YouVersion Logo
Search Icon

எரே 33

33
அத்தியாயம் 33
மீட்கப்படுவதற்கான வாக்குத்தத்தம்
1எரேமியா இன்னும் காவல்நிலையத்தின் முற்றத்தில் அடைக்கப்பட்டிருக்கும்போது, யெகோவாவுடைய வார்த்தை இரண்டாம்முறை அவனுக்கு உண்டாகி, அவர்: 2இதைச் செய்கிற கர்த்தருமாய், இதை உறுதிப்படுத்த இதை உண்டாக்குகிற கர்த்தருமாயிருக்கிற யேகோவா என்னும் பெயருள்ளவர் சொல்லுகிறது என்னவென்றால்: 3என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு பதில் கொடுத்து, நீ அறியாததும் உனக்கு புரியாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன். 4கோட்டை மதில்களினாலும் பட்டயத்தாலும் இடிக்கப்பட்டவைகளாகிய இந்த நகரத்தின் வீடுகளையும், யூதா ராஜாக்களின் வீடுகளையும் குறித்து: 5இந்த நகரத்தின் எல்லாப் பொல்லாப்பின் காரணமாக நான் என் முகத்தை மறைத்ததினால் என் கோபத்திலும் கடுங்கோபத்திலும் வெட்டப்பட்ட மனிதச் சடலங்களினால் அவைகளை நான் நிறைப்பதற்காகவே, அவர்கள் கல்தேயருடன் போர் செய்யப்போகிறார்கள். 6இதோ, நான் அவர்களுக்குச் சவுக்கியமும் ஆரோக்கியமும் வரச்செய்து, அவர்களைக் குணமாக்கி, அவர்களுக்குப் பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன். 7நான் யூதாவின் சிறையிருப்பையும், இஸ்ரவேலின் சிறையிருப்பையும் திருப்பி, முன்னிருந்ததுபோல அவர்களைக் கட்டுவித்து, 8அவர்கள் எனக்கு விரோதமாகக் குற்றம் செய்த அவர்களுடைய எல்லா அக்கிரமங்களுக்கும் அவர்களை விலக்கிச் சுத்தப்படுத்தி, அவர்கள் எனக்கு விரோதமாகக் குற்றம் செய்து, எனக்கு விரோதமாகத் துரோகம் செய்த அவர்களுடைய எல்லா அக்கிரமங்களையும் மன்னிப்பேன். 9நான் அவர்களுக்குச் செய்யும் நன்மைகளையெல்லாம் கேட்கப்போகிற பூமியின் எல்லா தேசங்களுக்கு முன்பாக அது எனக்கு மகிழ்ச்சியுள்ள புகழ்ச்சியாகவும் மகிமையாகவும் இருக்கும்; நான் அவர்களுக்கு அருளும் எல்லா நன்மைக்காகவும், எல்லாச் சமாதானத்திற்காகவும் இவர்கள் பயந்து நடுங்குவார்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார். 10மனிதனில்லாமலும் மிருகமில்லாமலும் வெட்டவெளியாய்க் கிடக்கிறதென்று, நீங்கள் சொல்லுகிற இவ்விடத்திலும், யூதாவின் பட்டணங்களிலும் மனிதனாவது மிருகமாவது இல்லாமல் அழிக்கப்பட்ட எருசலேமின் வீதிகளிலும், 11இன்னும் கொண்டாட்டத்தின் சத்தமும், மகிழ்ச்சியின் சத்தமும், மணமகனின் சத்தமும், மணமகளின் சத்தமும்: சேனைகளின் யெகோவாவை துதியுங்கள், யெகோவா நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளதென்று சொல்லுகிறவர்களின் சத்தமும், யெகோவாவுடைய ஆலயத்திற்கு நன்றி பலிகளைக் கொண்டுவருகிறவர்களின் சத்தமும் கேட்கப்படும் என்று யெகோவா சொல்லுகிறார்; அவர்கள் முன்னிருந்தது போல இருப்பதற்கு தேசத்தின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று யெகோவா சொல்லுகிறார். 12மனிதனும் மிருகமும் இல்லாமல் வெட்டவெளியாக கிடக்கிற இவ்விடத்திலும், இதை சுற்றியுள்ள பட்டணங்களிலும், ஆட்டுமந்தையை மேய்த்துத் திருப்புகிற இடங்கள் உண்டாயிருக்கும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். 