YouVersion Logo
Search Icon

யோபு 39

39
அத்தியாயம் 39
1“வரையாடுகள் பிறக்கும் காலத்தை அறிவாயோ?
மான்கள் குட்டிபோடுகிறதைக் கவனித்தாயோ?
2அவைகள் சினைப்பட்டிருந்து வருகிற மாதங்களை நீ எண்ணி,
அவைகள் பிறக்கும் காலத்தை அறிவாயோ?
3அவைகள் வேதனையுடன் குனிந்து தங்கள் குட்டிகளைப் பெற்று,
தங்கள் வேதனைகளை நீக்கிவிடும்.
4அவைகளின் குட்டிகள் பலத்து, வனத்திலே வளர்ந்து,
அவைகளிடத்தில் திரும்ப வராமல் போய்விடும்.
5காட்டுக்கழுதையைத் தன் விருப்பத்திற்கு சுற்றித்திரிய வைத்தவர் யார்?
அந்தக் காட்டுக்கழுதையின் கட்டுகளை அவிழ்த்தவர் யார்?
6அதற்கு நான் வனாந்திரத்தை வீடாகவும்,
உவர்நிலத்தை தங்கும் இடமாகவும் கொடுத்தேன்.
7அது பட்டணத்தின் இரைச்சலை அலட்சியம்செய்து,
ஓட்டுகிறவனுடைய சத்தத்தை மதிக்கிறதில்லை.
8அது மலைகளிலே தன் மேய்ச்சலைக் கண்டுபிடித்து,
எல்லாவிதப் பச்சைத் தாவரங்களையும் தேடித்திரியும்.
9காண்டாமிருகம் உன்னிடத்தில் வேலை செய்ய சம்மதிக்குமோ?
அது உன் பண்ணையில் இரவு தங்குமோ?
10வயலில் உழ நீ காண்டாமிருகத்தைக் கயிறுபோட்டு ஏரில் பூட்டுவாயோ?
அது உனக்கு இசைந்து போரடிக்குமோ?
11அது அதிக பெலமுள்ளதென்று நீ நம்பி அதினிடத்தில் வேலை வாங்குவாயோ?
12உன் தானியத்தை அது உன்வீட்டில் கொண்டுவந்து,
உன் களஞ்சியத்தில் சேர்க்கும் என்று நீ அதை நம்புவாயோ?
13தீக்குருவிகள் தங்கள் இறக்கைகளை அடித்து ஓடுகிற ஓட்டம்,
நாரை தன் இறக்கைகளாலும் இறகுகளாலும் பறக்கிறதற்குச் சமானமல்லவோ?
14அது தன் முட்டைகளைத் தரையிலே இட்டு, அவைகளை மணலிலே அனலுறைக்க வைத்துவிட்டுப்போய்,
15காலால் மிதிபட்டு உடைந்துபோகும் என்பதையும்,
காட்டுமிருகங்கள் அவைகளை மிதித்துவிடும் என்பதையும் நினைக்கிறதில்லை.
16அது தன் குஞ்சுகள் தன்னுடையது அல்ல என்பதுபோல
அவைகளைப் பாதுகாக்காத கடினகுணமுள்ளதாயிருக்கும்;
அவைகளுக்காக அதற்குக் கவலையில்லாததினால் அது பட்ட வருத்தம் வீணாகும்.
17தேவன் அதற்குப் புத்தியைக் கொடுக்காமல்,
ஞானத்தை விலக்கிவைத்தார்.
18அது இறக்கை விரித்து எழும்பும்போது,
குதிரையையும் அதின்மேல் ஏறியிருக்கிறவனையும் அலட்சியம் செய்யும்.
19குதிரைக்கு நீ வீரியத்தைக் கொடுத்தாயோ?
அதின் தொண்டையில் குமுறலை வைத்தாயோ?
20ஒரு வெட்டுக்கிளியை மிரட்டுகிறதுபோல அதை மிரட்டுவாயோ?
அதினுடைய மூக்கின் கனைப்பு பயங்கரமாயிருக்கிறது.
21அது தரையிலே உதைத்து,
தன் பலத்தில் மகிழ்ந்து, ஆயுதங்களை அணிந்தவருக்கு எதிராகப் புறப்படும்.
22அது கலங்காமலும், பட்டயத்திற்குப் பின்வாங்காமலுமிருந்து,
பயப்படுதலை புறக்கணிக்கும்.
23அம்புகள் வைக்கும் பையும், மின்னுகிற ஈட்டியும், கேடகமும் அதின்மேல் கலகலக்கும்போது,
24கர்வமும் மூர்க்கமும்கொண்டு தரையை விழுங்கிவிடுகிறதுபோல நினைத்து,
எக்காளத்தின் சத்தத்திற்கு பயப்படாமல் பாயும்.
25எக்காளம் தொனிக்கும்போது அது நிகியென்று கனைக்கும்;
யுத்தத்தையும், படைத்தலைவரின் ஆர்ப்பரிப்பையும்,
சேனைகளின் ஆரவாரத்தையும் தூரத்திலிருந்து மோப்பம்பிடிக்கும்.
26உன் புத்தியினாலே ராஜாளி பறந்து,
தெற்கு திசைக்கு நேராகத் தன் இறக்கைகளை விரிக்கிறதோ?
27உன் கற்பனையினாலே கழுகு உயரப் பறந்து,
உயரத்திலே தன் கூட்டைக் கட்டுமோ?
28அது கன்மலையிலும், கன்மலையின் உச்சியிலும்,
பாதுகாப்பான இடத்திலும் தங்கியிருக்கும்.
29அங்கேயிருந்து இரையை நோக்கும்;
அதின் கண்கள் தூரத்திலிருந்து அதைப் பார்க்கும்.
30அதின் குஞ்சுகள் இரத்தத்தை உறிஞ்சும்;
பிணம் எங்கேயோ அங்கே கழுகு சேரும்” என்றார்.

Currently Selected:

யோபு 39: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in