1 கொரிந்தியர் 16
16
விசுவாசிகளுக்கான காணிக்கை சேகரிப்பு
1இறைவனுடைய மக்களுக்காகக் காணிக்கை சேகரிப்பதைக் குறித்து நான் சொல்கிறதாவது: கலாத்தியாவிலுள்ள திருச்சபைகளுக்கு செய்யவேண்டும் என்று நான் சொன்னதை நீங்களும் செய்யுங்கள். 2ஒவ்வொரு வாரத்தின் முதல் நாளில் நீங்கள் ஒவ்வொருவரும், அவரவருடைய வருமானத்துக்கு ஏற்றபடி, ஒரு குறிப்பிட்ட தொகைப் பணத்தை சேர்த்து வைத்துக்கொள்ளும்படி. அதை சேமித்து வையுங்கள். அப்படிச் செய்தால், நான் வரும்போது பணம் சேகரிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. 3நான் அங்கு வரும்போது, நீங்கள் அங்கீகரிக்கும் மனிதருக்கு அறிமுகக் கடிதங்களைக் கொடுத்து, உங்களது நன்கொடையுடன் அவர்களை எருசலேமுக்கு அனுப்புவேன். 4நான் போவது நல்லது என்று காணப்பட்டால், அவர்களும் என்னோடு வரலாம்.
தனிப்பட்ட வேண்டுகோள்
5எனவே, நான் மக்கெதோனியா நாட்டின் வழியாகப்போக இருக்கிறேன். மக்கெதோனியாவின் வழியாக நான் போனபின், நான் உங்களிடம் வருவேன். 6சிறிதுகாலம் நான் உங்களுடன் தங்குவேன். ஒருவேளை குளிர்க்காலத்தை நான் உங்களுடனேயே கழிக்கலாம். இதனால், நான் எங்குபோக வேண்டியிருந்தாலும் எனது பயணத்தில் நீங்கள் உதவிசெய்யலாம். 7இப்பொழுது உங்களைப் பார்த்துப்போக எனக்கு விருப்பமில்லை. ஏனெனில், உங்களோடு செலவிட எனக்கு நாட்கள் போதாது. கர்த்தர் அனுமதிப்பாரென்றால், கொஞ்சக்காலம் உங்களுடன் கழிக்க வேண்டுமென்றே நான் விரும்புகிறேன். 8ஆனால், பெந்தெகொஸ்தே பண்டிகை வரைக்கும் நான் எபேசுவிலேயே தங்கியிருப்பேன். 9ஏனெனில், ஒரு பயனுள்ள பணிக்கான ஒரு பெரியவாசல் எனக்காகத் திறந்திருக்கிறது. ஆனால், என்னை எதிர்க்கிற அநேகர் அங்கிருக்கிறார்கள்.
10தீமோத்தேயு உங்களிடத்தில் வந்தால், அவன் உங்களுடன் இருக்கையில் பயமின்றி வசதியாய் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில், நான் செய்கிறதுபோலவே அவனும் கர்த்தருடைய ஊழியத்தைச் செய்கிறானே. 11ஆகவே, ஒருவனும் அவனை ஏற்றுக்கொள்ள மறுக்கக்கூடாது. அவன் என்னிடம் திரும்பிவரும்படி, அவனைச் சமாதானத்துடன் வழியனுப்பி வையுங்கள். மற்றச் சகோதரருடன், அவனையும் நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
12நம்முடைய சகோதரனான அப்பொல்லோவைக் குறித்து நான் சொல்கிறதாவது: மற்றச் சகோதரரோடு அவனும் உங்களிடத்திற்கு வர, அவனை நான் அதிகமாய் ஊக்குவித்தேன். ஆனால் இப்பொழுதோ, உங்களிடத்தில் வர அவனுக்கு விருப்பமில்லை. ஆனால், தக்க வாய்ப்பு கிடைக்கும்போது அவன் உங்களிடத்தில் வருவான்.
13கவனமாயிருங்கள். உங்கள் விசுவாசத்தில் உறுதியாய் நில்லுங்கள். துணிவுள்ள மனிதராய் இருங்கள்; பலமுள்ளவர்களாய் செயல்படுங்கள். 14நீங்கள் செய்வதை எல்லாம் அன்பிலேயே செய்யுங்கள்.
15ஸ்தேவானுடைய குடும்பத்தினரே அகாயா நாட்டில் முதல் முதலாய் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள். பரிசுத்தவான்களுக்குப் பணிசெய்வதற்கென அவர்கள் தங்களையே ஒப்புவித்திருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். பிரியமானவர்களே, இப்பொழுதும் நான் உங்களை வேண்டிக்கொள்கிறதாவது: 16இப்படிப்பட்டவர்களுக்கு மதிப்புக்கொடுத்து நடவுங்கள். கர்த்தருடைய ஊழியத்தில் அவர்களுடன் இணைந்து பிரயாசப்படுகிற ஒவ்வொருவருக்கும் மதிப்புக்கொடுத்து நடவுங்கள். 17ஸ்தேவானும், பொர்த்துனாத்தும், அகாயுவும் இங்கு வந்தபோது, நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஏனெனில், நீங்கள் இல்லாத குறையை அவர்கள் தீர்த்து வைத்தார்கள். 18அவர்கள் உங்களுடைய ஆவியை உற்சாகப்படுத்தியது போலவே, என்னுடைய ஆவியையும் உற்சாகப்படுத்தினார்கள். இப்படிப்பட்ட மனிதர்களை உயர்வாய் மதிக்கவேண்டும்.
இறுதி வாழ்த்துதல்
19ஆசியா பகுதியிலுள்ள திருச்சபைகளும், உங்களுக்கும் வாழ்த்துதல்களைத் தெரிவிக்கிறார்கள்.
ஆக்கில்லாவும், பிரிஸ்கில்லாளும், அவர்களுடைய வீட்டில் கூடிவருகிற திருச்சபையோரும், கர்த்தருக்குள்ளான தங்கள் மனப்பூர்வமான வாழ்த்துதல்களைத் தெரிவிக்கிறார்கள்.
20இங்குள்ள எல்லாச் சகோதரரும் உங்களுக்கு வாழ்த்துதல்களைத் தெரிவிக்கிறார்கள்.
ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள்.
21பவுலாகிய நான், இந்த வாழ்த்துதலை என் சொந்தக் கையினாலேயே எழுதுகிறேன்.
22யாராவது கர்த்தரில் அன்பாயிருக்காவிட்டால், அவன் சபிக்கப்பட்டவன். கர்த்தாவே வாரும்!
23நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் கிருபை உங்களுடன் இருப்பதாக.
24கிறிஸ்து இயேசுவில் இருக்கும் உங்கள் எல்லோருக்கும் என்னுடைய அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆமென்.
Currently Selected:
1 கொரிந்தியர் 16: TCV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.