்விதமாய், அன்பு நமக்குள் முழுநிறைவாய் வளர்கிறது. இதனால், நாம் நியாயத்தீர்ப்பு நாளில் மனவுறுதியுடையவர்களாய் இருப்போம். ஏனெனில், இந்த உலகத்தில் நாம் இயேசுவைப் போலவே இருக்கிறோம். 18இப்படிப்பட்ட அன்பு இருக்கையில் பயத்திற்கு இடமில்லை. ஏனெனில், முழுநிறைவான அன்பு பயத்தை விரட்டிவிடும். ஆனால், பயம் தண்டனைத் தீர்ப்புடன் சம்பந்தப்படுகிறது. எனவே பயப்படுகிறவன் அன்பில் முழுநிறைவு பெற்றவனல்ல என்று காட்டுகிறது.
19முதலில், அவர் நம்மில் அன்பாய் இருந்ததினாலேயே, நாமும் அவரில் அன்பாயிருக்கிறோம். 20“நான் இறைவனில் அன்பாயிருக்கிறேன்” என்று சொல்லுகிற யாராவது தனது சகோதரனை வெறுத்தால், அவன் ஒரு பொய்யன். ஏனெனில், தான் காண்கின்ற தன் சகோதரனில் அன்பாயிராத ஒருவனால், தான் காணாத இறைவனில் அன்பாயிருக்க முடியாது. 21இதனாலேயே, இறைவனிடத்தில் அன்பாயிருக்கிறவன் யாரோ அவன் தன் சகோதரனிடத்திலும் சகோதரியிடத்திலும் அன்பாயிருக்கவேண்டும் என்கிற கட்டளையை இறைவன் நமக்குக் கொடுத்திருக்கிறார்.

Currently Selected:

1 யோவான் 4: TCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in