13மலைத்தேசமான பட்டணங்களிலும், பள்ளத்தாக்குகளான பட்டணங்களிலும், தென்திசைப் பட்டணங்களிலும் பென்யமீன் நாட்டிலும், எருசலேமின் சுற்றுப்புறங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், ஆட்டுமந்தைகள் தங்களை எண்ணுகிறவனுடைய கைக்குள்ளாக நடந்துவரும் என்று யெகோவா சொல்லுகிறார். 14இதோ, நாட்கள் வருமென்று யெகோவா சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலின் மக்களுக்கும், யூதாவின் மக்களுக்கும் சொன்ன நல்வார்த்தையை நிறைவேற்றுவேன். 15அந்நாட்களிலும், அக்காலத்திலும் தாவீதிற்கு நீதியின் கிளையை முளைக்கச்செய்வேன்; அவர் பூமியில் நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார். 16அந்நாட்களில் யூதா காப்பாற்றப்பட்டு, எருசலேம் சுகமாகத் தங்கும்; அவர் எங்கள் நீதியாயிருக்கிற யெகோவா என்பது அவருடைய பெயர். 17இஸ்ரவேல் வம்சத்தின் சிங்காசனத்தின்மேல் உட்காரத் தகுதியான மனிதன் தாவீதிற்கு இல்லாமற்போவதில்லை. 18தகனபலியிட்டு, உணவுபலி செலுத்தி, அனுதினமும் பலியிடும் மனிதன் எனக்கு முன்பாக ஆசாரியருக்கும் லேவியருக்கும் இல்லாமற்போவதுமில்லை என்று யெகோவா சொல்லுகிறார் என்றார். 19பின்னும் எரேமியாவுக்குக் யெகோவாவுடைய வார்த்தை உண்டாகி, அவர்: 20குறித்த நேரங்களில் பகல்நேரமும் இரவுநேரமும் உண்டாகாமலிருக்க, நீங்கள் பகல் நேரத்தைக்குறித்து நான் செய்த உடன்படிக்கையையும், இரவு நேரத்தைக்குறித்து நான் செய்த உடன்படிக்கையையும் பொய்யாக்கினால், 21அப்பொழுது என் தாசனாகிய தாவீதுடன் நான் செய்த உடன்படிக்கையும், அவன் சிங்காசனத்தில் அரசாளும் மகன் அவனுக்கு இல்லாமற்போவதால் அவமாகும்; என் ஊழியக்காரராகிய லேவியருடனும் ஆசாரியருடனும் நான் செய்த உடன்படிக்கையும் அப்பொழுது அவமாகும். 22வானத்து நட்சத்திரங்கள் எண்ணப்படாததும் கடற்கரை மணல் அளக்கப்படாததுமாக இருக்கிறதுபோல, நான் என் தாசனாகிய தாவீதின் சந்ததியையும் எனக்கு ஊழியம் செய்கிற லேவியரையும் பெருகச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றார். 23பின்னும் எரேமியாவுக்குக் யெகோவாவுடைய வார்த்தை உண்டாகி, அவர்: 24யெகோவா தெரிந்துகொண்ட இரண்டு வம்சங்களையும் வெறுத்துப்போட்டாரென்று இந்த மக்கள் சொல்லி, தங்களுக்கு முன்பாக என் மக்கள் இனி ஒரு தேசமல்லவென்று அதை இழிவுபடுத்துகிறார்கள் என்பதை நீ காண்கிறதில்லையோ? 25வானத்திற்கும் பூமிக்கும் குறித்திருக்கிற நியமங்களை நான் காக்காமல், பகல் நேரத்தையும் இரவு நேரத்தையும் குறித்து நான் செய்த உடன்படிக்கை அழிந்துபோகிறது என்றால், 26அப்பொழுது நான் யாக்கோபின் சந்ததியையும், என் தாசனாகிய தாவீதின் சந்ததியையும் தள்ளி, நான் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களின் சந்ததியை ஆளத்தகுதியானவர்களை அதிலிருந்து எடுக்காமல் வெறுத்துவிடுவேன்; அவர்களுடைய சிறையிருப்பை நான் திருப்பி, அவர்களுக்கு இரங்குவேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றார்.

Currently Selected:

எரே 33: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in